Tuesday, May 17, 2016

வேதங்கள் துணை செய்ய வாழ்வேன்!

தன் தாய்க்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்கவேண்டி இப்படிச் செய்தாலும் த்வைபாயனர் முழு மனதுடன் அந்தக் கிராமவாசிகளின் நலனை வேண்டினார். பின்னர் அவர் கேட்டுக் கொண்டதின் பேரில்ன் அந்தக் கிழவி ஒரு தண்ணீர்ப்பானையில் ஈரமண்ணை நிரப்பி அதை மூடி வைக்க ஒரு மூடியையும் அதன் வாய்க்கேற்றாற்போல் கொடுத்தாள்.கூடவே கொஞ்சம் வெல்லமும், எலுமிச்சையும் கொடுத்தாள். த்வைபாயனர் அங்கிருந்த அரசமரத்தில் இருந்து ஒரு இலையைக் கிள்ளினார். அந்த ஈரமண்ணால் நிரம்பி இருந்த பானையில் அந்த இலையைப் போட்டார். பின்னர் வெல்லத்தையும் எலுமிச்சைச்சாறையும் கலந்து குழைவாக்கி அந்தக் கிழவி கொடுத்த மூடியால் அந்தப் பானையை மூடி வெல்லக் கலவையால் சுற்றிலும் பூசினார். மூடி நன்கு உறுதியாகப் பதிந்து விட்டது என்பது உறுதியானதும் அதை மெதுவாக நதியில் மிதக்க விட்டார். பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன இது, த்வைபாயனா? இதன் பொருள் என்ன?” என்று பைலர் கேட்டார். இப்படி ஒரு சடங்கை அவர் அன்று வரையில் பார்த்ததே இல்லை. த்வைபாயனரின் முகமும் வாடி இருந்தது. கண்களில் துக்கம் தெரிந்தது. பின்னர் அவர் உணர்ச்சி ததும்பினாலும் மெல்லப் பேசினார்:” அம்மாவுக்கும் எனக்கும் ஓர் உடன்படிக்கை இருந்து வந்தது. அம்மாவுக்கு என்னிடம் ஏதேனும் கோபம் வந்துவிட்டால் நான் அவளுக்கு ஓர் அரச இலையை என் மன்னிப்புக்கோரிக் கொடுப்பேன். அம்மாவுடன் அப்போது நான் பேச முடியாது. மௌனமாகவே இருக்க வேண்டும். ஆனால் அந்த இலையைப் பார்த்ததும் அம்மா என்னை மன்னித்துவிடுவாள். நான் அவளிடம் கோபமாக இருந்தேன் எனில் இதே போல் தான் அவள் எனக்கு ஓர் அரசிலையைக் கொடுப்பாள். நானும் கோபம் தணிந்து அம்மாவைப் புரிந்து கொள்வேன்.”

“அதெல்லாம் சரிதான் த்வைபாயனா! ஆனால் நீ அரசிலையை இந்தப் பானையில் போட்டு மூடி நதியில் அல்லவோ மிதக்க விட்டிருக்கிறாய்? இதன் பொருள் என்ன?”

“பைலரே, அம்மா எங்கே இருக்கிறாளோ, எனக்குத் தெரியாது! இங்கேயும் யாருக்கும் தெரியவில்லை.” என்றபடி யமுனையையே சிறிது நேரம் மிகுந்த பாசத்துடன் பார்த்தார் த்வைபாயனர். பின்னர் மீண்டும் சொன்னார்: “பைலரே, நான் இதை யமுனைத்தாயிடம் விட்டு விட்டேன். அம்மா இருக்குமிடத்தைக் கண்டு பிடிப்பது அவள் பொறுப்பு. அம்மா இருக்குமிடத்துக்கு இந்தப் பானையைக் கொண்டு செல்வதும் அவள் பொறுப்பு. இதைப் பார்த்ததும் அம்மாவும் புரிந்து  கொள்வாள். யமுனைத் தாயும் புரிந்து கொள்வாள். நான் அம்மாவை விட்டுச் சென்றதற்கு இருவருமே என்னை மன்னிப்பார்கள்.” மூன்றாம் நாள் காலையில் அந்தத் தீவிலிருந்து அவர்கள் திரும்பிச் செல்வதற்கான படகு வந்து விட்டது. அங்குள்ள மீனவர்கள் அனைவரும் ஒன்று கூடி அவர்களை வழியனுப்பி விட்டு மீண்டும் வருகை தருமாறு வேண்டிக் கொண்டார்கள்.

“நான் திரும்ப வருவேனா என்ன என்பது எனக்குத் தெரியாது! ஆனால் நான் திரும்பினாலும்………”என்ற த்வைபாயனர் அந்த வயதான கிழவியைப் பார்த்து, “தாயே, உன்னை நான் மீண்டும் சந்திப்பேனா என்ன என்பது எனக்குத் தெரியவில்லை! எனக்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டுமே!” என்று வேண்டினார். “நான் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், சுவாமி!” என்றாள் அந்தக் கிழவி. ‘இந்தக் கிராமத்தில் விழுந்திருந்த சாபத்தை நீக்கி எங்களுக்கெல்லாம் நல்வழி காட்டியவர் நீரல்லவோ, சின்ன முனிவராக இருந்தாலும் உம்முடைய கீர்த்தி பெரிதாக இருக்கிறது. என்ன வேண்டுமோ சொல்லுங்கள்!” என்றாள் கிழவி.

“அப்படி எனில், தாயே, தயவு செய்து ஜாருத்தின் பெண்ணைக் குறித்துத் தவறாக நினைக்காதீர்கள்; தவறாகப் பேசாதீர்கள்!”

“அது எப்படி சிறுமுனியே, அவள் ஒரு வெட்கம் கெட்ட பெண்! எந்த அம்மாவும் தன் பிள்ளையை இப்படிப் பிரிந்து வாழச் சம்மதிப்பாளா? இவள் சம்மதித்திருக்கிறாளே!”

“தாயே, மச்சகந்தியின் அந்த மகன் நான் தான்!”

கிழவி அதிர்ச்சியில் கீழே விழுந்துவிடுவாள் போலிருந்தது. மிகவும் பயத்துடன் த்வைபாயனரைப் பார்த்து, “சிறுமுனியே, என்னை மன்னித்து விடும். என்னிடம் கோபம் கொண்டு சபித்து விடாதீர். உம் ஆசிகள் எனக்குத் தேவை!” என்றாள்.

“தாயே, உனக்கு எங்கள் ஆசிகள் எப்போதும் உண்டு; ஆனால், என் தாய் என்னைப் பிரிந்தது என் நன்மைக்காவே தான்! மனமொப்பி இல்லை.”

இதைச் சொல்லிவிட்டுப் படகில் ஏற ஆயத்தமானார் த்வைபாயனர். படகில் ஏறுமுன் கரை ஓரத்தில் நின்றவண்ணம் யமுனையையே மிக சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் த்வைபாயனர். இந்த யமுனை ஒரு தாயைப் போலவே என்னையும் தொட்டிலில் போட்டு ஆட்டி இருக்கிறாள். இவளுடன் நான் எப்படி எல்லாம் விளையாடி இருக்கிறேன். பெருமூச்சு விட்டார் த்வைபாயனர். சூரிய ஒளியில் நீர்ப் பிரவாகம் வெள்ளியைப் போல் பிரகாசித்தது. யமுனையின் இரு கரைகளையும் தன்னால் முடிந்தவரை திரும்பத் திரும்பப் பார்த்த த்வைபாயனர் அதிகம் மாற்றம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் தன் தந்தைக்காகக் காத்திருந்த நாட்களில் நீரின் பரப்பு விண்ணின் மேற்குப் பகுதியில் போய்ச் சேரும் அடிவானத்தையே உற்று நோக்கினார். அம்மாவை அங்கே தேடினாரோ? ஒரு கண நேரத்திற்கு அவர் தன் வாழ்க்கையில் தன் தந்தையைத் தான் தேடி நின்று கொண்டு இருக்கும் அந்தக் காலத்திற்கே சென்று விட்டார். மீண்டும் அப்படி நிற்பது போன்ற உணர்வு!

அவர் அப்படிக் காத்திருக்கையில் அவர் தாய் ஓர் உத்வேகத்துடன் வந்து அவரிடம் பேசுவது போலவும் அவருக்குத் தோன்றியது. ஆனால்….. ஆனால்….. அவர் இதயத்தில் மாபெரும் அடி விழுந்து விட்டது. இடியாக விழுந்த அந்த அடி அவர் மனதை நோக அடித்துவிட்டது. அவர் தாய் அங்கே இல்லை. எங்கேயோ போய்விட்டாள். எங்கே என்றே தெரியவில்லை! எங்கே சென்றாள் என்றோ யாருடன் சென்றாள் என்பதோ அவருக்குத் தெரியாது. அவர் தாய் தான் அவரை “கிருஷ்ணா” என அழைப்பாள். இனி யார் அப்படி அழைக்கப் போகிறார்கள்? அப்படி அம்மா தன்னை கிருஷ்ணா என அழைப்பதை இனி கேட்போமா? ஓர் வெறுமை அவரைப் பற்றிக் கொண்டது. தந்தைக்காவது வயதாயிற்று இறந்தார்; தாய் இருக்கிறாள் என நினைத்தால்! இருக்குமிடமே தெரியவில்லையே! தன் தந்தைக்காகக் காத்திருந்த சிறு பையன் அல்ல அவர் இப்போது! இளைஞனாகி விட்டார். அவர் தந்தையை அவர் இனி பார்க்க வேண்டுமெனில் த்வைபாயனராகிய அவரும் பித்ருலோகம் தான் செல்ல வேண்டும். ஆனால் தாயை எங்கு பார்ப்பது?

அவர் மனதிற்குள் வருணனை வழிபட்டு அவர் தாய் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டார். ஒருவேளை அவள் பித்ருலோகம் போயிருந்தாலும் அங்கேயும் தந்தையைக் கவனித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கட்டும். தன் தாயும், தந்தையும் மகிழ்வுடன் இருக்க வேண்டிய மந்திரங்களை அவர் சொல்ல ஆரம்பித்தார். சொல்லச் சொல்ல அவர் மனதில் சாந்தி பிறந்தது. நம்பிக்கையும் உண்டாயிற்று. அவர் தனியாக எங்கே இருக்கிறார்? அவருடன் வேதங்கள் இருக்கின்றனவே! அவற்றை அவர் தந்தை காட்டிய வழியில் தொகுக்க வேண்டும். அது மட்டுமா? தர்மக்ஷேத்திரம் புனர்நிர்மாணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறதே! அதை அவர் கவனிக்க வேண்டாமா?

1 comment:

வல்லிசிம்ஹன் said...

கிருஷ்ண த்வைபாயனருக்கு வரும் சோதனைகள் அத்தனையும் சீராகட்டும்.
வருங்காலத்தில் மாமுனிவராக பரத வம்சத்தைக் காக்கப் போகிறார் அல்லவா.
நன்றி கீதா.