Tuesday, September 13, 2016

மோசாவின் முடிவு!

அப்போது த்வைபாயனர் தன் கை அசைப்பால் குனிகரைப் பேசாமல் மௌனமாக இருக்கும்படி அறிவுறுத்தினார். பின்னர் மோசாவைப் பார்த்து, “வல்லமை மிக்க மோசா! உன் கோபத்தால் மற்றவரை எதிர்த்து உன்னால் எதையும் செய்ய முடியாது. உனக்கெனவும் எதையும் சாதிக்க முடியாது!” என்றார். பின்னர் கீழே குனிந்து கைப்பிடிப் பசும்புற்களைக் கைகளில் அள்ளினார். அங்கே நின்றிருந்த எருமைக்கு அவற்றைத் தன் கைகளால் தின்னக் கொடுத்தார். அந்த எருமை அவர்கள் அனைவரையும் பார்த்த பார்வையானது அங்கே மற்றோர் எருமை நின்றிருந்தால் அதற்கு இந்த எருமை அதைப் பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றி இருக்கும். இந்த நுண்ணிய மாற்றத்தை மோசாவால் உடனே உணர முடிந்தது. அவன் உடனே தரையிலிருந்து எழுந்து அமர்ந்தான்.அந்த எருமையைப் பார்த்துக் கத்தினான். “இந்த பூமியிலேயே வாழும் கடவுளான எருமையே! புனிதமான எருமைக்கடவுளே! இதோ இந்தப் பொல்லாத என் எதிரிகளைக் கொன்று அழித்துவிடு. உன் மனிதர்களான எங்கள் எதிரிகள் இவர்கள். உன்னுடைய புனிதமான கோயிலுக்கு உன் சந்நிதிக்கு அனுமதி இன்று இவர்கள் நுழைந்து விட்டார்கள். உன்னுடைய மகனான என்னையும் மிரட்டுகின்றனர். இவர்களுக்குச் சாவு ஒன்றே சரியான தண்டனை!” என்று கூறினான்.

அவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு த்வைபாயனர் அமைதியாக நின்றார். பின்னர் ஓர் புன்னகையுடன் அவர் சொன்னது, “மோசா ஏற்கெனவே கடவுளரால் உனக்குப் போதுமான அளவு தண்டனை கொடுத்தாயிற்று. உன்னுடைய முதல் மனைவி, உன் பட்டத்து அரசி, உன் தலைவன் பதவிக்கே ஓர் அடையாளமாக விளங்கியவள், உன்னை விட்டு அகன்று விட்டாள். நீ வேண்டாம் எனத் தூக்கி எறிந்து விட்டுச் சென்று விட்டாள். நீ பழையனவற்றை எல்லாம் மறந்துவிட வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். கோதுலி ஆசிரமத்தை எப்படி நீ எரித்துச் சாம்பலாக்கினாய் என்பதை நாங்களும் மறந்து விடுகிறோம். ஆசிரமங்களையும் அக்னியையும் மதிக்காமல் அவமதிப்பாக நீ செய்த அவச்செயல்களை எல்லாம் மன்னிக்கும்படி அந்த அக்னிக் கடவுளிடமே நான் வேண்டுகிறேன். உன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.”

சற்றும் பொறுமையின்றி அசட்டையாகவும் கோபம் குறையாமலும் மோசா அவர் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். தன் கண்களை அங்குமிங்கும் பயங்கரமாக உருட்டி அவர்களைப் பயமுறுத்த முயன்றான். அவனுடைய வெறித்தனம் முழுவதும் அவன் கண்களில் தெரிந்தது. அப்படியே த்வைபாயனரைப் பார்த்து உறுமினான் அவன். “ஏ, சூழ்ச்சிக்கார, நயவஞ்சக மந்திரவாதியே!” என்று கத்தினான். அவனுக்கு வந்த அடக்க முடியாத பெருமூச்சுக்களை அடக்கும் விதத்தில் தன் கைகளை வீசித் தன்னைத் தானே அடக்கிக் கொள்ள முயற்சி செய்தான். அவனைக் கருணை சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டே இருந்தார் த்வைபாயனர்.. பின்னர், “வல்லமை பொருந்திய மோசா, நான் மோசக்காரனோ, சூழ்ச்சிக்காரனோ அல்ல, மந்திரவாதியும் அல்ல! அதை நீ நன்கறிவாய்! நான் த்வைபாயனர். கிருஷ்ண த்வைபாயனர். இங்கே இதே கோதுலியில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த பராசர முனிவரின் மகன். பராசர முனிவர் தன் முன்னோர்களிடம் சென்று சேர்ந்து விட்டார். அந்தஆசிரமம் இப்போது புனிதமிக்கதாக விளங்குகிறது. ஒரு தீர்த்த ஸ்தானமாக விளங்கி என் தந்தையின் நினைவுகளை மக்கள் அங்கே வந்து வழிபட்டுப் போற்றும் இடமாக இருக்கிறது.”

பின்னர் மீண்டும் கீழே குனிந்து பசும்புற்களைக் கை நிறைய எடுத்து அந்த எருமைக்குத் தின்னக் கொடுத்தார். அவர் கைகளிலிருந்து அந்தப் புற்களை வாங்கி உண்ணுவதன் மூலம் அந்த எருமை அவரை அங்கீகாரம் செய்து விட்டதைக் கண்ட மோசாவுக்குத் திகைப்பு ஏற்பட்டது. ஏனெனில் இன்று வரை அத்தகைய ஒரு காரியத்தைத் தலைவனான அவன் மட்டுமே செய்ய முடியும்! வேறெவரும் செய்ததில்லை. அவன் கைகள் அடக்க முடியாத க்ரோதத்தால் நடுங்க ஆரம்பித்து விட்டன. “ஏ, புனிதமான எருமையே! நீயுமா என்னை ஏமாற்றுகிறாய்? எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்கிறாய்! இவன் என் எதிரி! இவன் கைகளால் புற்களை வாங்கித் தின்கிறாயே!” என்று கத்தினான். அவனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் கோபத்தால் நடுங்கியது. தன் குறுவாளை எடுத்துக் கொண்டு குதித்து எழுந்து அந்த எருமையின் கழுத்தைச் சீவத் தயாராகத் தன் கையை ஓங்கினான்.

சிறிது நேரம் அப்படியே நின்றவன் தொண்டையிலிருந்து ஓர் விசித்திரமான க்ரீச் என்னும் சப்தம் எழுந்தது. பின்னர் சில அடிகள் தள்ளிப் போனவன் மீண்டும் தன் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு முன்னே வந்து அந்தக் குறுவாளை எருமையின் கழுத்தில் பாய்ச்சினான். ஒருமுறை, இருமுறை, மூன்று முறைகள். எருமை வலி தாங்க முடியாமல் கத்தியது. அலறியது. அதன் காயங்களிலிருந்து ரத்தம் பெருக ஆரம்பித்தது. வாயிலிருந்தும் ரத்தம் வழிந்தது. தன்னைக் கட்டியிருந்த கயிறுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் பெரிதும் முயன்றது. கடைசியாக ஓர் முயற்சி செய்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்ற அது பின்னர் பரிதாபமாகக் கீழே விழுந்தது. ஈனமான குரலில் கத்திக் கொண்டே இருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அதன் குரல் அடங்கியது.

மோசா உடல் முழுவதும் எருமையின் ரத்தத்தால் குளித்திருக்க அவன் கைக்குறுவாளும் ரத்தம் கொட்டத் தன் பார்வையை அந்த மந்திரவாதியின் பக்கம் திருப்பினான். பழங்குடியினரின் அந்த மந்திரவாதிக்கு உடல் நடுங்கியது. அவனைப் பார்த்த மோசா, “ஏ, மந்திரவாதி, நீயும் என்னை ஏமாற்றி இருக்கிறாய்! இவன் பக்கம் சேர்ந்து விட்டாய்! பொல்லாத்வனே! நீ என்னிடம் என்ன சொன்னாய்? என்னைப் புனிதமான எருமைக்கடவுள் காப்பாற்றும் என்றல்லவோ சொன்னாய்! அதற்குச் சத்தியம் கூடச் செய்து கொடுத்தாயே! ஆனால் இதோ இந்தப் பொல்லாத மந்திரவாதியிடமிருந்து கூட உன்னால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை. உனக்கும் இது தான் கதி!” என்ற வண்ணம் தன் வாளைப் பழங்குடியினரின் அங்கீகரிக்கப்பட்ட அந்த மந்திரவாதியின் மார்பில் பாய்ச்சினான். அதன் பின்னர் மோசா ஓர் பைத்தியக்காரனைப் போல் சிரித்தான். வாளைத் தூக்கிக் கொண்டு அப்படியே த்வைபாயனரை நோக்கி ஓடி வந்தான்.

அதற்குள்ளாக மந்திரி குனிகரும் வில்லாளிகளும் மற்ற வீரர்களும் அவனைச் சூழ்ந்து கொண்டு விட்டனர். தன்னை அவன் விடுவித்துக்கொள்ள முயன்றதெல்லாம் பலிக்கவில்லை. கண்மூடித் தனமான கோபத்தில் இருந்த மோசா தன் சிவந்த கண்களால் கீழே விழுந்து கிடந்த அந்த மந்திரவாதியின் உடலைப் பார்த்தான். அவன் உடல் முழுவதும் ரத்தத்தால் குளித்திருக்க உயிர் தொண்டைக்குழியில் துடித்துக் கொண்டிருந்தது. மோசாவின் முகம் ஓர் அசிங்கமான விதத்தில் பழிப்புக் காட்டுவது போல் மாறியது. அவன் முகம் பார்க்கவே விகாரமாகக் காட்சி அளித்தது. அவன் தன்னை விடுவித்துக் கொள்ள மீண்டும் மீண்டும் முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. சற்றுத் தள்ளி அவனை அவ்வீரர்கள் இழுத்துச் சென்றனர்.

“ஏமாற்றுக்காரர்கள், சூழ்ச்சிக்காரர்கள், நயவஞ்சகர்கள்!” என்று கத்தினான் மோசா. “இதோ இந்த எருமையும் தான் என்னை ஏமாற்றியது. ஏ, எருமையே, நான் உன்னை எப்படி எல்லாம் வணங்கி வந்தேன். என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே! ஏ, மாமா, க்ருபா, நீ நல்லவன் என நம்பினேன், நீயும் என்னை ஏமாற்றி விட்டாய்! இதோ இந்த மந்திரவாதியும் என்னை ஏமாற்றி விட்டான். என் குலத்தின் மூத்தோர்களான நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை ஏமாற்றிப் பழி வாங்கி விட்டீர்கள்.” சற்றே நிறுத்தி விட்டு மூச்சு வாங்கிக் கொண்டவன், “என் மனைவி, அனைவருக்கும் தலைவி அவளும் என்னை ஏமாற்றி விட்டாள்.” என்ற வண்ணம் த்வைபாயனர் மேல் பாய்ந்து, “ஏ, மிருகமே, முனிவனே! நீ தான் எல்லோரையும் விடப் பெரிய நயவஞ்சகன்! நான் உன் மேல் புனிதமான எருமைக்கடவுளின் சாபத்தை எல்லாம் ஏவி விடுகிறேன். இங்குள்ள அனைவர் மேலும் ஏவுகிறேன். யாரும் தப்பிக்க முடியாது!”

இவ்விதம் கூறிய மோசா மிகுந்த பிரயத்தனம் செய்து அந்த வில்லாளிகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். வாளைப் பிடித்திருந்த அவன் கைகளை அவர்கள் இறுகப் பற்றி இருந்தார்கள். அந்தக்கையையும் முயன்று விடுவித்துக் கொண்ட மோசா அவர்கள் அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை ஊகித்து அறியும் முன்னர் அந்த வாளைத் தன் நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு விட்டான். ரத்தம் கொப்பளித்து வந்தது. மோசா பிணமாகக் கீழே விழுந்தான்.



1 comment:

ஸ்ரீராம். said...

தீயவனுக்கு நேரும் முடிவு.