Monday, July 25, 2016

ஆவேசம் அடைந்தாள் அம்பா!

“இன்னும் சிறிது மோர் குடியுங்கள் தாயே!” என்ற த்வைபாயனர் அந்தக் குடுவையில் மேலும் மோரை விட்டுத் தாயிடம் அளித்தார். மெல்ல மெல்லத் தன்னை ஆசுவாசம் செய்து கொண்டாள் சத்யவதி. “நாங்கள் என்ன நடக்கவேண்டும் என்று நினைத்தோமோ அது நடக்கவே இல்லை! மூன்று அரசகுமாரிகளில் இருவர் தான் விசித்திர வீரியனைத் திருமணம் செய்து கொண்டனர்.”

“அப்படியா? ஏன்? மூன்றாவது பெண் ஏன் மறுத்துவிட்டாள்?” த்வைபாயனர் கேட்டார்.

“அவள் மூன்றாவது பெண் இல்லை. முதல் பெண் அம்பா! அவள் விசித்திரவீரியனை மணக்க மறுத்துவிட்டாள். அவள் தன் தந்தையின் சம்மதத்துடன் சால்வதேசத்து மன்னன் சால்வனைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தாளாம். அதற்குத் தன் தந்தையிடம் சம்மதமும் வாங்கி இருக்கிறாள். இந்த சுயம்வரத்தில் அவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காத்திருந்திருக்கிறாள். அப்போது தான் காங்கேயன் வந்து மிகவும் முரட்டுத்தனமாக அவர்களைக் கடத்தி இங்கே கொண்டு வந்து விட்டதில் அவள் வாழ்க்கையே வீணாகி விட்டதெனச் சொல்கிறாள். “  மஹாராணி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கொஞ்சம் போல் மோரைக் குடித்துக் கொண்டாள். “காங்கேயன் மேல் தவ’று சொல்ல முடியாது. எப்போதும் போல் அவன் பெருந்தன்மையுடன் தான் நடந்து கொண்டான். இப்போதும் அவன் தன் தவறை ஒத்துக் கொண்டு அம்பாவின் தனிப்பட்ட உரிமையை மதிப்பதாகச் சொன்னான். ஆகவே அவளைத் தன் சொந்த சகோதரியைப் போல் நினைத்துக் கொண்டு குரு வம்சத்து இளவரசியைப் புக்ககம் அனுப்புகையில் செய்வது போல் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து அவளைப் பரிவாரங்களும், பரிசுப் பொருட்களும் புடை சூழ சால்வனிடம் அனுப்பி வைத்தான். மந்திரி குனிகரின் தலைமையில் சிறப்பான பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. நான் மிகவும் கேட்டுக் கொண்டதன் பேரில் அம்பாவுடன் துணைக்காக வாடிகாவும் சென்றாள்.”

“என்ன ஆயிற்று அந்த இளவரசிக்கு?” இடைமறித்தார் த்வைபாயனர்.

“கடவுளே, கடவுளே!” என்று தன் தலையில் ஓங்கி அடித்துக் கொண்டாள் மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதி. பின்னர் தொடர்ந்து, “சால்வன் அவளை மணக்க மறுத்துவிட்டான்.”மஹாராணியின் உருவமே ஏமாற்றத்தின் மறு உருவமாகக் காட்சி அளித்தது த்வைபாயனருக்கு.
அவன் சொன்னானாம். அவன் காங்கேயரால் தோற்கடிக்கப்பட்டு விட்டான். அந்த சுயம்வரத்தில் நடந்த போரில் சால்வனை காங்கேயன் தோற்கடித்து இருக்கிறான். அதுவும் பலர் கண்களுக்கு முன்னால் நடந்திருக்கிறது. ஆகவே வென்ற ஒருவன் அனுப்பி வைக்கும் பரிசாக வரும் எதையும் தோற்றவன் ஏற்க முடியாது என்னும்போது உயிருள்ள பெண்ணான உன்னை நான் எப்படி ஏற்பேன்? என்ன இருந்தாலும் உன்னை காங்கேயர் வென்றிருக்கிறார். ஆகவே என்னால் உன்னை ஏற்க முடியாது! ஒரு க்ஷத்திரிய வீரனாக என்னால் இப்படி ஒரு அவமானத்தை சகிக்க முடியாது!” என்று சொல்லி விட்டானாம்.

“அதன் பின்னர் என்ன நடந்தது?”

“ஒவ்வொரு துரதிருஷ்டமாக அடுத்தடுத்துத் தொடர்ந்து வந்தது!” என்ற சத்யவதியின் கண்கள் மீண்டும் கண்ணீரைப் பொழிந்தன. சற்று நேரம் கழித்து மீண்டும் தொடர்ந்தாள். “அம்பா அங்கிருந்து திரும்பி ஹஸ்தினாபுரம் வந்தாள். வரும்போதே கடும் கோபத்தில் குமுறிக் கொண்டு வந்தாள். காங்கேயனைக் கண்டபடி வசை பாடினாள். நிந்தித்தாள். அவள் வாழ்க்கையையே வீணாக்கிவிட்டதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டியவள், அவன் தன்னைத் திருமணம் செய்து கொண்டாக வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். அவன் செய்த தவறுக்கு அது தான் பரிகாரம் என்றும் கூறினாள். “ஆஹா, கடவுளே, கடவுளே!” என்றார் த்வைபாயனர். ஆனால் காங்கேயன் அசைந்து கொடுக்கவில்லை. அவள் என்னையும் சேர்த்துத் திட்டினாள். அதையும் தன்னைத் திட்டியதையும் சிறிதும் லட்சியம் செய்யாமல் தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்னும் உறுதி மொழி அனைவரும் நிறைந்த சபையில் எடுத்திருப்பதைச் சுட்டிக் காட்டினான். ஆகவே விசித்திர வீரியனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவளை வேண்டினான். இல்லை எனில் வேறு தக்க மணாளன் பெயரை அவள் தெரிவித்தால் அவனோடு அவள் திருமணத்தை நடத்தித் தருவதாக உறுதி கூறினான். “ சற்றே நிறுத்திவிட்டு மூச்சு வாங்கிக் கொண்டாள் சத்யவதி.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் சத்யவதி. பின் மேலும் தொடர்ந்து, “நானும் அவளை என்னோடு ஹஸ்தினாபுரத்திலேயே என் மகளாகத் தங்கி இருக்கும்படி வேண்டினேன். ஒரு குரு வம்சத்து ராஜகுமாரிக்கு என்னென்ன சலுகைகள், உரிமைகள் உண்டோ அனைத்தையும் அவள் அனுபவிக்கலாம் என்றும் உறுதி கூறினேன். இங்கேயே சில காலம் சௌகரியமாகத் தங்கி இருந்து பின் தனக்குப் பிடித்த மணாளனைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினேன்.”

“அவள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையா?”

“ஓ, மகனே, மகனே, அவள் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தால் அல்லவோ ஒத்துக்கொள்வாள்! வெடிக்கும் எரிமலையாக இருந்தாள். எந்நேரம் வெடிக்குமோ என எல்லோரும் அஞ்சினோம். நெருப்பை உமிழும் வார்த்தைகளை என் மேலும் காங்கேயன் மேலும் வீசினாள்.”சற்றே நிறுத்துவிட்டுக் கொஞ்ச நேரம் மௌனமானாள் சத்யவதி. பின்னர் தொடர்ந்தாள். “அதன் பின்னர் அவள் தன்னைத் தன் தாய்வழிப் பாட்டன் இருக்குமிடம் அனுப்பி வைக்கச் சொன்னாள். ஹோத்ர வாஹனா என்னும் அவர் இமயமலைப் பகுதியில் தன் முதுமைக்காலத்தைக் கழித்து வருகிறார். வானப் பிரஸ்தத்தில் இருக்கிறார். காங்கேயன் அவளை மணந்து கொள்ளவேண்டும் அல்லது அவன் கொல்லப்படவேண்டும் என்பதே அவள் முடிவு என்பதையும் தெரியப்படுத்தினாள்.”

“ஆஹா, எப்படிப் பட்ட பெண்! அது சரி, தாயே, அவள் கோரிக்கைக்கும் விருப்பத்துக்கும் நீங்கள் சம்மதித்தீர்களா?”

ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட சத்யவதி, “வேறு வழியில்லையே மகனே!” என்று ஆற்றாமையுடன் கூறினாள்.

“ம்ம்ம்ம், குனிகர் மற்றும் வாடிகா இருவரும் அவளுடன் தான் சென்றிருக்கின்றனரா?” என்று கேட்டார் த்வைபாயனர். “ஆம், மகனே!” என்றாள் தாய். “கடைசியாக வாடிகாவிடமிருந்து கிடைத்த செய்திப்படி அவர்கள் ரிஷி ஷைகவத்யரின் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாகவும் ஹோத்ர வாஹனர் என்னும் அம்பாவின் தாய்வழிப் பாட்டனாரும் அங்கே தான் இருப்பதாகவும் வந்தது. அவள் முடிவை மாற்றிக்கொள்ள அவளிடம் பேசிக் கடும் முயற்சிகள் செய்வதாகவும் செய்தி வந்தது.”

“வாடிகா எப்போது திரும்பி வருவாள்?”

“விரைவில் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அதற்குள்ளாக சூழ்நிலையே முற்றிலும் மாறிவிட்டது மகனே! மிகவும் மோசமாக ஆகி விட்டது.” என்ற வண்ணம் அவள் கண்களிலிருந்து அருவியாகக் கொட்டிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சத்யவதி. “சென்ற வாரம், அக்ருதவர்னா, மஹாரிஷியான பரசுராமரின் அத்யந்த சீடர் ஹஸ்தினாபுரத்துக்கு வந்தார். பரசுராமரிடமிருந்து செய்தியைக் கொண்டு வந்திருப்பதாகவும் சொன்னார். அவர் அந்த ஆசிரமத்துக்கு வந்திருக்கிறார். அம்பா தன் கதையை அவரிடம் சொல்லி அவர் இதில் தலையிட்டுச் சரியான முடிவு வாங்கித் தர வேண்டும் என்று கூறி இருக்கிறாள். ஏனெனில் காங்கேயனின் ஆசாரியர் பரசுராமர் அல்லவா? குரு சொன்னால் அவர் ஆக்ஞையை காங்கேயன் மீற மாட்டான் என்று எண்ணம்.” என்றாள்.

“ஆசாரியரின் செய்தி தான் என்ன?”

“ஆசாரியரின் செய்தி! நான் அவருடைய வார்த்தைகளை அப்படியே சற்றும் பிசகாமல் சொல்கிறேன் க்ருஷ்ணா! “காங்கேயா, நான் மஹா அதர்வர் ஜாபாலியின் ஆசிரமத்திற்கு அமாவாசை கழிந்த பின்னர் இரண்டு நாட்கள் சென்றதும் வந்து சேருகிறேன். நீ என்னை அங்கே வந்து பார்! உன்னால் வாழ்க்கையையே இழந்த அம்பாவைத் திருமணம் செய்து  கொள்ளத் தயாராக இரு! அல்லது என்னுடன் போருக்கு வா!” இது தான் ஆசாரியரின் செய்தி, க்ருஷ்ணா!” என்றாள் சத்யவதி கலக்கத்துடன். மீண்டும் மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள் அவள்.

“அம்மா, மாட்சிமை பொருந்திய இளவரசர் இந்தச் செய்தியின் முழு தாத்பரியத்தையும் புரிந்து கொண்டுவிட்டாரா?” த்வைபாயனர் கேட்டார். அவர் குரலில் பதட்டம் காணப்பட்டது. “மகனே, செய்தியில் உள்ள முக்கியத்துவம் தான் நன்றாகத் தெளிவாகத் தெரிகிறதே! காங்கேயன் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று செய்த சபதத்தை உடைத்தாகவேண்டும். அல்லது தன் குருவோடு போரிட்டு உயிர் துறக்க வேண்டும். இது தான் நடக்கவேண்டும் என்று அம்பாவின் விருப்பம். கிருஷ்ணா, கிருஷ்ணா, இரண்டில் எது நடந்தாலும் ஹஸ்தினாபுரத்துக்கு நன்மை பயக்காது. ஹஸ்தினாபுரம் சபிக்கப்பட்ட நகராக மாறிவிடும்!” என்று புலம்பினாள் சத்யவதி. மீண்டும் கண்ணீர் சொரிந்தவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை. திக்கித் திணறிய வண்ணம் தன் தலையில் நெற்றியில் என்று மாறி மாறி அடித்துக் கொண்டு அழுதாள்.

“ம்ம்ம், இதற்கு மேலும் நீங்கள் வேறெதுவும் பேசவேண்டிய அவசியமே இல்லை தாயே! எனக்கு எல்லாம் நன்றாகத் தெளிவாகத் தெரிகிறது. ஆசாரியருடன் போரிட்டு காங்கேயர் ஒருவேளை கொல்லப்பட்டால் குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இரு பிரிவாகப் பிரிந்து நின்று போரிட்டுக் கொள்வார்கள். ஒரு சாரார் காங்கேயர் பக்கமும் இன்னொரு சாரார் விசித்திரவீரியனுக்காகவும் குரல் கொடுப்பார்கள். காங்கேயர் பக்கமே அதிகமான ஆட்கள் இருப்பார்கள் அவர்களில் எவரும் விசித்திர வீரியனை மன்னனாக ஏற்க மாட்டார்கள். விசித்திர வீரியனோ உடல் அளவில் மட்டுமில்லாமல் மன அளவிலும் பலஹீனனாக இருக்கிறான். சஞ்சல புத்தி கொண்டவன். எவரையும் எளிதில் நம்ப மாட்டான். எவர் சொல்வதையும் கேட்கவும் மாட்டான். அவனால் தன்னந்தனியாக இத்தனை களேபரங்களையும் அடக்கி எவரையும் தன் வயப்படுத்த முடியாது! அவ்வளவு வலிமை அவனிடம் இல்லை!” என்றார் த்வைபாயனர்.

“மகனே, என் எதிர்காலமே இருட்டாகத் தெரிகிறது! நம்பிக்கையின் கீற்றொளி கூடக் கண்களில் படவில்லை! தர்மத்திற்கென நாம் எழுப்பும் அழகிய மாளிகை இடிந்து விழுந்து சுக்கு நூறாகிவிடும் போல் உள்ளது. அவ்வளவில் தர்மமே அழிந்து விடும்!” என்ற வண்ணம் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எங்கே சூனியத்தைப் பார்த்தவண்ணம் இருந்தாள் சத்யவதி!

பின்னர் மேலும் தொடர்ந்து, “கிருஷ்ணா! நான் ஏன் அரசியானேன்? ஒரு மீனவப் பெண்ணாகக் கல்பியிலேயே இருந்திருக்க மாட்டேனா? நான் இப்போதெல்லாம் இதைத் தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். நான் அங்கேயே இருந்து கொண்டு உன்னை வளர்த்துக் கொண்டு வருவதில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்க வேண்டும். யமுனைத் தாயை வணங்கி வாழ்த்திக் கொண்டு எத்தனை சந்தோஷமாக இருந்தோம் அங்கே நாம்! அந்த நாட்களில் இருந்திருக்க வேண்டும்.”

த்வைபாயனருக்குத் தன் தாய் கடந்து சென்ற சந்தோஷமான நாட்களை நினைத்துக் கலங்குவது புரிந்தது. அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார். அவள் முகத்தில் ஓர் புன்னகை அலங்கரித்தது. அந்தக் கனவு காணும் கண்களை மாற்றாமலேயே அவள் மேலும் பேசினாள்;”கிருஷ்ணா உனக்கு நினைவில் இருக்கிறதா? நான் உனக்கு யமுனையில் நீந்துவதற்குக் கற்றுக் கொடுத்தேனே! நீ மிகவும் பயப்படுவாய் மகனே! அந்த பயத்தில் நீயாகவே நீருக்குள் சென்று நீச்சலடிக்க மிகவும் தயங்குவாய்! ஆகவே நான் தந்திரங்கள் பலவும் செய்வேன். நான் நீருக்குள் மூழ்கி விட்டாற்போல் நடிப்பேன்; என்னைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நீ உன் பயத்தை எல்லாம் உதறிவிட்டு நீருள் மூழ்கி நீந்திக் கொண்டு வந்து என்னைக் கண்டு பிடிப்பாய்!” அவள் முகம் மேலும் புன்னகையில் விகசித்தது.

4 comments:

பித்தனின் வாக்கு said...

கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. தன் வினை தன்னைச் சுடும், இதுதான் பீஷ்மர் வாழ்விலும் நடந்தது. அதுசரி காங்கேயர் சபதம் ஏற்றவுடன் பீஷ்மர் (செயற்கறிய செயலை செய்தவர்) ஆகிவிட்டாரே, இன்னமும் காங்கேயர் பெயரில் அழைப்பது ஏன்?.

ஸ்ரீராம். said...

ஒரு கார்ச்சியைப் படிக்கும்போது நம் கற்பனையும் அந்த வரிகளுடன் சுருங்கி விடுகிறது. பீஷ்மர் அம்பாவை சால்வனிடம் திருப்பி அனுப்பினார் என்று படிக்கும்போது சாதாரணமாக நினைக்கத் தோன்றும். சகல சீர்வரிசைகளுடன், வாடிகாவையும் துணைக்கு அனுப்பி என்று படிக்கும்போதுதான் எப்படியெல்லாம் முறைகளைக் கடைப்பிடித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது!

sambasivam6geetha said...

கார்ச்சி? அல்லது காட்சி? புரியலை ஶ்ரீராம்!

@பித்தனின் வாக்கு, அவர் உண்மையான பெயர் காங்கேயர் தானே! பீஷ்மர் என்பது கடுமையான விரதம் எடுத்தவர் என்னும் பொருளில் வரும் பட்டப் பெயர். பின்னாட்களில் கௌரவர்களும், பாண்டவர்களும் பிறந்து இவரும் பிதாமஹர் ஆனதும் பீஷ்மப் பிதாமஹர் என்னும் பெயரில் அழைக்கப்படுவார்! :)

பித்தனின் வாக்கு said...

அவர் சபதம் எடுத்தவுடன் அசிரிரி வாக்கு இவனே பீஷ்மன் என்று உரைத்தாகவும், சபையிலும் சந்தனு மகாராஜா உட்பட அனைவரும் அவரை பீஷ்மர் என்று அழைத்தார்கள். குழந்தைகளுக்கு முதலில் ஆச்சாரியனாகவும் (பீஷ்மாச்சாரியார்) பின்னால் பீஷ்ம பிதாமகர் ஆகவும் அழைக்கப் பட்டார்.