Sunday, November 27, 2016

ஐய, இதனைத் தடுத்தல் அரிதோ!

பீஷ்ம பிதாமஹரின் அறை! நான்கு எண்ணெய் விளக்குகள் ஒளி வீசிப் பிரகாசிக்க பீஷ்மர் தன் படுக்கையில் படுத்திருந்தார். ஒரு மல்லன் அவர் கால்களுக்கு எண்ணெய் தடவித் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான். அவர் பல ஆண்டுகளுக்கும் மேலாக குரு வம்சத்தின் அஸ்திவாரமாக, அசையாத் தூணாக நிலையாக நின்று கொண்டு அரச பரம்பரையைத் தாங்கி வருகிறார். அவர் அறியாமல் ஒரு துரும்பு கூட இது வரை அசைந்ததில்லை. எந்தச் சட்டமும் போடப்பட்டதில்லை. ஆனால் இப்போது? பீஷ்மரின் மனதில் சிறு சலனம். ஒரு பெருமூச்சு விட்டார். இனியும் எத்தனை நாட்களுக்கு இப்படி நடக்கும்? சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்தார். இனி அவர் இந்தக் குரு வம்சத்தினருக்குத் தேவை இல்லை. அவருடைய முக்கியத்துவம் குறைந்து வருகிறது. மனதில் வியாகூலம் சூழ்ந்து கொள்ள ஹஸ்தினாபுரத்தை இப்போது தீவிரமாகப் பற்றி இருக்கும் நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் மனக்கண்களில் கொண்டு வந்து ஆராய்ந்தார்.

துரியோதனன் தன் குருட்டுத் தந்தையிடம் தான் தற்கொலை செய்து கொள்வதாகப் பயமுறுத்தி மிரட்டித் தான் பாண்டவர்களைச் சூதாட்டம் ஆடுவதற்காக அழைப்பு அனுப்ப வைத்தான். தன் மகன் மேல் உள்ள பாசத்தின் காரணமாக குருட்டு அரசனும் ஒத்துக் கொண்டு விட்டான். உண்மையில் அது அரச குலத்தினருக்கு ஒரு சவால் தான். இப்படி ஒரு சவாலை வெளிப்படையாகக் கொடுத்த பின்னர் எந்த அரச குலத்தினரும், உண்மையான க்ஷத்திரியனும் இதை மறுக்க நினைக்க மாட்டான். க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பதாக வாக்குக் கொடுத்தவன் எவனும் இதை மறுக்க முடியாது. இது ஒரு கௌரவப் பிரச்னை! இதை மட்டும் யுதிஷ்டிரன் மறுத்துவிட்டால் பின்னர் சட்டரீதியான போர் தான் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமையும். ஆகவே போரைத் தடுக்கவே யுதிஷ்டிரன் இதற்கு ஒத்துக் கொண்டு வந்திருக்கிறான்.
பீஷ்மரும் திருதராஷ்டிரன் மனதை மாற்றுவதற்காக விதுரர் மூலம் பலவிதமாக முயற்சித்துத் தான் பார்த்தார். யுதிஷ்டிரனுக்கு அந்த அழைப்பை அனுப்ப வேண்டாம் என்று விதுரரும் வாதாடிப் பார்த்து விட்டார். ஆனால் அந்தக் கோழை மன்னன் திருதராஷ்டிரன் தன் குருட்டுக் கண்களில் இருந்து கண்ணீர் வர பீஷ்மரிடமே கெஞ்சினான். தான் போட்ட கட்டளைக்கு மேல் ஓர் கட்டளை பிறப்பித்துத் தன்னுடைய கட்டளையைச் செல்லாததாக ஆக்கவேண்டாம் என்று வேண்டிக் கொண்டான். அப்படி மட்டும் நடந்து விட்டால் அவன் அருமை மகன் துரியோதனன் தற்கொலை பண்ணிக் கொண்டு செத்துவிடுவான் என்று நம்பினான். விதுரரையே யுதிஷ்டிரனைப் போய்ச் சந்தித்து அழைப்பைக் கொடுத்து அவனை அழைக்குமாறு அனுப்பி வைத்தான் திருதராஷ்டிரன்.

இந்த விஷயத்துக்கு ஏன் விதுரர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை பிதாமஹர் பீஷ்மர் புரிந்து கொண்டார். அவர் ஐந்து சகோதரர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர். அவர்களுக்கு விரோதமான எதையும் செய்ய மாட்டார். அதோடு இந்த அழைப்பு விதுரர் மூலம் அளிக்கப்பட்டால் இதன் பின்னால் சூழ்ச்சியோ தந்திரமோ இருக்காது என்றும் அவர்கள் நம்புவார்கள். இதனால் தான் விதுரரை இந்த முக்கியமான தூது அனுப்பத் தேர்ந்தெடுத்தார்கள். விதுரரும் அதை ஒப்புக் கொண்டார். ஏனெனில் அவர் தலையீட்டால் இந்தப் பிரச்னையின் தீவிரம் குறைந்து சுமுகமாக முடியும் என்று அவரும் நினைத்தார். ஆனால் பிதாமஹர் பீஷ்மருக்கு இந்தச் சவாலின் முடிவு என்னவாக இருக்கும் என்பதும் புரிந்தே இருந்தது. அதை க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் பின்பற்றும் ஐந்து சகோதரர்களும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

இப்போது அவர்கள் இந்தச் சூதாட்டம் ஆடுவதற்காக ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்து விட்டனர். யுதிஷ்டிரன் என்ன செய்யப்போகிறான்? அவன் இதில் வல்லவன் அல்ல! அதுவும் ஷகுனி போன்ற ஓர் தேர்ந்த சூதாட்டக்க்காரனை எதிர்கொண்டு ஜெயிக்கும் அளவுக்கு யுதிஷ்டிரனுக்கு இதில் எதுவும் தெரியாது. துரியோதனனுக்காக ஷகுனி ஆடுகின்றான் எனில் யுதிஷ்டிரனுக்காக யார் ஆடுவார்கள்? எவரும் இல்லையே! இதனால் பாண்டவர்கள் இந்தச் சூதாட்டத்தை ஒத்துக்கொள்ளாவிட்டால் அவர்களைக் கோழை என்றும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் என்றும் பொதுவில் சொல்லி விடுவார்கள். பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. ஆட்டம் நடக்கையில் ஷகுனி சூதாட்டத்தில் சூழ்ச்சிகளும், தந்திரங்களும் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, அவனை ஏமாற்றுக்காரன் என்று சொல்லி ஆட்டத்தையே நிறுத்தலாம். பாண்டவர்கள் அதற்கு முயற்சிக்கலாம். ஆனால் அப்போதும் துரியோதனன் தரப்பு அரசர்கள் இவர்களைக் கொல்லக் கூடத் தயங்க மாட்டார்கள்! முக்கியமாய் அந்தக் கர்ணன்!

துரியோதனனின் தந்திரங்கள் அனைத்தையும் பிதாமஹர் பீஷ்மர் நன்கறிவார்.ஹஸ்தினாபுரத்துக்கு இரண்டு நாட்கள் முன்னர் வந்து சேர்ந்த பாண்டவர்களுக்கும், திரௌபதி மற்றும் குந்தி அனைவருக்கும் பிரமாதமான வரவேற்புக் கொடுத்து உபசரித்திருந்தான் துரியோதனன். அதன் மூலம் பாண்டவர்களுக்குத் தான் தீங்கிழைக்கப் போவதை மக்கள் புரிந்து கொள்ளாமல் தன் செய்கையின் பின்னே மறைந்திருக்கும் விரோத பாவத்தை அவர்கள் அறியா வண்ணம் எந்தத் தப்பும் நடக்கவில்லை; நடக்கவும் போவதில்லை என்று மக்கள் நினைக்கும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறான் துரியோதனன். பீஷ்மருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவர் தலையிட்டு இந்தச் சூதாட்டத்தை ஆடக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கலாம். ஆனால் துரியோதனனின் குழுவினர், முக்கியமாக அவன் தம்பி துஷ்சாசனன், ராதேயன் மகன் கர்ணன், துரோணாசாரியார் மகன் அஸ்வத்தாமா ஆகியோரும் இவர்களின் பின்னே இயங்கும் துரியோதனனின் தாய் மாமன் ஷகுனியின் மூளையும் சேர்ந்து கொண்டு அவருடைய ஆணையைக் கூடத் தடுத்து விடும். அவருடைய இத்தனை வருட வாழ்க்கையில் குரு வம்சத்தின் அரச குலத்தவர் முதல் முறையாக அவரை எதிர்த்து அறைகூவல் விடுகின்றனர். இதற்கு என்ன செய்வது என்று தான் அவருக்குப் புரியவில்லை.

அப்போது மந்திரி சஞ்சயன் அவர் அறைக்குள் திருதராஷ்டிரனை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். திருதராஷ்டிரனை பீஷ்மரின் படுக்கைக்கு அருகே ஓர் ஆசனத்தில் அமர வைத்தான். பின்னர் ஓர் கை அசைவில் பீஷ்மருக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த மல்லனை வெளியேற்றினான். அவன் சென்று விட்டதை அறிந்த திருதராஷ்டிரன், “ மதிப்புக்குரிய தாத்தா அவர்களுக்கு என் மரியாதையான நமஸ்காரங்கள்!” என்று வணக்கம் தெரிவித்தான். “என் ஆசிகள், குழந்தாய்!” என்றார் பீஷ்மர். பின்னர் திருதராஷ்டிரனுக்குப் புரியும் வண்ணம் அவன் முதுகிலும் தட்டிக் கொடுத்துத் தன் ஆசிகளைத் தெரிவித்தார். “இரவு இந்நேரத்தில் நீ இங்கே வர வேண்டிய காரணம் என்ன, மகனே! எதற்காக வந்திருக்கிறாய்?” என்று கேட்டார்.

மிக மெல்லிய பலஹீனமான குரலில் பேச ஆரம்பித்தான் திருதராஷ்டிரன். “துரியோதனன் தன்னுடைய பணிவான வணக்கத்தை உங்களுக்குத் தெரிவித்து விட்டுத் தாழ்மையான வேண்டுகோளையும் விடுத்திருக்கிறான்!..........” என்று இழுத்தான். “என்ன அவன் வேண்டுகோள்?” என்று பீஷ்மர் கடுமையான தொனியில் கேட்டார். “அதாவது…….. அதாவது………….. தாத்தா அவர்கள்………….. இந்தச் சூதாட்டம் ஆடும்போது நடுவில் குறுக்கிடக் கூடாது…………….”


No comments: