Wednesday, April 27, 2016

பிரியாவிடை!

அடுத்த இரு நாட்களும் கிருஷ்ணா அங்குமிங்கும் அலைந்து அந்தச் சின்னஞ்சிறு தீவுத்திட்டிலும், அதைத் தாண்டி அருகில் இருந்த இன்னொரு திட்டிற்கும் சென்று தான் தன் தந்தையோடு செல்லப் போவதைக் குறித்துக் கூறினான். அவன் வயதே உள்ள சிறுவர், சிறுமியர் அனைவரிடமும் அவன் தந்தை வந்திருப்பதையும், அவனை அழைத்துச் சென்றுவிடுவார் என்றும் பெருமையுடன் கூறினான். இத்தனை நாட்கள் தந்தை இல்லாமல் வளர்ந்து வருகிறான் என அவர்கள் அவனைக் கேலிப் பேச்சுப் பேசி வந்திருக்கின்றனர். இப்போது அவனுடைய முறை வந்துவிட்டது. தந்தை வந்திருப்பதோடு அல்லாமல் அவனை அழைத்துச் செல்லவும் போகிறார். அதுவும் எப்பேர்ப்பட்ட தந்தை! அவருக்கு எல்லாம் தெரியும். தெரியாததே இல்லை! அவர் தனக்குத் தெரிந்த அனைத்தையும் கிருஷ்ணாவுக்கும் கற்றுக் கொடுக்கப் போகிறார். தந்தையைப் போல் அவனும் விண்ணில் ஒளிரும் நக்ஷத்திரங்கள், கிரஹங்கள், சூரிய,, சந்திரர்கள் மற்றும் இந்த யமுனையின் மீன்களைக் குறித்தும் படிப்பான். யமுனையில் எவ்வளவு நீர்த்துளிகள் உள்ளன என்று கூட அவனுக்குச் சொல்லிக் கொடுப்பார் அவன் தந்தை! அவன் தந்தையைப் போல் அவனுக்கும் ஒரு சில கட்டுப்பாடான பழக்கங்கள் ஏற்படும். அவனே ஏற்படுத்திக் கொள்வான். தந்தையைப் போல் நீண்ட தாடியும் வளர்த்துக் கொள்வான். தலை மயிரைத் தூக்கிக் கட்டிக் கொள்வான். அது அவனுக்குக் கிரீடம் போல் அமைந்துவிடும். தந்தையோடு அவன் யானைகளின் மீது பயணம் செய்யும் பெரிய பெரிய அரசர்களைச் சென்று சந்திப்பான். அந்த அரசர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவன் தந்தையையும் அவனையும் கீழே விழுந்து வணங்கி அவர்கள் ஆசிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

திரும்பத் திரும்பத் தன் தந்தையிடம் அவருக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கிருஷ்ணாவுக்கும் கற்றுக் கொடுக்கப் போவதைக் கேட்டு நிச்சயம் செய்து கொண்டான். பராசரருக்குத் தன் மகனின் இந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் ஆச்சரியத்தை அளித்தது. பராசரர் கிளம்பும் நாளும் வந்தது. அவர் திரும்பிச் செல்லவேண்டிய படகும் அந்தத் தீவின் கரைக்கு வந்து விட்டது. அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் ரிஷியை வணங்கி அவர் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு அவருக்கு விடை கொடுக்க வேண்டித் தயாராக இருந்தனர். ஆயிற்று! இதோ கிருஷ்ணாவும் தயாராக வந்து விட்டான். பிரியும் நேரம் நெருங்கியே விட்டது. பிரியும் நேரம் நெருங்க நெருங்க மச்சகந்திக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவள் வாழ்நாளில் இனி தன் மகனை அவள் எப்போது பார்ப்பாளோ! தெரியாது! பார்க்காமலேயே போகலாம். ஏனெனில் இனி அவன் போகப்போகும் பாதை அத்தகையது. ஆகையால் மச்சகந்தி மிகவும் பிரயாசையுடன் தன் மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டாள். அவள் செல்ல மகனுக்கு இப்போது இது தான் நல்வழியைக் காட்டும். இதன் மூலமே அவன் மிகவும் உயர்ந்ததொரு இடத்துக்கு வருவான். இப்போது இந்த வயதில் அவன் தன் தந்தையுடன் செல்வது தான் அவனுக்குச் சிறந்தது.

எல்லாக் குழந்தைகளையும் போலவா அவள் மகன்? எவ்வளவு சிறப்பு வாய்ந்தவன்! அவளுக்குக் கிடைத்த மாபெரும் பரிசல்லவோ அவன்! அத்தகையதொரு விலை மதிக்க முடியா செல்வத்தை இங்கே மீனவர்களுடன் சேர்ந்து ஒரு மீனவனாக வாழ்க்கை நடத்தச் சொல்ல முடியுமா? அது தகுமா? படகுகளில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்குக் கொண்டு விடும் படகுக்காரனாகத் தான் இருக்க விட முடியுமா? அவளுடைய அற்புதமான மகனுக்கு இந்த மீனவ உலகத்தில் சில காலம் வளர வேண்டும் என்பது அந்த ஆண்டவன் இச்சை. இந்த உலகு அவன் இதோ காண்பதற்காகக் கிளம்பும் உலகை விட மிகச் சிறியது! அவன் மகன் எப்போதும் விண்ணில் ஒளிரும் நக்ஷத்திரங்கள் குறித்து அறியவும், கிரஹங்களின் சஞ்சாரம் குறித்துத் தெரிந்து கொள்ளவுமே ஆசைப்பட்டான். இந்த யமுனையில் ஓடும் நீர்ப் பிரவாகத்தின் ஒவ்வொரு துளியையும் கணக்குப் பண்ண ஆசைப்பட்டான். அதெல்லாம் இந்த மீனவர்களின் உலகிலே சாத்தியமானதே அல்ல. பார்க்கப் போனால் அவள் யமுனைத் தாய்க்கு இப்படிப்பட்டதொரு அருமையான மகனைக் கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும் மச்சகந்தியின் விதியும் கிருஷ்ணா அங்கிருந்து கிளம்பி அவன் தந்தையுடன் செல்வதிலே தான் இருக்கிறது. அவள் எதிர்காலமே அவன் கையில் தான். இதையும் மச்சகந்தி நன்கு உணர்ந்திருந்தாள்.  கிருஷ்ணன் இங்கே இல்லை எனில் மீனவ இளைஞர்களில் எவரேனும் அவளை மணக்க முன் வரலாம்.

பிரியும் நேரம் நெருங்கியது. மீனவர்கள் கூட்டமாகக் கூடி விட்டனர். அனைவரும் கிருஷ்ணனைப் பார்த்து விசாரித்து அவனுக்குப் பிரியாவிடை கொடுக்க நினைத்துத் தேடினால்! இது என்ன! கரையில் எங்குமே கிருஷ்ணனைக் காணவில்லை! அவரவர் குடிசைகளுக்குப் போயும் தேடி விட்டனர். கிருஷ்ணன் எங்கே? திகைத்துப் போய்விட்டனர். பின்னர் ஒருவர் அங்கே நிற்கும் படகைச் சுட்டிக் காட்டினார். அங்கே கிருஷ்ணன் தண்ணீரில் சிறிது தூரம் நடந்து சென்று படகில் ஏறிக் கொண்டு தந்தை வருவதற்காகக் காத்திருந்தான். அமைதியும், நிறைவும் அவன் முகத்திலே தெரிந்தது. அவன் ஏன் அவ்வளவு அவசரமாக அங்கே சென்று விட்டான் என்றால் கடைசி நிமிடத்தில் தாத்தா ஜாருத்தோ அல்லது தாய் மச்சகந்தியோ மனதை மாற்றிக் கொண்டு விட்டால்? அல்லது தந்தை மனம் மாறிவிட்டால்? தன் மகனைப் படகிலே பார்த்த பராசரர் ஓவென்று வாய் விட்டுச் சிரித்தார். “மத்ஸ்யா, அதோ பார் உன் மகனை! என்னையும் உன்னோடுஇங்கே விட்டு விட்டுப் போகப் போகிறான் போலும்!” என்றார். பின்னர் தன் குரலை உயர்த்திக் கொண்டு “கிருஷ்ணா, கிருஷ்ணா, இங்கே வா அப்பா! நான் உன்னை விட்டுச் செல்ல மாட்டேன். இங்கே வந்து உன் தாய், பாட்டன், பாட்டி ஆகியோர் கால்களில் விழுந்து ஆசிகளை வாங்கிக் கொள்! அதோடு நீ என்னுடன் வருவதற்கு அவர்கள் அனுமதியையும் பெற்றுக் கொள்! அது தான் முறை! ஆரியர்கள் அப்படித் தான் செய்வார்கள்; செய்ய வேண்டும். அவர்கள் அனுமதியுடனும், ஆசிகளுடனுமே நீ என்னுடன் வரலாம்!” என்றார்.

கொஞ்சம் தயக்கத்துடனேயே கிருஷ்ணன் படகிலிருந்து கீழே குதித்தான். பின்னர் தண்ணீரில் நடந்து கரையை நோக்கி வர ஆரம்பித்தான். கிருஷ்ணனின் இந்தச் செயல் அங்கிருப்பவர்களிடையே நகைப்பை மூட்டியது. அதோடு அல்லாமல் அந்தப் படகிலிருந்து ஒரு மான் தோலை எடுத்துத் தன் இடுப்பில் கிருஷ்ணன் கட்டிக் கொள்ள முயன்றிருந்தான். அந்த மான் தோலானது அவன் உடல் முழுவதையும் மூடி விட்டது! ஆகவே அவன் அந்த மான் தோலைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு நழுவி விடாமல் இருக்கப் பார்த்துக் கொண்டே மெல்ல மெல்லத் தான் வர முடிந்தது.  அப்படியே வந்து தன் பாட்டன் முன் கீழே விழுந்து நமஸ்கரிக்க யத்தனித்தான். அவன் கைகள் மான் தோலில் இருந்து நழுவியது. அது நழுவிய வேகத்தில் கிருஷ்ணனையும் சேர்த்துக் கீழே தள்ள அப்படியே அவன் மான் தோலுடன் கீழே விழுந்துவிட்டான். அங்கிருந்த எல்லோருக்கும் இது இன்னமும் ஆனந்தத்தைத் தர எல்லோரும் கைகொட்டிக் கொண்டு சிரித்து மகிழ்ந்தனர். பராசரர் தன் மகனை எழுப்பி மான் தோலை சீராகக் கட்டி விட்டார். அது மீண்டும் நழுவாமல் இருக்க இடுப்பில் ஒரு கயிறைக் கட்டி விட்டார். பின்னர் தன் மகனைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் சொன்னார்.

ஆயிற்று! இப்போது உண்மையாகவே பிரியும் நேரம் வந்தே விட்டது. கண்ணீர் மழை பொழிந்தாள் மச்சகந்தி! “கிருஷ்ணா, கிருஷ்ணா, இனி எப்போது உன்னை நான் பார்ப்பேன்? அல்லது நீ என்னைப் பார்ப்பாயா?” என்று கேட்டாள். அவள் நிலை பரிதாபமாக இருந்தது. கிருஷ்ணாவுக்குத் தன் தாய் இப்படி ஓர் வலை விரித்துத் தன்னை மீண்டும் அவளுடனே வைத்துக் கொண்டு விடுவாளோ என்னும் சந்தேகம் உள்ளூர இருந்தது. ஆகவே சந்தேகத்துடனேயே தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான். தந்தையோ அவனை நம்பிக்கை கொடுக்கும் ஓர் புன்சிரிப்பால் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பின்னர் தாயைப் பார்த்து கிருஷ்ணா, “அம்மா, கவலைப்படாதே! நீ எப்போது என்னைப் பார்க்க வேண்டும் என்றாலும் என்னை நினைத்துக் கொண்டாலும் போதும்! நான் உன் பக்கம் வந்துவிடுவேன். உன் உதவிக்கு வருவேன்!” என்றான். மச்சகந்தி தன் மகனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“கிருஷ்ணா, ஓர் ஆரியன் அவனைப் பெற்ற தாயை ஒரு போதும் மறக்கவே மாட்டான். அவனைப் பொறுத்தவரையில் அவள் நடமாடும் தெய்வம்!” என்று பராசரர் ஆரியர்களின் பொதுவானதொரு விதியைக் கிருஷ்ணனுக்கு எடுத்துச் சொன்னார். மச்சகந்தி அவரை நன்றியுடன் பார்த்தாள். தன் துக்கத்தை அடக்கிக் கொள்ள நினைத்தும் முடியாமல் தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். தன் மகன் தன்னை விட்டுச் செல்வதைத் தாங்க முடியாமல் படகுக்கு எதிர்ப்பக்கம் குடிசைகளைப் பார்த்து நின்று கொண்டாள். பராசரர் அவளிடம், “மத்ஸ்யா, அழாதே! குழந்தைக்கு ஆசிகள் கூறு! நான் அவனை எப்போதுமே “த்வைபாயனா” என்றே அழைப்பேன். ஏனெனில் அவன் இந்தத் தீவில் தானே பிறந்தான். இந்தத் தீவையும் உன்னையும் அவன் என்றுமே மறக்க மாட்டான்.”

தன் மகனைத் தூக்கிக் கொண்டார் பராசரர். தண்ணீரில் நடந்து சென்று படகில் ஏறிக் கொண்டார். கிருஷ்ணனோ சந்தோஷத்தோடு, “அம்மா, அம்மா, அழாதே, நான் தந்தையுடன் செல்கிறேன். போய் வருகிறேன்.” என்று கத்தினான்.

1 comment:

ஸ்ரீராம். said...

தந்தையின் பெருமைகள்...