Saturday, January 9, 2016

சத்யபாமா என்றொரு பொல்லாத பூனை!

பெரியோரிடமிருந்து விடைபெற்ற கிருஷ்ணன் தன் தாய் தேவகியைச் சந்தித்து உரையாடிவிட்டு, அவளுக்குத் தன் நமஸ்காரங்களைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் தன் சொந்த மாளிகையை நோக்கிச் சென்றான். அங்கே ருக்மிணியும், ஷாய்ப்யாவும் தங்கள் குழந்தைகளுடன் அவனை வரவேற்றனர். யாரும் யாருடனும் எதுவும் பேசவில்லை. மௌனமாகவே கிருஷ்ணனை வரவேற்றனர். எனினும் ஒரு வார்த்தை சொல்லாத பல செய்திகளை இருவரின் மௌனமும் கிருஷ்ணனுக்கு உணர்த்திவிட்டது. காலையிலிருந்து நடந்த சம்பவங்களின் தாக்கம் இருவரிடமும் அதிகமாக இருப்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டான். அவர்கள் மூவரின் புரிதல் அவர்களுக்குள் பேச்சே வேண்டாம், மௌனமாகவே புரிய வைக்கும்படியாக இருந்தது. ஆகவே கிருஷ்ணனும் இருவரிடமும் எதுவும் பேசவில்லை. இப்போது தனக்கு நேரிட்டிருக்கும் கடுமையான சோதனையின் தாக்கம் எதுவும் கிருஷ்ணனின் முகத்தில் பார்க்கமுடியவில்லை. இரு மனைவியரையும் பார்த்துச் சிரித்தான். அந்தச் சிரிப்பு ஒன்றே இருவருக்கும் பல விஷயங்களை உணர்த்திவிட்டது. பின்னர் குழந்தைகளுடன் பேசிக் களித்தான் கிருஷ்ணன்.

மதிய உணவுக்குப் பின்னர் யாதவத் தலைவர்கள் அனைவரும் கிருஷ்ணனைச் சந்திக்க வந்தனர். கிருஷ்ணனின் மனோவேதனையைப் பங்கு போட்டுக் கொண்டு அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்த அவர்களுக்குக் கிருஷ்ணனின் நிலை ஆச்சரியத்தை அளித்தது. கிருஷ்ணன் தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படியாக இருந்தது. யாதவத் தலைவர்கள் தான் கடுமையான துயரத்தில் இருந்தனர். கிருஷ்ணன் அவர்களைச் சமாதானம் செய்தான். “சத்ராஜித்திற்கு இப்போது அழிவு காலம் தொடங்கி விட்டது!” என்று கூறினான். “என்றாலும் யாதவக் குடிமக்கள் யாரும் சத்ராஜித்தின் மேல் மிகக் கடுமை காட்டாவண்ணம் பயங்கரமான நடவடிக்கைகளில் இறங்காவண்ணம் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.” என்ற கிருஷ்ணன் அங்கு வந்தவர்களைப் பார்த்து என்ன நடந்தாலும் அமைதி காக்கும்படி வேண்டினான். மேலும் கூறினான்:” நான் நல்லவனாகக்  கபடு, சூது அற்றவனாக இருந்தால், எனக்குத் தெரியும் நான் நல்லவன் என்றே, நீங்களும் அதை உணர்ந்திருக்கிறீர்கள். ஆகவே அந்த மகாதேவன் நம்மைக் காத்து அருளுவான். கவலை வேண்டாம்!” என்றான்.

“கிருஷ்ணா! என்ன இருந்தாலும் நீ இப்படி ஒரு சபதம் செய்திருக்கக் கூடாது!” என்று அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள். “வாழ்க்கையில் நான் மேற்கொண்டிருக்கும் முக்கியமான வேலையை நிறைவேற்ற வேண்டுமானால், நான் இப்படி ஒரு சபதம் செய்தே ஆகவேண்டும். தர்மம் ஒன்றே என் குறிக்கோள்! அதை நிலைநாட்ட என் உயிரைக்கூடக் கொடுக்க வேண்டி இருந்தால் கொடுத்தே ஆகவேண்டும்.” என்று கிருஷ்ணன் மிக அடக்கமாகவும் விநயமாகவும் கூறினான். ஆனால் எவருக்கும் இந்த விளக்கத்தில் திருப்தி இல்லை. பின்னர் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். உத்தவனும் அவனுடைய இரு மனைவியரான நாக நாட்டு இளவரசிகள் கபிலாவும் பிங்கலாவும் மட்டும் தங்கி இருந்தனர். இருவரும் ஒரே மாதிரியாக உடை அணிந்து தலை அலங்காரம் செய்து கொண்டு, ஆபரணங்களையும் ஒரே மாதிரியாக அணிந்திருந்தனர். அவர்கள் அலங்காரமும், அழகும் கண்களையும் கருத்தையும் கவர்ந்தாலும் அவர்கள் முகம் மாபெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. சந்திரனை ஒத்த அவர்கள் முகங்கள் எப்போதும் ஒரு அழகான சிரிப்போடு காணப்படும். இப்போதோ கருமேகங்கள் சூழ்ந்த வானைப் போல முகமண்டலத்தைச் சோக ரேகைகள் மூடி இருந்தன. அவர்கள் கண்கள் எந்நேரமானாலும் நீரை வர்ஷிக்கத் தயாராகக் காத்திருந்தன.

அப்போது உத்தவன் பேசினான். “ச்யமந்தகத்தை சத்ராஜித் தான் எங்கேயானும் ஒளித்து வைத்திருப்பான் என நம்புகிறேன். அப்படித் தான் இருக்கும் என்று நான் முழு மனதோடு நம்புகிறேன். அது எங்கே, எப்படி, யாரிடம் போனது என்பதை மட்டுமல்ல, திரும்ப அதைக் கொண்டு வரும் வேலையும் நம்மைச் சேர்ந்து விட்டது!”

கிருஷ்ணன் புன்னகை புரிந்தான். “கவலைப்படாதே, உத்தவா! எல்லாம் வல்ல மஹாதேவனுக்கு நம்மிடம் கருணை இருக்கிறது. ஆகவே ச்யமந்தகம் இருக்குமிடத்தை அவன் கண்டுபிடிப்பதோடு நமக்கு அதைக் காட்டியும் கொடுப்பான். இது யாதவர்களுக்கு ஏற்பட்ட் ஒரு பரிக்ஷை! சோதனை! மிரட்டலுக்கும், பயங்கரத்துக்கும் யாதவர்கள் தலை வணங்கி விடுவார்களா அல்லது அதை எதிர்த்து தைரியமாக நிமிர்ந்து நிற்கிறார்களா என்பதைக் கண்டறியும் சோதனை அது!”

அப்போது கிருஷ்ணன், “ஒரு விஷயம் எனக்குக் கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றியது. சத்ராஜித்தின் அருமைச் சகோதரர் ஆன ப்ரசேனர் இன்று காலை சத்ராஜித்துடன் காணப்படவில்லை. அவன் பலவீனமானவர்களை மேலும் மேலும் கொடுமைப்படுத்தும் ரகத்தைச் சேர்ந்தவன். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கையில் அதை விட மாட்டான். நன்றாகச் சண்டை போடக் கூடியவன். அவன் ஏன் இன்று காலை சத்ராஜித்துடன் காணப்படவில்லை? அவன் அங்கே தானே இருந்திருக்க வேண்டும்! அவனுக்கு என்ன ஆயிற்று என்பதை நாம் கண்டறிய வேண்டும். அப்போது பல உண்மைகள் வெளிவரலாம்.” என்றான்.  “நான் ஏற்கெனவே அதை விசாரித்துவிட்டேன், கிருஷ்ணா! நேற்று இரவு வரை அவன் மாளிகையில் தான் இருந்திருக்கிறான். இரவு தூங்கவும் சென்றிருக்கிறான். இன்று காலை விடியும் முன்னரே காணாமல் போயிருக்கிறான்.” என்றான் உத்தவன்.

அப்போது சுபத்ரா அங்கே ஓடோடி வந்தாள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்த அவள் கிருஷ்ணனைக் கட்டிக் கொண்டாள். “அண்ணா, கோவிந்தா! இது என்ன நான் கேள்விப்படுவது? நீ என்ன செய்துவிட்டாய்? உன்னை நீயே எரித்துக் கொள்வதாகவா சபதம் செய்திருக்கிறாய்?” என்று ஆவேசமாகக் கேட்டாள். கிருஷ்ணன் ஆதுரத்துடன் தன் தங்கையின் முகத்தைத் தன்னிரு கரங்களாலும் பிடித்துக் கொண்டு அவளையே சற்று நேரம் பார்த்தான். அவள் கண்களைத் துடைத்துவிட்டான். “என்ன ஆயிற்று உனக்கு?” என்ற வண்ணம் அவள் தலையைக் கோதி விட்டான்.

“அண்ணா, அண்ணா, ஒருவேளை, ஒருவேளை, ச்யமந்தகத்தை உன்னால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால்! ஆஹா! நான் என்ன செய்வேன்!” என்று விம்மும் குரலில் புலம்பினாள் சுபத்ரா. “ஆஹா, அதனால் என்ன சுபத்ரா? என் சபதம் அப்போது நிறைவேற்றப்படும். தைரியமாக இரு! அழாதே! இம்மாதிரியான ஒரு நிலைமை அப்படி எல்லாம் விரைவில் வந்துவிடாது. அப்படி வந்துவிட்டால், ஒரு திருடன் என்ற பெயரோடு வாழ்வதைக் காட்டிலும் சாவதே மேல்!” என்றான் கிருஷ்ணன். மீண்டும் அவள் கண்ணீரைத் தன் உருமாலால் துடைத்துவிட்ட கண்ணன் அவள் கன்னத்தையும் தட்டிச் சமாதானம் செய்தான். சுபத்ரா இதற்குள் தன்னை அடக்கிக் கொண்டு, “அண்ணா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அந்தப் பொல்லாத பெரிய பூனை, அதான் அவள் என்னை இன்று பார்க்க விரும்பினாள். ம்ம்ம்ம், உனக்குத் தெரியுமா? தினமும் மதிய நேரங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்தே கோயிலுக்குச் செல்வோம் என்பது?” என்று கேட்டாள் கண்ணனை.

கருணையுடன் சிரித்தான் கிருஷ்ணன். “யாரைச் சொல்கிறாய் சுபத்ரா? சத்ராஜித்தின் மகள் சத்யபாமாவையா?”

“பின் நான் வேறு யாரைச் சொல்வேன் என நினைத்தாய்? அவள் தான் பெரிய பொல்லாத பூனை!” ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு பட்டப்பெயரை வைப்பதில் சுபத்ரா வல்லவளாக இருந்தாள். “ஓஹோ!” கிருஷ்ணன் மீண்டும் சிரித்தான். “அது சரி, சுபத்ரா, அவள் பொல்லாத பெரிய பூனை எனில் சிறிய பூனை யார்?” என்று கேட்டான். “அதான் அவளுடனே எப்போதும் இருக்குமே ஊரி! அது தான் சிறிய பூனை! அந்த சத்ராஜித்தின் மகள் இன்று என்னைப் பார்க்க விரும்பினாள். நான் அவள் முகத்தைப் பார்க்கக் கூட விரும்பவில்லை என்று பதில் சொல்லி அனுப்பி விட்டேன்.” என்றாள் சுபத்ரா. கிருஷ்ணன் சிரித்தான். “ஏன் சுபத்ரா? அவள் முகத்துக்கு என்ன ஆயிற்று? நன்றாகத் தானே இருந்தது? நீ ஏன் அவள் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை?” என்று வேடிக்கையாகக் கேட்டான் கிருஷ்ணன்.

1 comment:

ஸ்ரீராம். said...

இன்னும் பாமாவின் இரண்டாவது செய்தி சுபத்ராவை அடையவில்லை போலும்!