Thursday, September 15, 2016

த்வைபாயனரின் வருகை!

அவளால் தூங்கக்கூட முடியவில்லை. அங்குள்ள அனைத்துப் பெண்களும் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு தூங்கப் போய்விடுவார்கள். ஆனாலும் அவளால் தூங்க முடியாது. மெல்ல எழுந்து நதிக்கரைக்குச் சென்று தனியே அமர்ந்து வாய்விட்டு அழுது தன் துன்பத்தைக் கரைக்க முயல்வாள். அவள் வயிற்றின் ஆழத்திலிருந்து ஒரு பெரிய விம்மல் வந்தது. நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது. “ஓ,என் பிரபுவே, என் ஆசாரியரே, ஏன் என்னைப் பிரிந்தீர்? நான் கடைசி மூச்சை விடும்வரை என்னைப் பாதுகாப்பேன் என்ற உறுதி மொழி அளித்தீரே! அதை மறந்துவிட்டு அந்த உறுதிமொழியை உடைத்துவிட்டு மறைந்தீரே!” என்று புலம்பினாள். எது எப்படியானாலும் கடைசியில் குழந்தை கிருஷ்ணனின் உயிர் காப்பாற்றப்பட்டு விட்டதே! கடவுள் கருணை மிக்கவர் தான். அவருக்கு நன்றி. அவனால் தானே இன்று நான் இந்த ஆசிரமத்தைச் சீரமைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளேன். அது மட்டுமா?

என் பழங்குடி இனத்துக் கடவுளான தெய்விக எருமைக்கும் நான் செலுத்தியாகவேண்டும். திருமணத்துக்கு முன்பு வரை அது தானே என் குலதெய்வமாக இருந்து வந்தது! எந்தக் கடவுளையும் நான் தள்ளுபடி செய்யவில்லை. இதன் மூலம் எந்தக் கடவுளின் கோபத்துக்கும் நான் ஆளாக வேண்டாம்! அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. அவள் நெஞ்சம் கொஞ்சம் அமைதியடைந்ததும் அவள் ஆசிரமத்தினுள் சென்று தன் வழக்கமான இடத்தில் படுத்துக் கொண்டாள். மறுநாள் காலை அனைவரும் எழுந்து தங்கள் அன்றாட அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு யாகத் தீயை வளர்த்து அக்னிக்கும் மற்ற தேவதைகளுக்கும் அர்க்யங்களையும், ஆஹுதிகளையும் கொடுத்தார்கள். அப்போது பேரிகைகள், முரசுகள் சப்திக்கும் சப்தமும், எக்காளங்கள், சங்கு ஆகியவை ஊதும் சப்தமும் பேரிரைச்சலாகக் கேட்டது. எவரோ வருகின்றனர் போலும். அனைவரும் ஓட்டமாக ஓடிப் போய்க் காட்டிலிருந்து வழி அந்த ஆசிரமத்துக்கு வரும் பகுதியில் போய் நின்று கொண்டனர்.

த்வைபாயனர் மலர்ந்த முகத்துடன் வந்தார். அவருடன் க்ருபா, இப்போது அவன் தான் தலைவன் என்பதால் அதற்காகச் சித்திரிக்கப்பட்டிருந்த சிவப்பு வண்ணத்துடனும், மந்திரி குனிகர், வெற்றிப் பெருமிதம் மின்னவும் காட்டிலிருந்து அந்த ஆசிரமம் வரும் பாதையில் நுழைந்தார்கள். அவர்களுடன் காட்டுவாசிகள் நிறையப் பேர் கூடவே ஊர்வலம் போல் வந்தனர். பெண்கள் பாடல்களைப் பாடிக் கொண்டும் ஆண்கள் ஆசிரமத்துக்காரர்களுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டும் வந்தனர். பெண்கள் தங்கள் கைகளில் குழந்தைகளைப் பிடித்துக் கொண்டும், ஒரு சிலர் பாலூட்டியவண்ணமும், இன்னும் சிலர் இடுப்பில் குழந்தைகளை வைத்துக் கொண்டும் வந்தனர். அதைப் பார்த்த ஷார்மிக்கு உணர்ச்சிகள் கரை புரண்டன. எல்லையற்ற மகிழ்ச்சி ஒரு பக்கம் என்றாலும் தன் கணவன், குழந்தைகள் நினைவு மறுபக்கம் என்று தடுமாறினாள் ஷார்மி.

அந்தக் கூட்டத்தை நோக்கிப் பாய்ந்தாள் ஷார்மி. அவளுக்கு அனைவரையும் முந்திக்கொண்டு தான் முதலில் போய் அவர்களை எல்லாம் வரவேற்கவேண்டும் என்னும் ஆவல். ஆகவே ஓட்டமாக ஓடினாள். ஓடும்போது முட்புதர்களில் மாட்டிக்கொண்ட அவள் உடை ஆங்காங்கே கிழிந்தது. அதைச் சிறிதும் சட்டை செய்யாமல் அவள் ஓடினாள். “கிருஷ்ணா, கிருஷ்ணா! என் குழந்தாய்!” என்ற வண்ணம் கீழே வீழ்ந்தாள் ஷார்மி. அங்கே அப்போது கடைப்பிடிக்கவேண்டிய கட்டுப்பாடுகளையும், ஒழுக்கத்தையும் முற்றிலும் மறந்தாள். அப்படியே த்வைபாயனரைத் தன் கைகளால் இறுக அணைத்துக் கொண்டு அவர் மார்பில் சாய்ந்த வண்ணம் துக்கம் தாங்க முடியாமல் விம்மினாள். அழுதுகொண்டே, உடைந்த சொற்களால் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் திக்கித் திணறி வெளிப்பட்டன. “கிருஷ்ணா, கிருஷ்ணா, நம் ஆசாரியர் இப்போது இல்லை. என் குழந்தைகளும் இல்லை. அனைவரும் இறந்துவிட்டனர்.” என்று புலம்பினாள்.

தன் கைகளை அவளுடைய நரைத்த தலைமயிரின் மேல் வைத்தார் த்வைபாயனர். அந்த தலைமயிரை அவள் எடுத்துக் கட்டியிருந்த விதம் அவளுக்குக் கிரீடம் சூட்டினாற்போல் காட்சி அளித்தது. மெல்ல அவள் தலையைத் தடவிய த்வைபாயனர், “இல்லை, அம்மா. இல்லை! நம் ஆசாரியர் இறக்கவே இல்லை. அவருக்கு இறப்பே இல்லை! அவர் உங்களிடம் உள்ளார், என்னிடம் உள்ளார். அவ்வளவு ஏன்! அவருடைய ஒவ்வொரு சீடரினுள்ளும் அவர் இருக்கிறார். இதோ இந்த மஹிஷாசுரனின் பரம்பரையான இந்தக் குழந்தைகளிடமும் ஆசாரியர் வாழ்கிறார்.”
“என் குழந்தைகள்!” என்று புலம்பினாள் ஷார்மி! “இல்லை அம்மா, இல்லை. அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். அவர்களின் நினைவு தான் உங்களை நடத்திச் செல்கிறது. இந்த ஆசிரமத்தை வெற்றிகரமாக நீங்கள் நடத்துவதற்கான உந்து சக்தியே அவர்களின் நினைவுதான்!” என்றார் த்வைபாயனர். ஷார்மி அன்னையை ஒருகையில் பிடித்தவண்ணம் த்வைபாயனர் இன்னொரு கையால் அங்கிருந்த அனைவருக்கும் தன் ஆசிகளைத் தெரிவித்தார். “தாயே!” என்று உரத்த குரலில் அங்கிருந்த அனைவர் காதுகளிலும் விழுமாறு பேச ஆரம்பித்தார். “இதோ இந்த க்ருபா தன்னால் முடிந்தவரைக்கும் பசுக்களையும், எருதுகளையும் கொண்டு வந்திருக்கிறான். இவை அனைத்தும் மோசாவின் வயிற்றுக்குள் போகாமல் மிச்சம் இருந்தவை ஆகும். அது மட்டுமல்ல தாயே! இன்னொரு அதிசயம் கூட நடந்திருகிறது.”

“இதோ இந்தப் பழங்குடியினர் இனிமே மாட்டின் மாமிசத்தையோ அல்லது மனிதரின் மாமிசத்தையோ சாப்பிடமாட்டார்கள். அவர்கள் இதுவரை செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இப்படி ஓர் உறுதிமொழி எடுத்திருக்கின்றனர். சரி, அம்மா! இப்போது நாங்கள் நதிக்கரைக்குச் சென்று குளித்து வருகிறோம். எங்கள் வழிபாடுகளை சூரியபகவானுக்குச் செய்தாகவேண்டும். அதன் பின்னர் யாகத்தீயை மூட்டி அக்னி பகவானுக்கு ஆஹூதிகள் தரவேண்டும்.” என்றார் த்வைபாயனர்.

