Sunday, May 29, 2016

த்வைபாயனருக்கு ஆபத்து!

“ஒருவன் வாழ்க்கையில் அவன் கடைப்பிடிக்கும் தர்மமே முக்கியம். அந்த தர்மத்தை நிலைநாட்டவேண்டிய பொறுப்பு மனிதனுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. அந்த மனிதனும் வேதங்களையே பிரமாணமாய்க் கொண்டு அதற்காகவே உயிர் வாழ்பவனாக, அதையே எப்போதும் நினைத்துத் தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பவனாக இருக்க வேண்டும். இந்தப் பரந்த உலகம் அத்தகைய மனிதர்களுக்காகவே காத்திருக்கிறது. ஆகவே தர்மக்ஷேத்திரத்தை எப்பாடுபட்டாவது மீட்டு அதில் மீண்டும் தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே என் கனவு, லட்சியம் எல்லாம்!”

“நீ பேசுவதைப் பார்த்தால் பழங்காலத்தின் ரிஷிகளான பிருகுவும், ஆங்கிரஸும் இத்தகைய துணிகர முயற்சிக்குத் தங்கள் ஆசிகளைத் தெரிவித்து விட்டார்கள் போல் பேசுகிறாயே!”

“ஆசாரியரே! என் தந்தை பராசர முனிவர் சொல்லி இருப்பது என்னவெனில், “வேதங்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்களை அதன் தர்மத்தை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிப்பவர்களை அவர்களின் பிரார்த்தனைகளைக் கடவுள் அங்கீகரித்து ஆசிர்வாதங்கள் செய்கிறார்.” என்று சொல்வார்.”

“ஹூம், இருக்கலாம்! ஆனால் உன் கொள்ளுப் பாட்டன் வசிஷ்டன் மஹா ரிஷிகளான பிருகுவையும், ஆங்கிரஸ் அவர்களையும் அவமதித்து விட்டார். பிரம்ம வித்யையை இகழ்ந்ததன் மூலம் அவர்களின் சாபத்தைப் பெற்று விட்டார். அவர்கள் ஒருக்காலும் வசிஷ்டரை மன்னிக்கவில்லை; இனியும் மன்னிக்க மாட்டார்கள்! அவர்களின் வழியில் செல்பவர்களையும் மன்னித்து ஆசீர்வதிக்க மாட்டார்கள்.” கடுமையாகச் சொன்னார் ஜாபாலி.

“மதிப்புக்குரிய ரிஷியே, என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளவேண்டுகிறேன். நான் ஏற்கெனவே தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்த பின்னர் அதர்வ வேதம் அறிந்த ஆசாரியர் ஒருவரிடம் சீடனாகச் சேர்ந்து அதர்வ வேதம் கற்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தேன். எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் உதவியால் இப்போது நான் உங்களிடம் வந்து சேர்ந்து விட்டேன்.”

“நான் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் முட்டாள் தனமாக நீ தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பதை விட்டு விட வேண்டும். அந்த எண்ணத்தையே விட்டு விட்டால் நான் உன்னை என் சீடனாக ஏற்கிறேன்.”

“ஐயா, என் தந்தையின் கனவு அது! அவர் அதற்காக சபதம் செய்திருக்கிறார். நானும் அவருடன் சேர்ந்து சபதம் செய்திருக்கிறேன். அதை எப்படி என்னால் விட முடியும்? என் சபதத்தை என்னால் துறக்க முடியாதே!”

முதிர்ந்த மஹரிஷி தன் வயதையும் மீறி கம்பீரமாக எழுந்து நின்றார். பின்னர் கடுமையான குரலில், “நீ மட்டும் அப்படி ஓர் முடிவுடன் இருந்தாயெனில் பின்னர் அதற்காக நீ வருந்த நேரிடும்! இது உனக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை!” என்று கடுமையான குரலில் சொன்னார்.

“ஆசாரியரே, என் சபதத்தை நான் நிறைவேற்றவில்லை எனில் நான் உயிருள்ள பிணமாகத் தான் இருப்பேன். மேலும் நான் மேலுலகம் செல்கையில் அங்கே என் முன்னோர்களை எந்த முகத்துடன் பார்ப்பேன்? அவர்கள் உன் சபதத்தை நிறைவேற்றவில்லையே என என்னைக் கேட்க மாட்டார்களா?”

வாடிகாவுக்குத் தன் தந்தையின் மனப்போக்கும், அவர் கோபமும் நன்கு அறிந்தது தான். ஆகவே அவள் மிக முயற்சி எடுத்துக் கண்களால் ஜாடைகள் காட்டி த்வைபாயனரைத் தன் தகப்பனைக் கோபம் கொள்ளும்படி பேச வேண்டாம் என்று எச்சரித்துப் பார்த்தாள். ஜாபாலிக்கு உடலெல்லாம் கண்கள். அவருக்கு இது தெரியாமல் போகவில்லை. ஆகவே மிகக் கடுமையாக த்வைபாயனரிடம், “ வாடிகாவும் சுமாந்துவும் என்ன தான் உன்னை எச்சரித்தாலும், என்னைக் கோபப்படுத்துமாறு பேச வேண்டாம் என ஜாடைகள் காட்டினாலும்”….. கோபத்துடன் சிரித்த ஜாபாலி மேலும் கூறினார். “இந்தக் குழந்தைகள் நான் உன்னுடைய மென்மையான பேச்சாலும், அப்பாவியான முகத்தாலும் கவரப்பட்டு உனக்கு வேண்டியதைச் செய்வேன் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் நடக்காது.”

பின்னர் மேலும் கடுங்கோபத்துடன், “ஆசாரியர்களான பிருகு முனிவர் மற்றும் ஆங்கிரஸின் கோபம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உன் முயற்சிகளை எல்லாம் பாழ்படுத்தும்.” இதைச் சொல்லிக் கொண்டே சுமாந்து உதவி செய்ய ஜாபாலி வெளியே சென்றார். த்வைபாயனர் தன் தலையை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு செய்வதறியாது அமர்ந்திருந்தார். அங்கே வாடிகாவும், சுமாந்துவும் வந்தனர். தான் சுக்குச் சுக்காக நொறுங்கிப் போனதாக அவர் உணர்ந்தார். அவருக்குப் பெரிய குரலெடுத்து அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று அவரைத் தடுத்தது. எங்கோ தொலைதூரத்தில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுத் தெரிந்தது. வாடிகாவும், சுமாந்துவும் மூலிகையை அரைத்துக் கொண்டு வந்திருந்தனர். த்வைபாயனரின் காயத்தில் அதைப் பூசினார்கள். அதன் பின்னர் வாடிகா மூலிகைக் கஷாயத்தையும் த்வைபாயனருக்குக் குடிக்கக் கொடுத்துவிட்டுப் பின் வெளியே சென்றாள். சுமாந்து பைலருக்குக் கொஞ்சம் குடிநீர் கொடுத்துவிட்டுப் பின்னர் அவரைப் புரட்டிப் போட்டார். த்வைபாயனருக்கு அருகிலிருந்த இலைகளால் மெத்தெனப் போடப் பட்ட மெத்தையில் படுக்க வைத்தார். அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த த்வைபாயனருக்கு மூலிகைக் கஷாயத்தின் தாக்கத்தால் மயக்கம் வந்தது. அப்படியே மயக்கத்தில் ஆழ்ந்தார். அப்போது அந்த மயக்கமான சூழ்நிலையில் அவருக்குத் தன் தாயின் குரல் தெளிவாகக் கேட்டது. “கிருஷ்ணா! கிருஷ்ணா! எங்கே இருக்கிறாய் நீ? ஏன் என்னிடம் வரவில்லை?” ஆஹா, இது அம்மாவின் குரலே தான்.

தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டார் த்வைபாயனர். பக்கத்தில் பார்த்தார். பைலர் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவ்வப்போது ஒரு சிறு முனகல் குரலைத் தவிர அவரிடமிருந்து எவ்வித அசைவும் இல்லை. சுமாந்துவும் தூங்கி விட்டான். வெளியிலிருந்த அக்னி குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த அக்னியின் பரவலான வெளிச்சம் அந்தக்குடிலினுள்ளும் பரவிக் கிடந்தது. அதன் மெல்லிய வெளிச்சத்தில் ஓர் உருவம் அந்தக் குடிலுக்குள் நுழைவதைக் கண்டான். பெண் உருவமாக இருந்ததால் அது வாடிகா என்றும் தன் சகோதரனைப் பார்க்க வந்திருக்கிறாள் என்றும் புரிந்து கொண்டார் த்வைபாயனர். சுமாந்துவின் தோளில் கை வைத்து எழுப்பினாள் வாடிகா. சகோதரனும், சகோதரியும் கிசுகிசுவென மெல்லப் பேசிக் கொண்டனர். பின்னர் இருவரும் த்வைபாயனரின் அருகே வந்தனர்.

“த்வைபாயனா, விழித்திருக்கிறாயா?” த்வைபாயனர் எழுந்து கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு தான் கனவுலகில் இருக்கிறோமா அல்லது நினைவுலகில் இருக்கிறோமா என யோசித்தார். வாடிகா மெதுவாகச் சொன்னாள்:”த்வைபாயனா, நாளைக்கு உனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை நீ அறிவாயா?” என்று கேட்டாள்.

“எனக்கு எப்படித் தெரியும்?” என்றார் த்வைபாயனர்.

“தந்தை உன்னை மரணத்தின் பிடியில் தள்ளப்போகிறார்.  உன்னை மரணம் சம்பவிக்கும்படி உன் மேல் அதற்காக மந்திரம் போட்டு வசியம் செய்யப் போகிறார். நாளை அக்னிக்கான வழிபாடுகள் முடிந்ததும் அது ஆரம்பிக்கப் போகிறது.”

“மரணம் சம்பவிக்க மந்திரமா? வசியமா? அப்படி என்றால் என்ன? எனக்கு இது குறித்து எதுவும் புரியவில்லையே!”

“அது ஒரு வசியம்! அந்த வசியத்தைப் போட்டால் நீ மூன்று நாளைக்குள் இறந்துவிடுவாய்!” சுமாந்து சொன்னான்.

“ஏன் என்னைக் கொல்ல வேண்டும்? அதில் அவருக்கு என்ன லாபம்?”

வாடிகா குறுக்கிட்டாள். “இதோ பார், த்வைபாயனா! இங்கே இப்போது பேசிக் கொண்டு நீ பொழுதைப் போக்கி விடாதே! இங்கிருந்து வெளியேறும் வழியைப் பார். என்னெதிரில் தான் அவர் இதைத் தன் சீடன் ஒருத்தனிடம் சொன்னார். அந்த வசியத்தை எப்படித் தயார் செய்ய வேண்டும் என்றும் மூன்று நாட்களுக்குள்ளாக நீ எங்கே இருந்தாலும் உனக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென்றும் சொன்னார். அவர் சொன்னபடி வசியத்தைத் தயாரிக்கப் போகிறார்கள்.”

“அவர் ஏன் என்னைக் கொல்ல வேண்டும்? நான் எந்தத் தவறும் செய்யவில்லையே!”

“நேற்று உன்னிடம் பேசியதில் அவர் நீ ஓர் திடமான உறுதி படைத்த இளைஞன் என்றும் தன்னம்பிக்கையும், நன்கு படிப்பறிவும் கொண்டவன் என்றும் புரிந்து கொண்டார். ஆகவே அதன் பின்னர் அவர் கிரஹங்களை ஆய்வு செய்தார். அதன் பின்னரே உன்னை இவ்வுலகிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்னும் எண்ணம் கொண்டார். ஆனால் நாங்கள் நேரத்தை வீணடிக்காமல் உன்னை இங்கிருந்து கிளப்புவதற்கு உதவி செய்ய வேண்டும். எழுந்து போ! உடனே வெளியேறு! இதோ இந்த மூலிகைக் கஷாயத்தை உன்னுடன் வைத்துக் கொள். இதை நான் உனக்காகத் தயாரித்து எடுத்து வந்தேன். இந்தப் பையில் உன் நண்பன் பைலரின் சேகரிப்பான மூலிகைகள் இருக்கின்றன. மேலும் உன்னுடைய பையில் நான் முக்கியமான சஞ்சீவி மூலிகைகளான, ஜிவாலா, நாக-ரிஷா, ஜிவாந்தி ஆகியவற்றைப் போட்டு வைத்திருக்கிறேன். ஆனால் அதற்கென உரிய மந்திரங்களைச் சொல்லி உபயோகப்படுத்தினால் தான் அவற்றில் பலன் தெரியும்.” என்றாள் வாடிகா. அவள் மிகவும் ரகசியமாக இவற்றைச் சொன்னாள்.




No comments: