Thursday, May 5, 2016

கோதுலியில் உபநயனம்!

அவ்வளவில் மகன் கையைப் பிடித்துக் கொண்ட பராசரர் தன் சீடர்களோடு சாம்பல் பிரதேசமாக மாறி இருந்த தன் முன்னாள் ஆசிரமத்துப் பகுதியைக் காணச் சென்றார். ஆயிரக்கணக்கான மனிதர்கள் அங்கே இறந்திருக்க வேண்டும். அந்தப் பகுதியே சுடுகாடாக மாறிப் போயிருந்தது. அதைப் பார்த்த பராசரருக்கு ஏற்பட்ட வேதனையை த்வைபாயனன் நன்கு புரிந்து கொண்டான். தன் தகப்பனை இறுக அணைத்துக் கொண்டு அவர் வேதனையில் தனக்கும் பங்கிருப்பதைக் காட்டிக் கொண்டு அவரை ஆசுவாசம் செய்தான். அதன் பின்னர் த்வைபாயனனிடம் கோதுலிக்குச் செல்வோம் எனக் கூறிய பராசரர் மேலும், “நான் இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் கடவுளிடம் என்னை மட்டும் அந்தக் கொடியவன் கரங்களால் இறக்கவிடாமல் ஏன் தப்புவித்தாய் என்று கேட்பேன். என் மாணாக்கர்களின் அபயக் குரலும், ஓலக்குரலும் இன்னமும் என் செவிகளில் வந்து மோதிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் துடிதுடித்து இறக்கும்போது  கொடியவர்களின் தாக்குதலினால் ஏற்பட்ட வலியின் கடுமையினால் ஓலமிட்டதும் இன்னமும் நினைவில் இருக்கின்றது.” என்றார். வருத்தத்துடன் தகப்பனும், மகனும் அந்தக் குக்கிராமத்துக்குத் திரும்பி இரண்டு நாட்கள் அங்கே தங்கினார்கள். பின்னர் கோதுலிக்குப் பயணப்பட்டார்கள்.

கோதுலியில் ஆசாரியர் கௌதமர் இவர்களைக் கண்டதும் ஆச்சரியத்தில் மூழ்கினார். ஆனால் பராசரர் தான் திரும்பி வந்ததன் காரணத்தைக் கூறியதும் கௌதமருக்கு மகிழ்ச்சி மேலிட்டது. த்வைபாயனனுக்கு பிரமசரிய விரதம் அநுஷ்டிக்க வசதியாக உபநயனம் செய்விக்கப் போவதாயும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தகுந்த நல்ல நக்ஷத்திரம் கூடிய சுபநாளில் செய்யப் போவதாகப் பராசரர் சொன்னார். அதைக் கேட்டு கௌதமர் சந்தோஷம் அடைந்தார். ஆவலும், மிகுந்த எதிர்பார்ப்பும் ஏற்படப் பரபரப்புடன் இருந்தான் த்வைபாயனன். அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களுடன் சேர்ந்து அவர்கள் வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டான். ஆலிலைகளினால் மாலைகள் கட்டினான். அங்குள்ள பெரிய ஆலமரத்தினடியில் இருந்த அக்னிக் குண்டத்தில் நெருப்பு பகலிலும் இரவிலும் இடைவிடாது எரிய வேண்டி அதற்கான தேவையான உதவிகளைச் செய்தான். ஆசிரமத்துப் பெண்கள் அனைவரும் கௌதமரின் மனைவியான ஷர்மியின் தலைமையில் பராசரரைப் பெரு மதிப்புடனும், மரியாதையுடனும் வரவேற்று அவருடைய தவங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். பராசரரின் மகனான சிறுவன் த்வைபாயனனின் ஒளி பொருந்திய கண்களும், எப்போதும் புன்னகையுடன் இருக்கும் மலர்ந்த முகமும், அனைவருக்கும் அநுசரணையுடன் உதவி செய்யும் சுபாவமும் அவர்களை மிகவும் கவர்ந்தது. இப்போதே வேதம் முழுதும் கற்றவனைப் போல் அவன் நடந்து கொண்ட முறையும் கேட்கும் எண்ணற்ற கேள்விகளும் அவன் அறிவுக்கூர்மையைப் பறைசாற்றின.

த்வைபாயனனும் அந்த ஆசிரமப் பெண்டிருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் முன்னணியில் நின்றான். அவனுக்குத் தான் மறுபடி பிறக்கவேண்டும் எனில் தாய் வேண்டுமே! அப்போது தன் தாய் இவர்களுக்கு நடுவே திடீரெனத் தோன்றுவாளோ என்னும் எண்ணமும் அவ்வப்போது தலை தூக்கியது! பராசரர் இரவில் நக்ஷத்திரங்களின் போக்குவரத்தைக் கண்காணித்து ஒரு நல்ல நாளையும், நேரத்தையும் நிர்ணயித்தார். ஆசிரமவாசிகள் மட்டுமின்றி அந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் இந்த மங்கள நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். அனைவரும் அவரவர் வீடுகளை அலங்கரித்தனர். கிராமத்தின் முக்கியத் தெருக்களும் அலங்கரிக்கப்பட்டன. சுற்றி இருக்கும் கிராமங்களில் உள்ள மக்களும் இந்நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு கூட்டம் கூட்டமாக அங்கே வர ஆரம்பித்தனர். கோதுலி கிராமமே விருந்தினர்களால் திளைத்தது. நொண்டி முனியின் மகனுக்கு பிரமசரிய விரதம் ஆரம்பம் ஆகப் போகிறது என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டி ஆசிரமத்துக்கு வர ஆரம்பித்தனர். வாத்தியங்கள் வாசிப்போர், கொட்டு மேளங்கள் முழக்குவோர், எக்காளங்கள் ஊதுவோர், பேரிகை முழக்குவோர், சங்குகளை ஊதுபவர்கள் என அனைவரும் வந்து கூடி வாத்தியங்களை வாசித்து மங்கள நிகழ்ச்சி நடக்கப்போவதை உலகுக்கே அறிவித்தனர். சடங்குகள் ஆரம்பிக்கும் முன்னர் பராசர முனிவர் கிரஹங்களை வழிபட்டு நன்மையே நடக்கவேண்டும் என்பதாகப் பிரார்த்தித்துக் கொண்டார்.

த்வைபாயனனுக்குத் தன் தாய் அங்கே இல்லாதது மிகவும் வருத்தமளித்தது. அதிலும் மங்கள நிகழ்ச்சியில் அவனுடைய பிறப்பும், பெயர் சூட்டுதலும் முக்கியமான நிகழ்வாக இருந்தபோது இதற்குக் காரணம் ஆன தன் தாய் அங்கே இல்லையே என வருத்தமடைந்தான். ஆனால் தன் தந்தை மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் கவனித்துக் கொண்டான். அவருடைய எரிந்து போன ஆசிரமத்திலே அவர் அடைந்த துக்கத்தின் சுவடு கூட இப்போது இல்லை என்பதையும் பார்த்தான். அதிலும் தர்மக்ஷேத்திரத்தை மீண்டும் புநர் நிர்மாணம் செய்யப் போவதில் தன் தந்தையோடு தனக்கும் பங்கு இருக்கப் போகிறது என்பதை நினைத்து த்வைபாயனன் மிகவும் சந்தோஷம் அடைந்தான். ஆயிற்று. இதோ சாஸ்திர ரீதியான சம்பிரதாயச் சடங்குகள் தொடங்கி விட்டன.