Wednesday, September 2, 2015

பாமாவின் கனவில் கிருஷ்ணன்!

செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணன் நிகழ்த்தி வந்த சாகசங்களைக் குறித்து அவள் நிறையக் கேள்விப் பட்டிருந்தாள். துவாரகையில் அவற்றைக் குறித்துப் பேசாத நபர்களே இல்லை! இதைக் குறித்துத் திரும்பத் திரும்பப் பேசிப் பேசி மக்கள் மகிழ்ந்தனர். அதிலும் குரு வம்சத்து அரசனான பாண்டுவின் ஐந்து புத்திரர்களையும் ராக்ஷசவர்த்தத்தில் இருந்து கண்ணன் மீட்டுக் கொண்டு வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.  வாரணாவதத்தில் துரியோதனாதியரால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட ஐவரும் அங்கிருந்து உயிருடன் தப்பிச் சென்றது ஒரு அதிசயம் எனில் அவர்கள் ராக்ஷஸவர்த்தத்தில் உயிருடன் இருந்து தப்பி வந்தது இன்னொரு அதிசயம். அதோடு மட்டுமில்லாமல் யாதவர்களின் நீண்ட வருடங்களாக எதிரியான ஜராசந்தனைக் கண்ணன் தனி ஒருவனாக  திரௌபதியின் சுயம்வரத்திலிருந்து விலக வைத்ததும், அவனைக் காம்பில்யத்தை விட்டே ஓட வைத்ததையும் பேசப் பேச அவர்களுக்கு அலுக்கவில்லை. துருபதனின் அருமையும், பெருமையும் நிறைந்த மகளைக் கரம்பிடிக்கப் பாண்டவர்களுக்கு உதவி செய்தது, இறந்து கொண்டிருந்த பானுமதிக்கு அளித்த வாக்குறுதி, அவள் கணவன் துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளுவான் என்னும் வாக்குறுதி, அதை அவன் நிறைவேற்றிய விதம். ஐந்து சகோதரர்களையும் எவ்விதச் சண்டையும் பூசலும் இல்லாமல் ஹஸ்தினாபுரத்திலிருந்து காப்பாற்றிக் காண்டவப்ரஸ்தம் கொண்டு சேர்த்தது. அங்கே புதியதொரு நகரை நிர்மாணித்து அதற்கு இந்திரப்ரஸ்தம் என்னும் பெயரைச் சூட்டியது அனைத்தையும் துவாரகை மக்கள் பேசும்போது பாமா கேட்டுக் கொண்டிருப்பாள்.

இதைக் குறித்துப் பேசிய துவாரகை மக்கள் அனைவரும் கிருஷ்ணனை மனிதனே அல்ல; கடவுள் என்றே நினைத்தனர். வெளிப்படையாக அதைச் சொல்லவும் செய்தனர். ஆனால் சத்ராஜித் அதை ஏற்கவில்லை என்பதோடு அவனைத் தங்கள் தலைவனாக ஏற்றிருந்த ஒரு சிறிய யாதவக் குழுவினருக்கும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. கிருஷ்ணனின் சாகசங்களைப் பிறர் பேசும்போது கேட்ட அவர்கள் அதைக் கேலி செய்து சிரித்தனர். பரிகாசமாகப் பேசினார்கள். சத்யாவுக்கு இது எல்லாம் மனதை வருத்தியது. பாமாவுக்கு அது மட்டும் வருத்தமில்லை; கிருஷ்ணன் மேல் அவள் தந்தை காட்டிய விரோத மனப்பான்மையும் அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை. மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவரான உக்ரசேனரைக் கூட சத்ராஜித் சிறிதும் மதிக்கவில்லை. வெளிப்படையாக அவமதித்தான்.

ஆனால் இந்த அவமதிப்புக்கான காரணங்கள் அவள் தந்தையிடம் உண்டு என்பதும் அவற்றை எவராலும் மறுக்க முடியாது என்பதையும் அவள் உணர்ந்தே இருந்தாள். ஏனெனில் அனைவருக்கும் சத்ராஜித்தின் அளவு கடந்த செல்வமும், அதன் காரணத்தால் அவன் கைப்பிடிக்குள் இருக்கும் சில யாதவர்களையும் நினைத்தே அவர்கள் சத்ராஜித்தை வெறுத்து வந்தனர். அவன் மேல் பொறாமை கொண்டனர். மற்ற யாதவத் தலைவர்களுக்கும் தனக்கும் இருந்த இடைவெளியை நீக்கிச் சரி செய்ய வேண்டும் என்றே அவள் தந்தை நினைத்தார். அதற்கான முயற்சிகளையும் செய்தார். அதற்காகவே அவள், பாமா யுயுதானா சாத்யகியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தார். கிருஷ்ணன் குடும்பத்துடன் வலிமை வாய்ந்த சாத்யகன் குடும்பம் நெருக்கமானது. யுயுதானா சாத்யகியை பாமா மணப்பதன் மூலம் அவர்களிடையே உள்ள இடைவெளியை ஓரளவாவது நீக்கலாம்.  ஆனால் எவ்வித சம்பிரதாயத்திற்கும் கட்டுப்படாமல் அந்த விருப்பம் முற்றிலும் நிராகரிக்கபப்ட்டது. அதிலிருந்து சத்ராஜித்தின் கௌரவம் பாழாகி விட்டது என்பது போல் அவனுக்கு மனதுக்குள் வருத்தம். அவன் மனம் காயப்பட்டு விட்டது. அதிலிருந்து அந்த மேன்மை தாங்கிய குடும்பத்து நபர் எவரானாலும் அவரை எவ்வகையிலாவது அவமானம் செய்தே ஆக வேண்டும் என்னும் எண்ணம் சத்ராஜித்திடம் தோன்றியதோடு அல்லாமல் அதற்கான ஆவன செய்தும் வந்தான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அந்த மேன்மை பொருந்திய குடும்பத்தின் மேன்மையை எவ்வகையில் குறைக்கலாம் என்றே எண்ணினான்.

