Thursday, December 1, 2016

பீஷ்மரின் திகைப்பு!

“யுத்தம் மூளும் என்னும் எண்ணமே என்னை நடுங்க வைக்கிறது, தாத்தா!” என்றான் யுதிஷ்டிரன். “தாத்தா, உங்களுக்குத் தெரியும்! நீங்கள் நன்கறிவீர்கள்! அது ஒரு சிங்கத்தைப் போல் ஆட்களை விழுங்கும் காட்டு மிருகங்களைப் போல் உயிருடன் மனிதர்களை உண்ணும் விலங்குகளைப் போல் வந்து கொண்டிருக்கிறது. பற்பல வீரதீரங்களைச் செய்யும் கதாநாயகர்களின் எலும்புகளால் இந்த வளமான பூமியை நிரப்பிவிடும். உடைந்த ரதங்களும், இறந்த குதிரைகளும் யானைகளுமே எங்கும் காணக்கிடைக்கும். இவற்றை எல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை. பெண்களும், குழந்தைகளும் ஆதரவற்று வீடின்றி இருக்க இடமின்றித் திரிவார்கள். பசுக்களும், மற்ற கால்நடைச்செல்வங்களும் அழிக்கப்படும்!”

“குழந்தாய்!, ஆசாரியர் சொல்வதற்கு முன்னரே, அவர் உதவி இன்றியே என்னால் பல்லாண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் போர் வருவதைக் கணிக்க முடிந்தது. குரு வம்சத்தினருக்கு தர்மம் என்றால் என்னவென்று தெரியவில்லை எனில், அரச நீதியைச் சரிவர அவர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை எனில் வேறு எவரால் இங்கே ஒழுங்கான ஆட்சியை, நேர்மையான ஆட்சியைத் தர முடியும்?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லி நிறுத்தினார் பீஷ்மர். யுதிஷ்டிரன் முழு மனதோடு மனம் நிறைய போர் குறித்த உண்மையான வருத்தத்தோடு தான் இவற்றைச் சொல்கிறான் என்பதைக் கண்டு கொண்டார் பீஷ்மர். இதோ! ஓர் நேர்மையான ஆட்சியாளன்! தர்மத்தின் பாதையைத் தவற விடாதவன்! நேர்மைக்கும்,, நீதிக்கும் தர்மத்தின் வழியில் செல்வதற்கும் என்றே பிறந்தவன்!

“தாத்தா, தாத்தா! என்னை மன்னியுங்கள்! இந்த நேர்மை, நீதி இவற்றை எல்லாம் கடைப்பிடிப்பது என்பது ஓர் தவம் செய்வது போல் ஆகும். யக்ஞம் செய்வது போல் ஆகும். இதற்காக வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களைத் தாங்களே இந்த நேர்மை, நீதி என்னும் புனிதமான அக்னியில் ஆஹுதியாக இடத் தயார் நிலையில் இருக்க வேண்டும். பல இரவுகள் தூக்கமில்லாமல் கழித்த பின்னர் தான் எனக்குப் புரிந்தது தாத்தா! நான் எப்படியேனும் ஆசாரியரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்க வேண்டும். அதை நடக்க விடாமல் முறியடிக்க வேண்டும்! அதற்காக என் உயிரையே கொடுக்க வேண்டி இருந்தாலும் சரி! அவ்வளவு ஏன்? அதற்காக என் மனைவி திரௌபதி, என் அருமைச் சகோதரர்கள், என் தாய், எங்கள் குழந்தைகள் ஆகிய அனைவரின் உயிரையும் விலையாகக் கொடுக்க நேர்ந்தாலும் கொடுத்துவிடத் தயார்!”

“குழந்தாய், உன்னால் போரைச் சகிக்க முடியாது எனில் பின்னர் இங்கே ஏன் வந்திருக்கிறாய்? வருவதற்கு மறுத்திருக்கலாமே!”

“தாத்தா, உங்களுக்குத் தெரியாதா? நான் இங்கே வருவதற்கு மறுத்தால் துரியோதனனின் சவாலை ஏற்க மறுத்தால், பின்னர் அதற்காகவே துரியோதனன் போர் தொடுப்பான்!”

“ஆம், அதுவும் உண்மைதான். அதுவும் எனக்குத் தெரியும்!” என்றார் பீஷ்மர். “அவன் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டான் குழந்தாய்! உன்னிடமிருந்து அனைத்தையும் பிடுங்கிக் கொண்டால் கூட அவன் மனம் திருப்தி அடையுமா தெரியவில்லை! ஆனால் அவன் அவ்வாறு உன்னிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கி விட்டான் எனில்? என்ன செய்யப் போகிறாய்? அதை எவ்வாறு தடுப்பாய்?”

யுதிஷ்டிரன் பணிவுடனும், விநயத்துடனும் தலையைக் குனிந்து கொண்டான். “தாத்தா, அது இறைவன் விருப்பம். இறைவன் விருப்பம் இந்திரப் பிரஸ்தத்தை நாங்கள் ஆளக் கூடாது, துரியோதனன் தான் ஆளவேண்டும் என்றிருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் அதை எப்படி எதிர்ப்போம்? துரியோதனன் என்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ளும்படி விட மாட்டேன். நானே கொடுத்துவிடுவேன். ஒருவேளை அதன் பிறகாவது அவன் மனம் அமைதி அடையலாம். எங்களிடம் அவன் கொண்டிருக்கும் வஞ்சம் மறையலாம். அவனுடைய விஷமத் தன்மை குறையலாம்!”

“என்ன! இந்திரப் பிரஸ்தத்தைக் கொடுத்துவிடுவாயா?” பீஷ்மர் குரலில் ஆச்சரியம் மிகுந்தது.

“ஆம், தாத்தா, நான் அதற்கும் தயார்!”

“ஆஹா, மகனே, உன்னுடைய இந்த விசித்திரமான முடிவுக்கு உன் தாய், சகோதரர்கள் மற்றும் உன் மனைவி பாஞ்சால நாட்டு இளவரசி ஆகியோர் என்ன சொன்னார்கள்? அல்லது சொல்லப் போகிறார்கள்?”

“தாத்தா, என்னுடைய இந்த முடிவு அவர்களுக்கு இன்னமும் தெரியாது! நான் சொல்லவில்லை. சித்தப்பா விதுரர் இந்தச் சவாலை ஒரு அழைப்பாக எங்களிடம் வந்து சொல்லியபோது, நான் என் சகோதரர்களிடம் அவர்கள் எனக்குக் கட்டுப்பட்டிருப்பதாகக் கூறி இருந்த உறுதிமொழியிலிருந்து அவர்களை விடுவித்து விட்டேன். என்னை என்னுடைய சொந்த முடிவின் படி நடப்பதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் தான் கேட்கவில்லை; மீண்டும் அவர்கள் அனைவரும் உறுதிமொழி கூறினார்கள்; எனக்கு ஆதரவாகவே செயல்படப் போவதாகச் சொல்லிவிட்டார்கள். இந்த விளையாட்டின் மூலம்……. இல்லை……இல்லை…… சூதாட்டத்தின் மூலம் என்ன நடந்தாலும், நான் எப்படி நடந்து கொண்டாலும், என்னைப் பிரிவதில்லை என்றும் சபதம் செய்து விட்டார்கள்!” என்றான் யுதிஷ்டிரன்.

“குழந்தாய்! உன் கழுத்தில் கத்தியை வைக்க ஏதுவாக நீ அவர்களிடம் உன் கழுத்தைக் காட்டிவிட்டாய்! நீயே விரும்பி ஏற்றுக் கொள்கிறாய்! அது உனக்குப் புரிகிறதா இல்லையா?”

“ஆம், தாத்தா, அதனால் போர் நின்றால் சரி! யுத்தமே வராமல் இருந்தால் சரி!” என்றான் யுதிஷ்டிரன்.

பீஷ்மர் மேலும் கேட்டார்;” குழந்தாய், உன்னால் அதைத் தடுக்க முடியும் என்றா நினைக்கிறாய்? முடியாது, அப்பனே, முடியாது!” என்றவர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பின்னர் தொடர்ந்து விதுரரிடம் திரும்பி, “விதுரா, நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

“பிரபுவே, சகோதரர்கள் ஐவரிடமும் நான் ஹஸ்தினாபுரம் வரவேண்டாம் என்று சொல்லி விட்டேன். அழைப்பை ஏற்க வேண்டாம் என்றே கூறினான். ஆனால் யுதிஷ்டிரன் ஓர் வீரனைப் போல் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டுவிட்டான். அவன் மனோபலம் என்னை வியக்க வைத்தது. ஆகவே அவனை இந்த விஷயத்தில் திசை திருப்ப வேண்டாம் என்று இருந்துவிட்டேன். அவன் சமாதானத்திற்காக எரியும் நெருப்பில் குதிக்க நினைக்கிறான். அதற்குத் தயாராக வந்துவிட்டான். அவன் தோல்வியைக் கூட அடையலாம். ஆனால் அவன் செய்யப் போகும் இந்த முயற்சி தகுதியானதே! நேர்மையான ஒன்றே!” என்றார் விதுரர்.

“தாத்தா, என்னை மன்னியுங்கள்!” என்று மீண்டும் சொன்னான் யுதிஷ்டிரன். கைகளைக் கூப்பிய வண்ணம், “என் தந்தையை விட உங்களைத் தான் அதிகம் அறிவேன். உங்களை மிகவும் மதித்துப் போற்றுகிறேன். இந்த பூவுலகில் நீங்கள் வாழும் கடவுள் என உங்களை வணங்கி வருகிறேன். ஆகவே உங்களிடம் வந்தேன் தாத்தா! நாம் அனைவருமே தினம் தினம் சாந்தி, சாந்தி, சாந்தி எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் பாருங்கள், யுத்தம் நடந்து அதில் சாவதற்குத் தயாராக இருப்பவர்களால் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக வேண்டி உயிர்விடத் தயாராக இருக்க முடிவதில்லை. நான் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக என் உயிரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன் தாத்தா! என்னை மக்கள் அனைவரும் தர்மத்தின் ராஜா என்றும் தர்ம ராஜா என்றும் அழைக்கிறார்கள் அல்லவா? அது உண்மையிலேயே இருக்கட்டும் தாத்தா! வெறும் பெயர் மட்டும் எனக்கு வேண்டாம். உண்மையிலேயே தர்மத்தின் பாதுகாவலனாக தர்ம ராஜாவாக அதை ரக்ஷிக்கும் அரசனாக இருக்க விரும்புகிறேன்.”

பின்னர் சற்று நேரம் மௌனத்தில் கழிந்தது. யுதிஷ்டிரன் தொடர்ந்தான். “ சரி தாத்தா, உங்கள் பொன்னான நேரத்தை நான் ஏற்கெனவே வீணாக்கி விட்டேன். தயவு செய்து எனக்கு இந்த ஓர் உதவியைச் செய்யுங்கள். சூதாட்டத்தின் போது என்ன நடந்தாலும் சரி, அமைதியாக இருங்கள். நீங்கள் தலையிடவே வேண்டாம். ஆட்டம் தந்திரமாகவும் மோசடியாகவும் நடந்தாலும் சரி!”

“இது ஒரு மோசமான கேலிக்குரிய சூழ்நிலை. நம் அனைவரின் கௌரவமே பாழடையப் போகிறது. யுதிஷ்டிரா, நீயோ அல்லது துரியோதனனோ எல்லாவற்றிலும் ஒத்துப் போவதில்லை! இன்று வரை அப்படித் தான்! ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துப் போயிருக்கிறீர்கள்! அது தான் நான் சூதாட்டத்தில் தலையிடக் கூடாது என்பது! இந்த விஷயத்தில் இருவரும் ஒரே மனதுடன் இருக்கிறீர்கள். ஒரு பக்கம் சூழ்ச்சி, நயவஞ்சகம், இன்னொரு பக்கம் நேர்மை, நீதி! போகட்டும்! நல்லது யுதிஷ்டிரா, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். மிக அதிகமாக நேசிக்கிறேன். நீ தர்மத்தின் பாதுகாவலன் மட்டுமல்ல, தர்மத்தின் அடையாளச் சின்னம், வாழும் தர்ம ராஜா! நீ கடைசிவரை அப்படித் தான் இருப்பாய்! மாற மாட்டாய்! உன்னால் மாற முடியாது. என்றும் எப்போதும் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக வாழ்வாய்! சமாதானத்திற்காகவே யுத்தம் செய்வாய்! போகட்டும்! இந்தச் சூதாட்டத்தில் அது சூழ்ச்சியானது என்பது முன் கூட்டியே தெரிந்திருந்தும் நான் தலையிடப் போவதில்லை! என்ன நடந்தாலும்! சரிதானே!” என்றார் பீஷ்மர்.  அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியேறியதும் பீஷ்மர் தனக்குள்ளே, “ஓஓ, கடவுளே, கடவுளே, இன்னும் எத்தனை நாட்கள் நான் இந்தக் குரு வம்சத்தினரின் பாரத்தைத் தாங்கியாக வேண்டுமோ, தெரியவில்லையே!” என்றார்.