Saturday, September 17, 2016

கோதுலி ஆசிரமத்தில் ஆலோசனை!

மோசாவின் இரு இளைய சகோதரிகளும் ஷார்மியுடன் தப்பி ஓடி வந்திருந்தார்கள். இப்போது மோசாவின் மரணம் குறித்து அறிந்திருந்தாலும் அவர்கள் திரும்பவும் அந்தப் பழங்குடியினரின் காட்டுமிராண்டியான வாழ்க்கைக்குப் போக விரும்பவில்லை. ஆகவே ஷார்மி அவர்கள் இருவரையுமே த்வைபாயனரின் ஒரே மகன் சுகதேவனுக்கு மணமுடித்துத் தர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் சுகரோ இல்வாழ்க்கையை அறவே வெறுத்தார். பிரமசரியத்திலிருந்து நேரே சந்நியாசியாகவே விரும்பினார். ஆரியர்களுக்கு வாழ்க்கை முறையில் முதலில் குழந்தைப் பருவம் கடந்த பின்னர் பிரமசரிய ஆசிரமம், பின்னர் கிரஹஸ்தாசிரமம், அதன் பின்னர் வானப்பிரஸ்தம் கடைசியாகவே சந்நியாசி என நியமங்கள் இருந்து வந்தது. ஆனால் ஒரு சிலர் பிரமசாரியிலிருந்து நேரடியாக சந்நியாசிகளாக ஆக விரும்பினார்கள். அவர்களில் சுகரும் ஒருவர். இப்போது சுகர் இல்வாழ்க்கையை மறுத்ததால் என்ன செய்வது என்று புரியாமல் அனைவரும் தவித்தனர்.

அடுத்ததாக உள்ள பிரச்னையும் தீர்க்க முடியுமா என்று சந்தேகமே! த்வைபாயனருக்கு சூரியனிடமிருந்து கிடைத்த செய்தியைப் பின்பற்றி நடக்கவேண்டுமானால் கோதுலி ஆசிரமும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் அனைத்துக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அந்தப் பொறுப்பை ஏற்பது யார்? இதற்கெல்லாம் என்ன முடிவு காண்பது என்று புரியாத த்வைபாயனரும், ராணிமாதாவும், வாடிகாவும் ஓர் இடத்தில் ரகசியமாகக் கூடினார்கள். ராணிமாதா எப்போதும் போல் தன் கட்டுக்குலையாத அழகின் மெருகோடும், கம்பீரத்தோடும் அங்கிருந்த வெள்ளிப்பட்டை போட்டிருந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்திருக்க அவளை எந்நேரமும் பிரியாத தாவி பின்னால் நின்று கொண்டிருந்தாள். அவள் எதிரே ஷார்மி அரச குலத்தவரைச் சந்திக்க நேர்கையில் அணிய வேண்டிய உடைகளோடு மிகவும் அடக்கத்துடனும், பணிவுடனும் அமர்ந்திருந்தாள். நரைத்த அவள் தலைமயிர் அவள் தலையில் ஓர் வெண்மையான கிரீடத்தைச் சூட்டியது போல் இருந்தது. ராணிமாதாவின் இடப்பக்கம் காசி தேசத்து இளவரசிகள் அமர்ந்திருந்தனர். அவர்கள் கண்கள் சோகத்தையும், அவர்களின் செயலற்ற தன்மையையும் அப்படியே எடுத்துக் காட்டின. அவர்கள் அருகே வாடிகாவும் அமர்ந்திருந்தாள்.

ராணிமாதாவின் வலப்பக்கமாக த்வைபாயனர் அமர்ந்திருக்க அவர் அருகே க்ருபா தான் பழங்குடித் தலைவன் என்னும் அடையாளத்தைக் காட்டும் எருமைக்கொம்புள்ள கிரீடத்தோடும், சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்ட முகத்தோடும் அமர்ந்திருக்க அவன் பின்னே சுகதேவரும் மற்ற நான்கு பிரமசாரிகளும் அமர்ந்திருந்தனர். அப்போது ராணிமாதா பேச ஆரம்பித்தாள்: “நான் த்வைபாயனருடன் இது குறித்து நன்கு கலந்து ஆலோசித்து விட்டேன். இதோ இந்த இடத்தில் தான் முனிசிரேஷ்டரான பராசரரை நெருப்பிலிட்டிருக்கின்றனர்..” இதைச் சொல்லும்போது அவள் குரல் தழுதழுத்தது. அவளுடைய சொந்த வாழ்க்கையையும், கோதுலியின் வாழ்க்கை முறையையும் அடியோடு மாற்றி அமைத்தது இந்த இடம். அதோடு மட்டுமல்லாமல் பராசரர் மூலமாக ஆரியவர்த்தம் முழுமையும் அடியோடு மாறியது. இங்கே தான் இந்த இடத்தில் அவள் பங்கு முனி என அழைக்கப்பட்ட பராசர முனிவரை முதல் முதல் சிறு பெண்ணாகச் சந்தித்தாள். அவர் அடிபட்டுக் கீழே கிடந்ததைக் கவனித்தாள்.

அருகிலுள்ள கல்பியில் தான் அவள் அவரைக் கவனித்துப் பணிவிடைகள் செய்து வந்தாள். அவளிடம் இருந்ததை எல்லாம் அவருக்கு அர்ப்பணித்தாள். தன்னையும் சேர்த்து அர்ப்பணித்தாள். அதன் பின்னர் த்வைபாயனரை ஆறு வருடங்கள் வளர்த்தாள். அவரை பாங்கு முனி கல்பியிலிருந்து இங்கே தான் அழைத்து வந்தார். இங்கே தான் த்வைபாயனருக்கு உபநயனம் என்னும் மறுபிறவியை அடையும் நிகழ்ச்சி நடந்து அதன் பின்னர் பிரமசாரியான க்ருஷ்ண த்வைபாயனர் ஆசாரிய கௌதமரால் சீடராக ஏற்கப்பட்டு, ஷார்மியாலும் அவராலும் சொந்த மகனைப் போல் வளர்க்கப்பட்டதோடு கல்வியும் புகட்டப்பட்டார். இந்த நினைவுகள் எல்லாம் அவள் உள்ளத்தினுள்ளே கிளர்ந்து எழுந்தன. அதன் தாக்கத்தால்  அவள் கண்களும் நீர்க் கோர்த்துக் கொண்டன. தன் தொண்டையைக் கனைத்துக் கொண்ட அவள் மேலும் பேச ஆரம்பித்தாள்.

“நான் இந்த விஷயத்தைக் குறித்து த்வைபாயனரிடம் பேசி விட்டேன். நாம் எந்தப் பெயரை இங்குள்ள தீர்த்தத்துக்கு வைக்கிறோமோ அதை ஏற்றுக் கொள்வதாக அவர் உறுதிமொழி கொடுத்து விட்டார். கடவுள் அவரை இப்போது தர்மசாம்ராஜ்யத்தில் ஆண், பெண் அனைவரையும் ஒருங்கிணைத்து நல்வழிக்குக் கொண்டு வர வேண்டிய நல்லெண்ணத் தூதுவராக நியமித்திருக்கிறார். ஆர்ய வர்த்தம் முழுவதும் சென்று அவர் அதற்கான வேலைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தீர்த்தத்தின் மூலமே அந்த வேலைகள் நடைபெற வேண்டும். ஆகவே இதற்குத் தக்கதொரு பெயரைச் சூட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! இதன் மூலம் பல அரிய, புனிதமான இணைப்புகளும், உறவுகளும் ஏற்படும்.” த்வைபாயனரிடம் திரும்பிய ராஜமாதா, “கிருஷ்ணா, இப்போது நாங்கள் செய்ய வேண்டியது என்ன? அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?”

சிரித்துக் கொண்டே த்வைபாயனர், “தாயே, எனக்கென்று சில அபிப்பிராயங்கள் இதற்குப் பெயர் சூட்டுவதில் இருக்கின்றன.” என்றார். “அப்படியா? என்ன பெயரை வைக்கலாமென்று நீ சொல்கிறாய்?” ராஜமாதா கேட்டாள்.
“ஹா, அந்தப் பெயரை நான் சொன்னேன் எனில் உங்கள் எவருக்கும் அது பிடிக்காது! அது மட்டும் நிச்சயம்!” என்ற த்வைபாயனர் மீண்டும் குறும்புத் தனமான சிரிப்புடன், “இந்த இடத்தின் பாதுகாப்புக்கும், இதை மீண்டும் நிர்மாணிப்பதற்கும் அதிகம் பாடுபட்டவர் எவரோ அவர் பெயரைத் தான் இந்த இடத்திற்கு வைக்க வேண்டும்!” என்றார். “மகனே! புதிர் போடுவதைப் போல் பேசாதே! நேரடியாக விஷயத்துக்கு வா! என்ன பெயரைச் சொல்கிறாய்?” ராஜமாதா கேட்டாள்.

“உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருக்கும்! இதோ இவர்கள் பெயரைத் தான் வைக்க வேண்டும்!” என்ற வண்ணம் ஷார்மி அன்னையைச் சுட்டிக் காட்டினார் த்வைபாயனர். “என்ன? ஷார்மி அன்னையின் பெயரா?” என்று உண்மையான அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் ராஜமாதா கூவ, வாடிகாவோ தன் கணவனைக் கோபத்துடன் பார்த்தாள். ஆனால் த்வைபாயனர் எதற்கும் கலங்காமல், “ஆம், ஷார்மி அன்னை தான் இந்த ஆசிரமமும் கோதுலியும் மீண்டும் தழைக்க வேண்டி அரும்பாடு பட்டிருக்கிறார். அதோடு அவர் தான் மிகவும் அனைவரையும் விடக் கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறார். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் இரவும், பகலும் இடைவிடாது வேலை செய்து வருடக்கணக்காகப் பாடுபட்டு இந்த ஆசிரமத்தை இந்த உயர்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார். வாஜ்பேய யக்ஞம் சக்கரவர்த்தியின் ஆணையின் பேரில் நடந்தபோது இவருடைய சேவைகள் எவ்வளவு போற்றத்தக்கவையாக இருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள்! அன்னபூரணி தேவியைப் போல் எந்த நேரம் யார் வந்து கேட்டாலும் தட்டாமல் இவர் கைகள் உணவை அளித்து வந்தன!” என்றார் த்வைபாயனர்.

சற்று நேரம் நிறுத்திவிட்டு அனைவரையும் பார்த்தவர், மீண்டும் தொடர்ந்தார். “ஆனால் அவர்கள் நேரம் முழுவதும் தேவையான உணவுப் பொருட்கள் ஆசிரமத்தில் இல்லை என்று புகார் செய்வதிலேயே கழிந்து விட்டது. அவர்களைப் பார்த்தால் அந்த உணவுப் பொருட்கள் போயிருக்கும் இடம் எதுவென்று அனைவரும் புரிந்து கொள்ளலாம்.” என்று சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரித்தார். ஷார்மி குறுக்கிட்டுப் பேச முயன்றாள். ஆனால் த்வைபாயனர் விடவில்லை. “புனிதமான எருமையைக் கடவுளாக வணங்கும் பழங்குடியினருக்கும் நமக்கும் இடையில் நல்லதொரு உறவின் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது ஷார்மி அன்னை தான். இந்த ஆசிரமத்தைக் காப்பாற்றும் முயற்சியில் எண்ணற்ற கஷ்டங்களை அவர் அனுபவித்தாயிற்று! இவரின் கண்களுக்கு முன்னாலேயே இவர் அருமைக்கணவரும், ஆசாரியருமான கௌதம முனிவரும் இவர்களின் அருமைக்குழந்தைகளும் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போது அவர் இத்தனைக்கும் பின்னர் இந்த ஆசிரமத்தை மீண்டும் கட்டித் தரும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.” என்றார்.

ஷார்மி கொஞ்சம் சுயநினைவை இழந்த பைத்தியம் பிடித்தவள் போல் கத்தினாள்.”த்வைபாயனா, ஏன் இப்படி முட்டாள்தனமாகப் பேசுகிறாய்! இப்போது இந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியெல்லாம் வேடிக்கைப் பேச்சுப் பேசுவதா? அதற்கான சந்தர்ப்பமா இது? உன் கேலிப் பேச்சைக் கொஞ்சம் நிறுத்திக் கொள்.” என்றாள்.

“இல்லை, அம்மா, இல்லை! இந்த விஷயத்தில் இது தான் உண்மை. எப்படி எனில் நான் என் வாழ்க்கையில் முதல் முதலாகச் செய்திருக்கும் அர்த்தமுள்ள காரியம் எது எனில் அது இதுதான்! வேறெதுவும் இல்லை!” என்றார் த்வைபாயனர்

No comments: