Thursday, April 21, 2016

வியாசரின் பிறப்பு! தெரிந்த கதை!

இதுவரை நாம் பராசரருக்கும் மத்ஸ்யகந்திக்கும் ஏற்பட்ட தொடர்புக்கான காரணம் குறித்துப் பார்த்தோம். இது திரு முன்ஷி அவர்களின் கற்பனைதான் என்றாலும் ஹைஹேயர்களின் ஆக்கிரமிப்பும் அதில் பராசரருக்கு ஏற்பட்ட நஷ்டங்களும் இதிகாசத்தில் உள்ளன. இந்த ஹையேயம் தான் கேகய நாடு என்றும் தசரதன் மனைவி கைகேயி அந்த நாட்டைச் சேர்ந்தவள் தான் என்றும் தெரியவருகிறது. இந்த நாடு தற்போதைய ஜீலம் நதியைத் தாண்டி உள்ள  ஷாபுர், சிந்து, குஜராத் பகுதியாக இருந்திருக்கவேண்டும் என்றும் ஒரு கூற்று. இந்த ஹைஹேயர்களின் மன்னனே கார்த்தவீரியன். இவன் தற்போதைய கொங்கணப்பகுதியை ஆண்டதாகத் தெரிகிறது. ஏனெனில் தமிழ்நாட்டு சுவாமிமலைக் கோயிலின் தலவரலாற்றில் கார்த்தவீரியன் அந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்ததாகச் சொல்கின்றனர். இது எவ்வளவுக்கு உண்மை என்று புரியவில்லை. இன்னும் சிலர் ஹைஹேயர்கள் பரந்து விரிந்திருந்த பாரத வர்ஷத்தில் ஈரானியப் பகுதியை ஆண்டனர் என்றும் சொல்கின்றனர்.

இப்போது மஹாபாரதம் பராசரர் பற்றிக்கூறுவதையும் பார்த்துவிட்டோமானால் மேலே தொடருவதற்கு வசதியாக இருக்கும். சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மகனான சக்தியின் குமாரரே பராசரர். வசிஷ்டருக்குப் பேரன் ஆவார். கர்ப்பத்திலேயே வேத ஞானம் பெற்றவர். இவரை இவர் தாய் வயிற்றில் சுமந்திருக்கும்போது வசிஷ்டரின் குமாரன் ஆன சக்திக்கு மரணம் நேரிடப் புத்திர சோகத்தில் ஆழ்ந்த வசிஷ்டர் தன்னை மாய்த்துக்கொள்ள எண்ணி கங்கைக்கரையில் நதியில் மூழ்கி இறக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் வேத கோஷங்கள் கேட்டன. எவரோ இளங்குரலில் திருத்தமாகச் சுருதியோடு வேதங்களை ஓதிக்கொண்டிருக்கக் கேட்ட வசிஷ்டருக்கு அது தன் மகன் சக்தியின் குரலாகத் தொனித்தது. பின்னால் திரும்பிப் பார்த்தால் கர்ப்பிணியான சக்தியின் மனைவி நின்றிருந்தாள். அவள் வயிற்றிலிருந்தே வேத கோஷம் கேட்டுக் கொண்டிருந்தது. வசிஷ்டர் தன் மருமகளைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்க, அவள், அருந்ததி தான் தன்னை அவர் பின்னே செல்லுமாறு பணித்ததாய்க் கூறினாள். வாழ்விழந்த மருமகளைப் பார்த்து மனம் நொந்து போயிருந்த வசிஷ்டர் அருந்ததி அனுப்பியதன் காரணத்தைக் கேட்க, அதற்கு சக்தியின் மனைவி வசிஷ்டர் இழப்பின் மிகுதியால் சித்தம் பேதலித்துச் செய்யக் கூடாதவற்றைச் செய்துவிடுவார் என்னும் காரணத்தாலேயே அவரைப் பின் தொடர்ந்து செல்லும்படி அருந்ததி அனுப்பி வைத்ததாகக் கூறினாள்.

மனம் வெட்கிப் போன வசிஷ்டர் நமக்கு மட்டுமா துக்கம்? பெற்றவளான அருந்ததிக்கோ, உற்றவளான நிறை கர்ப்பிணியான மருமகளுக்கோ துக்கம் இல்லையா? அவர்களுக்கும் துக்கம் தானே! நாம் நம் துக்கத்தை மட்டுமே பெரிதாக நினைத்து விட்டோமே! என நினைத்துக் கொண்டு இக்ஷ்வாகு குலதனமான ரங்கநாதனைப் பிரார்த்தித்துக் கொண்டு பிறக்கப் போகும் பேரனைச் சகல கலைகளையும் கற்க வைத்து எல்லாவற்றிலும் வல்லவனாக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு ஆசிரமம் திரும்பினார். பிரசவ நாளும் நெருங்கியது! பேரனும் பிறந்தான். பராசரர் எனப் பெயரிட்டு சாஸ்திரப்படியும், சம்பிரதாயப்படியும் குழந்தைக்குச் செய்யவேண்டியவற்றை முறையே செய்த வசிஷ்டர் தக்க பருவம் வந்ததும் பேரனுக்கு உபநயனமும் செய்வித்தார். எங்கு சென்றாலும் கூட அழைத்துச் சென்று அனைத்தையும் கற்பித்தார். வேள்விகள் செய்யவும், வானிலை குறித்து ஆய்ந்து அறியவும் ஜோதிட சாஸ்திரமும் கற்பித்தார். பராசரரும் அனைத்தையும் முறையே கற்றுத் தேர்ந்ததோடு அல்லாமல் பராசர ஸ்மிருதி என்னும் நூலையும் இயற்றினார். பிரமசரியத்தில் தகதகவென ஜொலித்த தன் பேரனை கிருஹஸ்தாசிரமம் மேற்கொள்ளும்படி வசிஷ்டர் கேட்க பேரனோ மென்மையாகவும் அதே சமயம் திண்ணமாகவும் மறுத்தார். ஆனால் வசிஷ்டரோ பராசரர் பெற்ற வேத அறிவு எல்லாம் அவர் மகனுக்கும் கிடைக்கவேண்டும். அந்த மகன் உலகம் போற்றும் உன்னதமானவனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டார்.

ஆகவே பராசரர் மானுடம் சிறக்கவும் வேதங்கள் புனருத்தாரணம் ஆகவும் வேண்டி ஒரு புத்திரனைத் தான் கர்ப்பாதானம் செய்வதன் மூலம் பெற்றுத் தருவதாகவும் திருமணம் என்னும் பந்தம் வேண்டாம் என்றும் வேண்டினார். அதற்கு வசிஷ்டர் பராசரர் கூடப் போகும் பெண்ணும் முற்றிலும் கன்னித்தன்மை உள்ளவளாகவும் ஐம்பூதங்களும்  இயக்கச் சுத்தமாகவும், வெளியில் உள்ள சூழ்நிலையை உணரும் தன்மையோடும், கிரகங்களின் நிலை சரியானபடி அமையும் வேளையில் இருவரும் மனமொத்து ஒன்று சேர்ந்தால் சத்புத்திரன் உண்டாவான் என்றும் எடுத்துச் சொல்கிறார். அதன் பின்னர் பராசரரும் அத்தகைய யோகமும் வேளையும் அமையும் வேளையில் தானும் கர்ப்பாதானம் அவசியம் செய்வதாகவும் அதுவரை பொறுத்திருக்குமாறும் தன் தாத்தாவிடம் வேண்டுகிறார். அதன் பின்னர் ஒரு முறை கங்கைக்கரையில் அக்கரைக்குச் செல்லப் படகுக்குக் காத்திருந்த வேளையில் மச்சகந்தி என்னும் கன்னிகை படகு ஓட்டி வர அவள் படகில் பயணித்த பராசரர் அவள் அழகிலும், அவள் விருத்தாந்தத்திலும் மனம் திருப்தி உற்றவராய் அவளிடம் தான் இன்னார் எனக் கூறி இப்போது இன்னும் சற்று நேரத்தில் குறிப்பிட்ட கிரகநிலையுடன் கூடிய வேளை வரப் போவதால் அப்போது அவர் அவளுடன் கூடினால் சத்புத்திரன் பிறப்பதோடு உலகம் உய்யவும் அந்த மகன் உதவி செய்வான் என்று சொல்கிறார்.

முதலில் மறுக்கிறாள் மச்சகந்தி. தன் கன்னித் தன்மை போய்விடுமே எனப் பதறுகிறாள். மேலும் பராசரர் போன்ற கற்றுணர்ந்த பிரமசாரி ஒரு மீனவப் பெண்ணான அவளைத் தொட்டுக் கூடினால் உலகம் அபவாதமாகப் பேசுமே எனப் பயப்படுகிறாள்.  ஒரு குழந்தைக்காக இத்தகைய தவறு செய்யலாமா என்றும் கேட்கிறாள். அவளைப் பல்வேறு ஆறுதல் மொழிகள் சொல்லித் தேற்றிய பராசரர் அவளுக்குப் பிள்ளை பிறந்த உடனேயே அவள் மீண்டும் பழைய மாதிரி கன்னித் தன்மையை அடைவாள் என வாக்கும் கொடுக்கிறார். அதன் பின்னர் பராசரர் அந்தத் தருணம் இயற்கையின் அமைப்பும், கிரஹங்களின் அமைப்பும்,உயர் நன்மை தரும் காலமாகவும் இருப்பதாகக் கூறி அருகிலுள்ள ஒரு தீவுக்குப் படகை ஓட்டிச் செல்லும்படி அவளிடம் சொல்கிறார். அவள் உடலில் அதுவரை இருந்த மீன் வாடையை முற்றிலும் போக்கிப் பரிமள காந்தியாக்கிய பின்னர், அங்கே பனி மூட்டத்தை உருவாக்கி அவளுடன் கூடுகிறார். அவர் நினைத்தபடியே ஆண் மகவு பிறக்கிறது. குழந்தைக்குக்  கருமை நிறத்துடன் இருந்ததாலும் தீவில் பிறந்ததாலும் க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் பெயரைச் சூட்டுகிறார். குழந்தையைத் தன்னுடன் எடுத்துச் சென்று ரிஷிகளின் ஆசிரமத்தில் வளரச் செய்தார். மச்சகந்தி நினைக்கும் நேரம் அவள் மகன் அவளை வந்து பார்ப்பான் என்னும் வரத்தையும் அருளுகிறார்.

இது தான் நாம் மஹாபாரதத்தில் காணும் மச்சகந்தி—பராசரர் குறித்தும் வேத வியாசர் பிறப்பு குறித்தும் அறிந்த கதை. இப்போது நாம் போகப் போவது முற்றிலும் புதிதான சம்பவங்களைக் கொண்ட ஒரு கதைக்கு! அதில் வேத வியாசர் பராசரருடன் செல்லவில்லை. மாறாக மச்சகந்தியுடன் இருக்கிறார். தந்தைக்காக ஏங்குகிறார். தந்தைக்கு ஏங்கும் வியாசரை அடுத்துக் காண்போம்.