Friday, May 13, 2016

த்வைபாயனன் ஆசாரியனாகிறான்!

பைலரை ஆசாரியராக்கியதற்கான சடங்குகள் முறைப்படி நடந்தன. பைலருக்கும், த்வைபாயனனுக்கும் இடையே ஏதோ சொல்ல முடியாததொரு பந்தம் பிணைத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் மிக நேசித்தார்கள். அன்புடன் நடந்து கொண்டார்கள். இத்தனை வருடங்களில் பைலர் சொல்ல முடியாததொரு துயரத்தில் இருந்து வந்தார். அவரால் ஒரு சில மந்திரங்களைச் சரியாகச் சொல்ல முடியாமல் சிரமப்பட்டார். தைரியமாகவோ, எளிமையாகவோ அவரால் அந்த மந்திரங்களை உச்சரிக்க முடியவில்லை. ஆனால் த்வைபாயனன் அவற்றில் எல்லாம் விரைவில் தேர்ந்து விட்டான். ஆகவே பைலர் ஒரு சமயம் வாய்த்தபோது த்வைபாயனனைத் தனக்குச் சொல்லிக் கொடுக்கும்படியும் பயிற்சி அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். தன்னை விட த்வைபாயனன் சிறுவன் என்னும் எண்ணமே பைலரிடம் இல்லை. மிகவும் அடக்கத்துடனும், சற்றும் அகங்காரமின்றி த்வைபாயனனைத் தன்னுடைய பாலகுருவாகக் கருதி அவனிடம் கற்க ஆரம்பித்தார்.

வருடங்கள் சென்றன. கிட்டத்தட்டப் பத்து வருடங்கள் அவர்கள் ஒவ்வொரு ஆசிரமமாகச் சென்றனர். அங்குள்ள மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளித்தனர்; வேதங்களை ஓதும் முறைகளையும் யாகங்களையும், யக்ஞங்களையும் நடத்தும் முறைகளையும் சொல்லிக் கொடுத்தார்கள். சுற்று வட்டாரக் கிராமங்களிலுள்ள நோயுற்றவர்களுக்குத் தக்க சிகிச்சையும் அளித்து வந்தார்கள். பத்தாவது வருடம் முடியும் வேளையில் பராசரர் அவர்களை எல்லாம் மற்றப் பிரபலமான ஆசாரியர்கள் நடத்தும் பெரிய பெரிய ஆசிரமங்களைக் காண அழைத்துச் சென்றார். அவர்களிடம் தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்வது குறித்தும் ஆலோசனைகள் நடத்தினார். அவர்களில் சிலரிடம், “அடுத்த இரண்டு வருடங்கள் பத்ரிநாதரைத் தரிசிக்கப் புனித யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளோம். உங்களில் யார் வருகிறீர்கள்?” என்று கேட்டார். பலரும் வருவதற்கு விருப்பம் தெரிவித்தாலும் ஒவ்வொரு ஆசிரமத்திலிருந்தும் ஒரு பிரமசாரி என்னும் கணக்கில் இருபது பிரமசாரிகள் பராசரால் தேர்வு செய்யப்பட்டனர்.

பத்ரிநாதரைத் தரிசிக்கச் செல்லும் புனிதப் பயணத்தில் அவர்கள் கங்கைக்கரையில் அமைந்த ஆசிரமங்களுக்குச் சென்றார்கள். தர்மக்ஷேத்திரத்தில் இருக்க முடியாமல் அவர்களில் பலரும் இங்கே கங்கைக்கரைக்கு வந்து ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார்கள்.   இப்போது இருபது பிரமசாரிகளையும் சேர்த்துப் பராசரரின் குழுவில் 24 பேர்கள் இருந்தனர். ஒவ்வொரு ஆசிரமத்திலும் சில நாட்கள் தங்கினார்கள். இந்த கங்கைக்கரை ஆசிரமங்கள் யமுனைக்கரை ஆசிரமங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டுக் காணப்பட்டது. அங்குள்ள ரிஷி, முனிவர்கள் மட்டுமின்றி அவர்களின் முதன்மைச் சீடர்களிலிருந்து பலரும் ஹைஹேயர்களால் கொல்லப்பட்டும் அழிக்கப்பட்டும் இருந்தார்கள். அவர்களின் சீடர்களில் மூன்றாம் தலைமுறை இப்போது முற்றிலும் ஆரியர்களின் சம்பிரதாயமான வாழ்க்கை முறைகளில் இருந்தும், சடங்குகளில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டு இருந்தார்கள். அவற்றை முறையாகக் கடைப்பிடிக்க அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தர்மக்ஷேத்திரமும் அதன் சம்பிரதாயங்களும், பாரம்பரியமும் அவற்றின் ஆரியக் கோட்பாடுகளும் மறந்து போனதொரு இறந்தகாலமாக ஆகிவிட்டது. அவற்றை முற்றிலும் மறந்தே விட்டார்கள். மிகப் பெரிய ரிஷிகளான, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, ஆங்கிரஸர், ஷூனஷேபா ஆகியோரின் பெயர்கள் மட்டுமே நினைவில் இருந்தன.

தர்மக்ஷேத்திரத்தில் ஹைஹேயர்களால் நடத்தப்பட்ட மாபெரும் போரில் பாரம்பரியமே முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. அவர்கள் வரையில் ஏதோ சிரமப்பட்டு அக்கம்பக்கத்துக் கிராமத்து ஜனங்களிடம் கிடைக்கும்போது உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு காலம் கழித்து வந்தார்கள். அங்குள்ள கிராமத் தலைவர்களும் ஆரியத் தலைவர்கள் அழிக்கப்பட்டதும் தாங்களே தலைவர்களாகி இந்த ஆசிரமக்காரர்களுக்குத் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வந்தனர். இப்படிப் பட்டதொரு சூழ்நிலையில் பராசரரும் அவருடன் இருபத்து மூன்று நபர்களும் இந்த ஆசிரமங்களுக்கு வந்தபோது அவர்களுக்கு முழு மனதோடு வரவேற்புக் கிடைக்கவில்லை. ஆனாலும் வந்தவர்களை ஒதுக்க முடியாது! வரவேற்றே ஆகவேண்டும். ஏனெனில் பராசரர் ஒரு வாழும் தெய்வமாக இருந்தார். அவர் ஹைஹேயர்களை எதிர்த்துத் தன்னுடைய உரிமையை நிலைநாட்டினார். தன் மாணாக்கர்களைப் பெருமளவில் பாதுகாத்தார். ஆகவே அவர்களை அரை மனதோடு வரவேற்ற அவர்கள் இவர்களின் கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும், நியமங்கள் தவறாமல் இருப்பதையும், சரியான முறையில் வேதங்களை உச்சரித்து வருவதையும், தவறாமல் அக்னி வழிபாடு செய்வதையும் கண்டு இவர்களை ஒரு தொல்லையாகவே நினைத்துக் கொண்டார்கள்.

ஆனால் பராசரர் அவர்களை விடவில்லை. ஆசிரமத்தைச் சுற்றிலும் இருக்கும் கிராமவாசிகள் விசுவாசம் காட்டுவதைச் சொல்லி அவர்களை இன்னமும் நியம, நிஷ்டைகளுடன் இருந்தால் அக்கம்பக்கத்தினரின் உதவிகளும் நிறையக் கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னார். ஆனால் அவர்களில் சிலர் ஏளனமாகச் சிரிப்பதைப் பார்த்த த்வைபாயனனுக்கு அவர்கள் தன் தந்தையை ஒரு முட்டாள் என நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களால் அவரை எந்த விதத்திலும் எதிர்கொள்ள முடியாது! அவரின் படிப்பிலோ, அவரின் கட்டுப்பாடன புனிதமான தவ வாழ்க்கையையோ அவர்களால் கேள்வி கேட்க முடியவில்லை. அதைக் குறித்துக் குற்றம் காணமுடியாது. ஆனாலும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதனா என்று அவருக்குப் பின்னால் அவர்கள் கேலி பேசிச் சிரித்தார்கள். இந்த யாத்திரையின் போது அவர்கள் இமயமலைப் பகுதிக்கும் சென்று அங்குள்ள பழைய ரிஷிகளின் ஆசிரமங்களைப் பார்த்தார்கள். நர, நாராயண மலைகளைப் பத்ரிநாதரின் தரிசனத்தின் போது கண்டார்கள். பனி மூடி இருக்கும் மலைச்சிகரங்களைக் கண்டு களித்தார்கள். அங்கிருந்து செல்லும் பாதையின் வழியாக கடவுளருக்கெல்லாம் கடவுளான, முக்கியமாக ஆரியர்களின் தெய்விக சக்தி வாய்ந்த கோவிலாகக் கருத்தப்படும் உமாபதியான சர்வேஸ்வரன் வீற்றிருக்கும் கயிலை மலைக்கும் யாத்திரை சென்றார்கள்.

வருடங்கள் சென்றன. த்வைபாயனனுக்கு இப்போது பதினெட்டு வயது பூர்த்தி ஆகிவிட்டது. இந்தப் பனிரண்டு வருடங்களில் த்வைபாயனன் வேதத்தை முழுதும் கற்றுத் தேர்ந்திருந்தான். ரிக், யஜுர், சாமம் மட்டுமின்றி அவன் தந்தைக்கு மட்டுமே தெரிந்திருந்த அதர்வ வேதத்தின் சிற்சில பகுதிகளையும் கற்று அவற்றிலும் தேர்ச்சி அடைந்திருந்தான். தனித் தன்மை கொண்டவனாக இருந்த த்வைபாயனன் தன் தந்தையைப் போலவே அனைத்திலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றதோடு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான். மனோ ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் த்வைபாயனன் பலம் பெற்றிருந்தான். அவன் தந்தையைப் போலவே கட்டுக்கோப்பான உடல் அவனுக்கும் இருந்தது. அகன்ற விசாலமான நெற்றி, அகன்று விரிந்த இரு கண்கள், அவற்றில் சொட்டும் கருணையும், கனிவும், இதழ்களில் சிறு புன்னகை,  மேலே தூக்கிக் கட்டிய தலைமயிர்க்கற்றை, என்று த்வைபாயனனைப் பார்க்கையிலேயே மனதில் ஒரு நிறைவும் சாந்தமும் ஏற்பட்டது. தனக்குக் கிடைத்த உணவை அனைவருக்கும் பங்கு போட்டுக் கொடுக்கும் அவனின் தயாள குணமும், தனக்கு உணவில்லை என்றாலும் பரவாயில்லை மற்றவர்கள் பட்டினியுடன் இருக்கக் கூடாது என்று உணவை அளிக்கும் தியாகமும் அனைவரையும் ஈர்த்தது. அனைவரும் அவனை நேசித்தார்கள். பராசரரின் ஆசிரமங்கள் அனைத்திலும் அவருக்குக் கிடைத்த அதே வரவேற்பும், மரியாதையும் த்வைபாயனனுக்கும் கிடைத்ததோடு அல்லாமல் அந்த ஆசிரமங்களின் நிர்வாகங்களிலும் த்வைபாயனன் முக்கியப் பங்கெடுத்துக் கொண்டு அனைவரையும் அவரவர் வேலைகளை நிர்பயமாகச் செய்ய வைத்தான். இதனால் அனைத்து ஆசிரமங்களும் த்வைபாயனனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. பனிரண்டாவது வருஷ முடிவில் பராசரர் தன் மகனுடனும் தன்னுடன் இருந்த சீடர் குழாத்துடனும் கோதுலிக்கு வந்து த்வைபாயனனுக்கு ஆசாரியப் பட்டம் அளிப்பதற்கு வேண்டியவற்றைச் செய்யலானார்.

No comments: