Thursday, November 12, 2015

கண்ணனுக்கு ஆபத்து!

கிருஷ்ணனின் அமைதியான பேச்சும், சாந்தமான சிரிப்பையும் கண்ட சத்ராஜித்தின் கோபம் கொதித்தது. ஆங்காரம் அதிகம் ஆனது.அவனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் கை முஷ்டிகளைக் குவித்தும், விரித்தும், ஓங்கிக் குத்தும் பாவனையில் முஷ்டியை ஓங்கியும் ஏதேதோ செய்தான். விரல்களைப் பிரித்துப் பிரித்து விரித்தான். கண்கள் சிவந்து விட்டன. அவனை அப்போது பார்க்கவே பயமாக இருந்தது. எனினும் கிருஷ்ணன் சிறிதும் அஞ்சவில்லை. திடீரெனத் தன் ஆசனத்தில் இருந்து குதித்து எழுந்தான் சத்ராஜித். தன் கைகளைக் கிருஷ்ணன் தோள்பட்டையின் மேல் வைத்த வண்ணம் அவனை எழுந்திருக்க விடாமல் ஆசனத்தில் அழுத்தியபடியே அவனைப் பார்த்து உறுமினான். உறுமிய வண்ணம் அவனை அப்படியே ஆசனத்தில் பின்பக்கமாக அழுத்திச் சரித்தான். “என் ச்யமந்தகமணிமாலையை என்னிடமிருந்து பிடுங்கி விடுவாயா நீ?” என்ற வண்ணம் கிருஷ்ணனை வேகமாக அழுத்திய வண்ணம், “என் ச்யமந்தகத்தையா என்னிடமிருந்து பிடுங்க நினைக்கிறாய்? சூரிய பகவானின் சாபம் உன்னைச் சும்மா விடாது!” என்று கூறினான். சத்யபாமா வெளியே இருந்து அனைத்தையும் பார்த்தவளுக்குப் பயம் மேலிட்டது. அவள் தந்தை செய்வதை அவள் சிறிதும் ரசிக்கவில்லை. அவள் தந்தை மிகவும் வலுவும், பலமும் பொருந்தியதொரு மனிதர். கோபம் அதிகரித்தால் அவர் என்ன செய்வார் என்றே சொல்ல முடியாது. சமயம் வாய்க்கையில் ஒரு மனிதனைத் தன் வெறும் கரங்களாலேயே கழுத்தை நெரித்துக் கொல்லக்கூடிய வலு வாய்ந்தவர். சில நாட்களுக்கு முன்னர் தான் ஒரு ஊழியன் சொன்னபடி செய்யவில்லை என்பதற்காக அவனைக் கழுத்தை நெரித்துத் தூக்கி எறிந்ததை பாமா நேரிலேயே பார்த்திருக்கிறாள். அதோடு இல்லாமல் எப்போதுமே அவர் இடுப்பில் அரைக்கச்சையில் மெலிதாக இருந்தாலும் கூர் வாய்ந்ததொரு குத்துவாள் மறைந்திருக்கும்.

ஆகவே சிறிதும் தாமதிக்காமல் அவள் அறைக்கதவைப் படீரெனத் திறந்து கொண்டு உள்புகுந்தாள். அவள் தந்தையின் கண்களில் தெரிந்த கொலை வெறியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். ‘க்ரீச்’சிட்டுக் கத்தினாள். அவள் உடல் அனைத்தும் நடுங்கியது. ஒவ்வொரு பாகமும் துடித்தன. அவளையும் அறியாமல், “அப்பா, அப்பா, தந்தையே, வேண்டாம். வேண்டாம்!” என்றாள். ஆனால் இதை அவள் சொன்னாளா இல்லையா என்பது கூட அவளுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஏனெனில் அந்த அறையில் அவளின் கூக்குரலே எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பயத்தில் அலறினாள் சத்யபாமா! மாபெரும் வித்தகன் ஆன கோவிந்தன், கம்சனைக் கொன்று யாதவர்களைக் காத்து ரக்ஷித்தவன், எவராலும் தவிர்க்க முடியாத போர் வீரன், யாதவர்களின் கண்ணின் கருமணி போன்றவன், சாம்ராஜ்யங்களின் சச்சரவுகளைத் தீர்த்து வைத்து நன்மை செய்யும் நடுநிலை தவறாத மனிதன், தர்மத்தின் காவலன், இப்படிப்பட்ட வாசுதேவக் கிருஷ்ணன், இதோ இப்போது அவள் தந்தையின் கரங்களால் மடியப்போகிறான். பாமாவுக்கு மயக்கமே வந்துவிட்டது.

தன்னையும் அறியாமல் கிருஷ்ணன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். அசையாமல் அமர்ந்திருந்தான் கிருஷ்ணன். அவன் தோள்பட்டைகள் கடினமாக உறுதிப்பட்டிருந்தன. சற்றே சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த கிருஷ்ணன் தன்னிரு கைகளாலும் ஆசனத்தின் கைப்பிடிகளை இருபக்கமும் பிடித்த வண்ணம் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் தனக்கு உதவிக்காக மட்டும் அப்படிப் பிடித்திருக்கவில்லை. அவ்வாறு தன் கரங்களை அவனே கட்டுப்படுத்தவில்லை எனில் எந்த நேரமும் தான் சத்ராஜித்தைத் தாக்கி விடுவோம் என்னும் எண்ணம் தான் காரணம்.எவ்விதமான கஷ்டமும் படாமல் வெகு இயல்பாக சாதாரணமாக அமர்ந்திருந்தான். அவன் முகம் எவ்விதக் கஷ்டத்தையும் சிறிதும் காட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் சத்ராஜித்தின் இந்த நடவடிக்கையின் அவன் சிறிது கூட ஆச்சரியப்பட்டதாகவோ, உணர்ச்சி வசப்பட்டதாகவோ காட்டிக் கொள்ளவே இல்லை. அப்படியே அமர்ந்திருந்தவன் சத்ராஜித்தின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பயமோ, திகிலோ, உயிர் போய்விடுமோ என்ற அச்சமோ சிறிதும் காணமுடியவில்லை. ஒளிவீசிப் பிரகாசித்தன அவன் கண்களின் மணிகள். சற்றும் மாறாமல் விழிகளைச் சிறிதும் அசைக்காமல் சத்ராஜித்தையே அவை பார்த்தன.

அவன் தொண்டைக்குழியில் சிறியதொரு அசைவு அவ்வப்போது ஏற்பட்டதை சத்யபாமா பார்க்கவில்லை எனில் அவனைச் சிலை என்றே சொல்லலாம். அவன் முகத்திலும் மிக மிக மெலிதான ஓர் சிரிப்புக் காணப்பட்டது. விளையாட்டின் போது குறும்புச் சேட்டை செய்த குழந்தை கையும் களவுமாகப்பிடிபட்ட போது பெரியவர்களுக்கு ஏற்படும் ஆனந்தச் சிரிப்பு! அதை அனுபவித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். பாமாவுக்குப் புரிந்து விட்டது. கிருஷ்ணனின் அசையாத உடல் நிலையும், இரு கைகளாலும் மிக இறுக்கமாக ஆசனத்தின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்த அவன் நிலையையும் பார்த்ததுமே இது தன்னைத் தானே மிக லாகவமாகச் சுயக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடும் ஒரு மனிதனின் நிலை என்பதையும் இவன் சாதாரணமானவன் இல்லை; அசாதாரணமானவன் என்பதையும் உடனே புரிந்து கொண்டு விட்டாள். அவளுக்கு பயத்தில் வியர்த்தது. கிருஷ்ணன் மனதுக்குள் நினைத்து முடிவும் எடுத்து விட்டான். அவள் தந்தையின் கொலை வெறியைத் தன் வலிமையாலோ உடல் பலத்தாலோ அடக்கக் கூடாது; அது கூடாது என்பதைப் புரிந்து கொண்டு செயலாற்றுகிறான் என்பதை பாமா புரிந்து கொண்டு விட்டாள்.

ஆகவே ஓடோடித் தன் தந்தையின் பக்கம் சென்றாள். தன்னால் இயன்ற மட்டும் வலுவாக முயன்று அவர் கைகளைக் கிருஷ்ணன் தோள்களிலிருந்து நீக்க முயன்றாள். “அவரைத் தடுக்காதே, பாமா! என்னை அவரிடமிருந்து நீ காக்க வேண்டாம்!” என்றான் கிருஷ்ணன். மீண்டும் அவன் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. பாமாவுக்குக் கிருஷ்ணன் சொன்னதை உடனே செய்ய வேண்டும் என்று தோன்ற அப்படியே அவள் தன் கைகளைத் தந்தையிடமிருந்து நீக்கினாள். கிருஷ்ணன் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான். அவனையே பார்த்த சத்ராஜித் தன் கரங்களைக் கிருஷ்ணன் மேலிருந்து விலக்கிக் கொண்டான். ஆனால் அவையோ அவனுக்குக் கட்டுப்படாமல் தொய்ந்து விழுந்தன. ஆசனத்தின் கைப்பிடிகளை இறுகப் பிடித்திருந்த கிருஷ்ணனின் கைகள் மேல் மீண்டும் அமுக்கப் பார்த்த அந்தக் கரங்கள் திடீரென வலுவிழந்து தொய்ந்தன. அதோடு இல்லாமல் சத்ராஜித்துமே தன் பலம் முழுதும் இழந்தவன் போல் தன் ஆசனத்தில் தொப்பென்று அமர்ந்தான். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் என்னமோ இன்னமும் கிருஷ்ணனைக் கொல்லத் தான் நினைக்கிறான். ஆனால் இயலவில்லை.

அப்போது சத்யபாமாவைத் தொடர்ந்து அந்தத் தாழ்வரைக்கு வந்திருந்த பாமாவின் செல்லப் பூனை ஊரிக்கு அங்குள்ள மாறுபட்ட சூழ்நிலையைக் கண்டதும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. மூவரும் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே சென்றதும் நேரே கிருஷ்ணனின் ஆசனத்தின் அருகே சென்று அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டது. அதன் பச்சைநிறக் கண்கள் ஒருவித ஜொலிப்புடன் கிருஷ்ணனையே பார்த்தன. கிருஷ்ணனும் அந்தப் பூனையைப் பார்த்தான். தன் கரங்களால் அதைத் தடவிக் கொடுத்தான். தன் ஜன்மமே சாபல்யம் பெற்றுவிட்டாற்போல் ஊரி ‘மியாவ்’ என்றது. சந்தோஷத்தில் வாலையும் ஆட்டியது. சில நிமிடங்களில் அந்த அறைக்கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டு அரண்மனையின் பெண்கள் அனைவரும் அங்கே கூடி விட்டார்கள். அங்கே அசையாமல் அமர்ந்திருக்கும் மூவரையும் பார்த்துத்திகைத்து நின்றார்கள். சத்யபாமா தன் தந்தையின் அருகே அமர்ந்திருந்தாள். உடலின் வலுவை எல்லாம் இழந்தாற்போல் களைத்துச் சோர்ந்து அமர்ந்திருந்த அவர் கைகளின் ஒன்றைத் தன் கரங்களுக்குள் வைத்து ஆறுதலாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்தக்கையானது அவள் கரங்களுக்குள்ளாக நடுங்கியது என்பதை அவளால் உணர முடிந்தது. அவன் களைத்துச் சோர்ந்திருப்பதை அவன் முகம் காட்டியது. உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருந்தான். நெற்றிப் பொட்டில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தென்பட்டன.

சத்யபாமா வீரிட்டுக் கத்திய குரலைக் கேட்ட பங்ககராவும் ஷததன்வாவும் உடனே ஓடோடி வந்திருந்தனர். என்ன நடந்ததோ என்ற ஐயம் அவர்களுக்கும் இருந்தது. யாகம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் அதை நடத்தி வைத்த வேத பிராமணர்களில் ஒரு சிலருக்கும் என்னவோ ஏதோ என்னும் அச்சத்தால் ஓடோடி வந்திருந்தனர். வந்தவர்கள் பங்ககராவுக்கும் ஷததன்வாவுக்கும் பின்னால் மறைந்து கொண்டு சத்ராஜித்தையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கிருஷ்ணனிடம் அவன் நடந்து கொண்டிருந்த முறை அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. சற்று நேரம் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது.பின்னர் திடீரெனக் கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நீங்கள் சொல்வது சரி எனினும் அது உங்கள் அறியாமையின் எல்லைக்குட்பட்டே இருந்தாக வேண்டும். உங்கள் அறியாமை விலகும்போது உங்களுக்கு க்ஷத்திரிய தர்மம் என்னவெனப் புரியும். அப்போது நீங்கள் தானாகவே ஒப்புக் கொள்வீர்கள். நல்லதொரு வாழ்க்கையை வாழ வேண்டுமானால் க்ஷத்திரிய தர்மம் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அதன் மூலம் வாழ்க்கையின் மேம்பாடுகள் கிடைக்கும் என்பதை நீங்களாகவே ஒப்புக் கொள்வீர்கள்.” கிருஷ்ணன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து தன் தலைப்பாகையைச் சரி செய்து கொண்டான். அது அவன் தலையிலிருந்து நழுவிக் கீழே விழுந்திருந்தது. சத்ராஜித் பேச முயற்சித்தான். ஆனால் அவனால் பேச முடியவில்லை. அவன் முகத்தில் இன்னமும் குரோதம் தெரிந்தது.

“மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே, இப்போது நான் விடை பெறுகிறேன். உங்கள் உணர்ச்சிகள் சமன் அடைந்ததும், நான் சொன்னதில் உள்ள நியாயமும், நீதியும் உங்களுக்குத் தானாகவே தெரிய வரும். நாளை மாலை சூரிய அஸ்தமனத்துக்குள்ளாக ச்யமந்தகமணிமாலை அக்ரூரரின் கஜானாவிற்கு வந்துவிட வேண்டும். இல்லை எனில்! நானே அதை எடுத்துக் கொள்வேன்!” என்று சற்றும் இரக்கமே தெரியாத குரலில் சொன்ன கிருஷ்ணன், தன் கரங்களைக் கூப்பி விடைபெற்றுவிட்டு தாழ்வரையை நோக்கி நடந்தான். பங்ககரா அவனை வழி அனுப்பி வைக்கக் கூடவே நடந்தான். ஊரியும் அவர்களைத் தொடர்ந்தது. பிரதான நுழைவாயிலில் கிருஷ்ணன் விடைபெற்றுச் செல்கையில் ஊரியைத் தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றான். ஊரியும் சந்தோஷமாக, “மியாவ்” என்று அதை வரவேற்றுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.