அதன் பின்னர் ஷார்மியிடம் திரும்பித் தன் குறும்பான குரலில், “என்ன, ஷார்மி அன்னையாரே! என்ன நினைக்கிறீர்கள்?  இதோ, இந்தத் தீர்த்தத்தை நாம் இனிமேல், “ஷார்மி தீர்த்தம்” என்றழைக்கலாமா?” என்று கேட்டார். ஷார்மி அதிர்ச்சி அடைந்தாள். ஏதோ சொல்வது போல் வாயைத் திறந்தவள் பின் தன் ஒரு கையால் வாயை மூடிக் கொண்டாள். பின்னர் தன் எதிர்ப்பை ஒருவாறாகக் காட்டினாள். “என்ன சொல்கிறாய், கிருஷ்ணா! நானா? என் பெயரிலா? தீர்த்தமா? நான் ஒரு பெண். என்னால் வேத மந்திரங்களை உச்சரிக்க முடியாது. இந்தத் தீர்த்தத்துக்கு உன் பெயரை வைக்கலாம். நீ இங்கேயே தங்கு! இதையே உன் இருப்பிடமாக மாற்றிக் கொள்!” என்றாள்.

“சிலவாரங்கள் இங்கே தங்கத் தான் போகிறேன், அன்னையே!  ஹஸ்தினாபுரத்திலிருந்து என் மனைவி ஜாபாலியாவை (வாடிகா) இங்கே அழைத்து வரச் சொல்லி மந்திரி குனிகரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். இங்கே இருந்து நாங்கள் புனிதமான அக்னி சரியானமுறையில் பராமரிக்கப் படுவதையும், இங்கே உள்ள அனைவரும் வேத மந்திரங்களைச் சரியாக உச்சாடனம் செய்கிறார்களா என்றும் பார்க்கப்போகிறேன்.”

அதன் பின்னர் த்வைபாயனரும் மற்றவர்களும் குளிக்கச் சென்றனர். தங்கள் அனுஷ்டானங்களைச் செய்து அக்னிக்கும் முறைப்படி செய்யவேண்டியவைகளைச் செய்தார்கள். அங்கிருந்த பழங்குடியினர் வியாசர் செய்த இந்த அற்புதம் குறித்துத் தங்களுக்குள் ஆச்சரியமாகப் பேசிக் கொண்டார்கள். இவர் கடவுளே தான்! கடவுளே நேரில் வந்திருக்கிறார். இல்லை எனில் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பினார்கள். அதன் பின்னர் எப்போதும் போல் ஆசிரமவாசிகளுக்கும், குழந்தைகளுக்கும் முதலில் உணவளித்துவிட்டு த்வைபாயனரும் உணவு உண்டார். ஆசிரமவாசிகள் வந்திருந்த பசுக்களுக்குத் தொழுவம் அமைப்பதிலும், வேறு சிலர் அவற்றைக் குளிப்பாட்டி உணவு கொடுப்பதிலும் முனைந்தனர். இன்னும் சிலர் மாட்டுக்கான தீவனங்களைச் சேகரிக்க முற்பட்டனர். அங்குள்ளவர்களுக்குக் குடில்கள் கட்டிவரத் தேவையான மூங்கில்களை வெட்டப் பழங்குடியினர் சென்றனர். க்ரிவியும் மற்றப் படகோட்டிகளும் ஆனந்தமாக அங்குமிங்கும் சுற்றிக் கொண்டு ஆங்காங்கே இருந்தவர்களிடம் த்வைபாயனரின் சாமர்த்தியம் குறித்தும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்தும் பல கதைகளைப் பேசிக் கொண்டு இருந்தனர். மறுநாள் ஆசாரிய கௌதமர் மற்றும் அங்கே இறந்த மற்ற ஸ்ரோத்திரியர்கள், கௌதமரின் குழந்தைகள் ஆகியோருக்கு ஈமச்சடங்குகள் முறைப்படி செய்யப்பட்டன.