Friday, December 2, 2016

தெய்வமே துணை!

தர்பார் மண்டபத்துக்குள் அடி எடுத்து வைத்தான் யுதிஷ்டிரன். அந்த தர்பார் மண்டபத்தில் அவன் யுவராஜாவாக இருந்தபோது நிகழ்ந்த சில சந்தோஷமான நிகழ்வுகள், சம்பவங்கள் அவன் மனக்கண்கள் முன்னே தோன்றின. முதன் முதலில் அவனும் அவன் சகோதரர்களும் இந்த தர்பார் மண்டபத்தினுள் நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தான். பல வருடங்கள் முன்னர் அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது அவன் தாய் குந்தியுடன் இங்கே வந்ததையும் அவனையும் அவன் சகோதரர்களையும் பாண்டுவின் புத்திரர்களாக இந்தக் குருவம்சத்தினர் அங்கீகரித்த அந்த நாளும் அவன் நினைவில் வந்தது. அந்த நாட்கள்! எவ்வளவு சந்தோஷமானவை! மறக்கவும் முடியாத நாட்கள் அவை! அதன் பின்னரே அவன் வாலிபப்பருவம் எய்தியதும் இதே தர்பார் மண்டபத்தில் தான் யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்விக்கப்பட்டான் அதை ஒட்டி இந்த ஹஸ்தினாபுரத்தின் அநேக நிகழ்ச்சிகளிலும், கொண்டாட்டங்களிலும் ஓர் யுவராஜாவாக அவன் பங்கேற்றிருக்கிறான். அதன் பின்னர் தான் அவன் இந்தக் குரு வம்சத்தினரின் அரசனாக அறிவிப்புச் செய்யப்பட்டான். பின்னர் துரியோதனனால் அவனும் அவன் சகோதரர்களும் இந்த தர்பார் மண்டபத்திலிருந்து விடைபெற்று வெளியேற்றப்பட்டார்கள்.

இவை எல்லாம் நடைபெற்ற சமயங்களில் எல்லாம் இங்கே கூட்டம் கூட்டமாகப் பொதுமக்களும் குரு வம்சத்துத் தலைவர்களும் அமர்ந்திருந்து அவனுக்குத் தக்க மரியாதைகள் செய்து தங்கள் அங்கீகாரத்தைத் தெரிவித்துக் கொண்டனர். இங்கே தான் அவன் ஆட்சி அதிகாரம் குறித்த நடவடிக்கைகள் குறித்தும் ராஜ்ய நிர்வாகம் குறித்தும் அறிந்து கொண்டான். இமயமலையிலிருந்து பெருகிப் பிரவாகம் எடுத்து ஓடும் கங்கையைப் போல் தர்மத்தின் பாதையில் அவன் செல்லவேண்டியதைக் குறித்தும் தர்மத்தைக் குறித்தும் இங்கே தான் அறிந்து கொண்டான். தர்மத்தின் ஊற்று இந்த தர்பார் மண்டபம் என்பது அவன் முடிவு! சத்தியத்தின் பேரொளி இங்கே பிரகாசித்து வருவதாகவும் எண்ணினான். அப்படிப் பட்ட தர்பார் மண்டபம் இன்று? சதியாலோசனை நடக்கும் இடமாகவும் இழிந்த செயல்களைச் செய்யும் இடமாகவும் சூழ்ச்சிகளின் பிறப்பிடமாகவும் மாறி விட்டது! இதன் ஒளி மங்கி விட்டது! தன் புனிதத்தை இந்த தர்பார் மண்டபம் இழந்து விட்டது.

இங்கே இனி தொடர்ந்து எரியப் போகும் சூழ்ச்சியாகிய அக்னியில் அவன் ஓர் பலியாடாக மாறித் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளப் போகிறான். அது தான் கடவுளின் விருப்பம் போலும்! இதன் மூலம் அவன் தன்னை மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையே மனைவி, தாய், சகோதரர்கள் உள்பட பலி கொடுக்கப் போகிறான். ஆனால் உள்ளுக்குள் அவன் மனம் அவனையும் அவனுடன் கூடச் சேர்ந்து இந்த சூதாட்டம் என்னும் துர்பிரயோக யாகத்தில் பங்கெடுப்பதைப் பாராட்டிக் கொண்டிருந்தது. ஏனெனில் அவனும் அவன்  சகோதரர்களும் இதன் மூலம் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புவதை வெளிப்படையாகச் சொல்ல முடியும்! அவர்களுக்குத் தேவையானதும் அதுவே! ஓர் மாபெரும் யுத்தம் ஏற்படுவதைத் தடுத்தாக வேண்டும். அதற்குரிய விலை அவனும் அவன் சகோதரர்கள் மற்றும் குடும்பமும் தான் என்றால் அவன் அவற்றை பலி கொடுக்கவும் தயங்கப் போவதில்லை.

அந்த மாபெரும் சபாமண்டபத்தின் நுழைவாயிலுக்கு எதிரே ஓர் பக்கத்தில் ஓர் மேடையின் மேல் ஐந்து ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. மேடையின் நடுவே போடப்பட்டிருந்த இரு சிங்காதனங்களும் ஒன்று பிதாமஹர் பீஷ்மருக்கும் இன்னொன்று மன்னன் திருதராஷ்டிரனுக்கும் ஆகும். இது கூட அவன் அரசனாகப் பிரகடனம் செய்யப்பட்டபோது செய்த ஏற்பாடு தான். அவனை விட உயர்வான ஸ்தானத்தில் திருதராஷ்டிரனையும் பிதாமஹரையும் வைத்திருந்தான் யுதிஷ்டிரன். அந்த வரிசையிலேயே ஆசனங்களையும் போடச் செய்வான். இப்போதும் அது தொடர்கிறது போலும்! அவர்களுக்கு அடுத்தபடியாகக் கொஞ்சம்கீழ் வரிசையில் போடப்பட்டிருந்த ஆசனங்கள் அனைத்தும் துரியோதனனுக்கும் அவன் குழுவினருக்குமானது ஆகும். துரியோதனனுக்குச் சமமாகப் போடப்பட்டிருந்த அந்த இன்னொரு ஆசனம் ஒருவேளை யுதிஷ்டிரனுக்காக இருக்கும். அவன் தாய் மற்ற சகோதரர்களும் அந்த ஐந்து ஆசனங்களில் அமரலாம். அல்லது திரௌபதி அமரலாம்.

இவர்களுக்கு அருகே கொஞ்சம் சின்ன ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. இருபக்கங்களிலும் காணப்பட்ட அவை ஒன்று துரோணருக்கும் இன்னொன்று கிருபருக்கும் ஆகும். எல்லா ஆசனங்களின் பின்னாலும் ஓர் சாமரம் வீசும் பெண் சிலையைப் போல் அசையாமல் நின்று கொண்டிருந்தாள். இவர்களுக்கெல்லாம் சற்றுத் தள்ளிப் பொன்னால் வேயப்பட்ட தகட்டைப் பொருத்தி மான் தோலால் மூடப்பட்டிருந்த ஆசனங்கள் கௌரவர்களின் ராஜகுருவான ஆசாரியர் சோமதத்தருக்கும் இன்னொன்று பாண்டவர்களின் ராஜகுருவான தௌமியருக்கும் ஆகும். அந்த மேடையின் வலது ஓரத்தில் மற்ற ஸ்ரோத்திரியர்கள் அமர்ந்து கொண்டு மத, சாஸ்திர ரீதியான சடங்குகளைச் செய்ய ஏதுவாகத் தயார் நிலையில் இருப்பார்கள். இவர்களை அடுத்துக் குரு வம்சத்தின் மற்றத் தலைவர்களும் அரசகுடியில் பிறந்தவர்களும் அமர்ந்திருப்பார்கள்.

எல்லாவற்றிலிருந்தும் சற்றுத் தள்ளி ஓர் சின்ன மேடை அந்த தர்பார்மண்டபத்தின் நடுவில் காணப்பட்டது. அந்த மேடையில் தந்தத்தால் ஆன சொக்கட்டான் விளையாடும் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பகடை விளையாட்டின் பாய்ச்சிக்காய்கள் அங்கே விரிக்கப்பட்டிருந்த பட்டு விரிப்பில் வீசி விரிக்கப்படும் அந்தக் காய்கள் அடங்கிய ஓர் வெள்ளிச் சொம்பும் அங்கே இருந்தது. ஏற்பாடுகள் அனைத்தையும் பார்த்த யுதிஷ்டிரனுக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது. இந்தப் பாய்ச்சிக்காய்கள் தான் அவன் செய்யப் போகும் மாபெரும் தியாகத்துக்கு ஓர் அடையாளச் சின்னமாக விளங்கப் போகின்றன. இவற்றின் மூலம் தான் அவன் அமைதியையும் சமாதானத்தையும் பெறப் போகிறன். நடக்கப் போகிற நிகழ்ச்சியைக் குறித்த நினைவுகள் அவன் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவன் தங்களுடைய பரம்பரையையே அடகு வைத்துத் தன் சகோதரர்களைக் கொள்ளை அடிக்கப் போகிறான்.  தன்னுடன் அருகே வந்து கொண்டிருந்த  பீமனை ஓர் பார்வை பார்த்தான். அவனுடைய தைரியமான சகோதரன்; அவனுக்குப் பிரியமானவன். யுதிஷ்டிரனுக்கு ஓர் பிரச்னை என்றால் அடுத்த கணமே முன்னுக்கு நிற்பவன். இப்போதும் வந்துவிட்டான்.

ஆனால் பீமனின் முகம் செக்கச்செவேர் எனச் சிவந்து கண்கள் கோபத்தில் ரத்தம் போல் காணப்பட்டன. அடுத்து அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் ஆகிய மூவரும் தலை குனிந்த வண்ணமே வந்தனர். தரையிலிருந்து அவர்கள் கண்களை மேலெடுத்துப் பார்க்கவே இல்லை. அவனிடம் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தின் காரணத்தால் தங்கள் முடிவு, உள்ளுணர்வு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவனைச் சரண் அடைந்து விட்டார்கள். உண்மையில் அவர்கள் மிகவும் மனவேதனையில் இருந்தனர். அவன் விரும்புவதெல்லாம் தன் சகோதரர்களின் மகிழ்ச்சியைத் தான்! ஆனால் இப்போதோ! ஓர் மாபெரும் புயலில் சூறாவளியில் அவர்களுடைய மகிழ்ச்சியை எல்லாம் அடித்துக் கொண்டு போகும்படி யுதிஷ்டிரனே செய்யப் போகிறான். துரதிர்ஷ்டத்தில் அவர்களை மூழ்கடிக்கப் போகிறான்.

தன் தாய் குந்தியையும், மனைவி பாஞ்சாலியையும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடன் வைத்துக் கொள்வதே யுதிஷ்டிரனுக்குத் தலையாய கடமை! ஆனால்! அவனே அவர்களைத் துன்பத்திலும் துயரிலும் தாங்கொணா சோகத்திலும் ஆழ்த்திவிட்டான்.  ஆனாலும் இதனால் எல்லாம் அவனுக்கு சங்கடங்கள் ஏதும் இல்லை. எத்தனை எத்தனை ரிஷிகள்! முனிவர்கள்! உண்மையைக் கடைப்பிடிப்பதற்காகவும் கடைப்பிடித்ததற்காகவும் இறக்கும்படி நேரிட்டிருக்கிறது! ததீசி என்னும் புராண காலத்து முனிவர் ஒருவர் தன் முதுகெலும்பையே தேவர்களுக்காகத் தியாகம் செய்திருக்கிறார். அவர் அசுரர்களை வெல்ல வஜ்ராயுதம் தயாரிக்கத் தன் முதுகெலும்பைக் கொடுத்து உதவி இருக்கிறார். இதன் மூலம் தேவர்கள் அசுரர்களை வெல்ல உதவி இருக்கிறார். ஆகவே இந்த தவம் என்னும் நெருப்பில் வேகாமல் எதையும் சாதிக்க இயலாது! அவன் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டுமெனில் இந்தச் சின்னத் தியாகம் அவசியமானதே! இது அவன் நிலைநாட்டப் போகும் அமைதிக்கு முன்னர் ஓர் சின்ன விலையே ஆகும்.

அங்கே அமர்ந்திருந்த குருவம்சத்துத் தலைவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனைக் கண்டதுமே தங்கள் கைகளைக் கூப்பியவண்ணம் அவனை நமஸ்கரித்தார்கள். ஒரு சிலர் கீழே விழுந்தும் வணங்கினார்கள். அவர்களில் சிலர் முகங்களில் மகிழ்ச்சியே இல்லாததையும் யுதிஷ்டிரன் கவனித்தான். இன்னும் சிலர் துரியோதனனின் பக்கம் ஆதரவு தெரிவிப்பவர்கள் தங்கள் மகிழ்ச்சியை உள்ளூர வைத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் இருந்தார்கள். துரியோதனன் வெல்வதற்கு அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். துரியோதனன் இந்திரப் பிரஸ்தத்தை வென்றதும் அதன் செல்வங்களையும் மற்ற பொக்கிஷங்களையும் கொள்ளை அடித்து அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள் நோக்கமெல்லாம் துரியோதனன் வெல்ல வேண்டும் என்பதில் தான்.

அங்கிருந்த சூழ்நிலையே இறுக்கமாகக் காணப்பட்டது. எங்கும் அமைதி இல்லை என்பது போல் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலை சிலருக்கு இருந்தாலும் பலரும் அங்கே நடக்கப் போவது நல்லதில்லை என்பதால் காணப்பட்ட மனக்கலக்கத்துடன் இருந்தனர். துரியோதனன், துஷ்சாசனன், ஷகுனி, கர்ணன், அஸ்வத்தாமா ஆகியோர் முன்னே வந்து கொண்டிருந்தனர். சகோதரர்கள் ஐவரையும் பார்த்ததும் வரவேற்கும் பாவனையில் முகமன் கூறினார்கள். துரியோதனன் யுதிஷ்டிரனின் கால்களில் விழுந்து வணங்க அவனைத் தூக்கி நிறுத்தினான் யுதிஷ்டிரன்: “சகோதரா, உன் விருப்பத்திற்கேற்றவண்ணமே எல்லாம் நடைபெறக் கடவுள் அருள் புரியட்டும்!” என்ற வண்ணம் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

1 comment:

ஸ்ரீராம். said...

நடக்கப்போவது எல்லாம் யுதிஷ்டிரன் உட்பட சகோதரர்கள் அனைவருக்குமே முழுதும் முன் கூட்டியே தெரியும் என்பது ஆச்சர்யம்.