ஆனால் யுயுதானா சாத்யகிக்கு அவளை மணமுடிக்க சாத்யகி தந்தை சாத்யகன் ஒத்துக் கொள்ளாதது பாமாவைப் பொறுத்தவரை நல்லதே! அதில் அவள் மகிழ்ச்சியே அடைந்தாள். சாத்யகி இளைஞன், கவர்ச்சிகரமான இளைஞன், பலசாலி, வீரன் எல்லாமும் தான். ஆனாலும் அவனை மணக்கும் அளவுக்கு அவன் மேல் பாமாவுக்குப் பெரிய விருப்பு எல்லாம் இல்லை. யாதவத் தலைவர்களிலேயே பிரபலமான வசுதேவனின் பிள்ளை கிருஷ்ணனைத் தான் பாமா மணக்க விரும்பினாள். ஆனால் இந்த விருப்பத்தைத் தன் சிற்றன்னையரிடமோ அல்லது தந்தையிடமோ தெரிவிக்க அவளுக்கு முடியவில்லை. தெரிவிக்க யோசித்தாள். அவள் குடும்பத்தினருக்குக் கனவில் கூடக் கிருஷ்ணனுக்கு அவளை மணமுடிக்கும் எண்ணம் வராது. அவள் தந்தைக்கு யாதவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு சிறு சிறு கஷ்டத்திற்கும் வசுதேவனின் குடும்பம் தான் காரணம் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இதை எவ்வாறு கடந்து வருவது என்பதைக் குறித்து அவள் தினமும் யோசித்து வந்தாள்.

அவள் தந்தைக்கு அவர் செய்வது என்னமோ நியாயமாகவே இருக்கலாம். யாதவர்களில் மிகவும் பணக்காரர் என்பதோடு வலிமை வாய்ந்த தலைவரும் ஆவார். சத்ராஜித்தின் மாளிகையின் செல்வ வளமும், செழிப்பும் துவாரகை முழுதும் பேசப்படும் ஒன்று. அவள் தந்தையிடம் விலை உயர்ந்த பல நல்ல ஜாதிக்குதிரைகள், பசுக்கள் என உள்ளன. எல்லாவற்றுக்கும் மேல் அவள் தந்தை சூரியதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பிரபாஸ தீர்த்தத்தின் காவல் தெய்வமான சூரியன் அவள் தந்தையை ஆசீர்வதித்திருக்கிறான். அதற்கு அடையாளமாக சூரிய தேவனால் சத்ராஜித்துக்கு விலை மதிக்க முடியாத “ச்யமந்தக மணி” என்னும் ஒப்பற்ற ரத்தின ஆபரணம் கிடைத்துள்ளது. அந்த ச்யமந்தக மணியை வைத்து முறைப்படி ஒழுங்காக வழிபாடுகள் செய்தால் அது கல்லைக் கூடப்பொன்னாக மாற்றும் வல்லமை உள்ளது. அவளுக்கு அவள் தந்தை மேல் மிகவும் பாசம் உள்ளது. அவள் தந்தையும் அவளிடம் பாசம் அதிகம் உள்ளவரே!  ஆனால் இதற்காக அவளால் கிருஷ்ணனை மறக்கவே முடியாதே! அவனைப் பார்க்கக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எதிர்நோக்கிக் காத்திருக்கவும் செய்கிறாள்.

மதுராவில் கிருஷ்ணன் தன் மாமன் ஆன கம்சனோடு போரிட்டுக் கொண்டிருந்த அந்தச் சமயத்திலேயே அவள் முடிவை எடுத்து விட்டிருந்தாள். அப்போது அவள் வயது ஆறு மட்டுமே! அந்த வயதிலேயே கிருஷ்ணன் மேல் அவளுக்கிருந்த ஈர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருந்ததோடு தன் சிநேகிதிகளோடு விளையாடும் போதெல்லாம் அவள் தன்னைக் கிருஷ்ண வாசுதேவன் என்றே அழைத்துக் கொள்வாள். கிருஷ்ணனின் நினைவுகள் அவளைத் துரத்தின. அவள் கனவுகளில் அவன் மட்டுமே வந்தான். அவளைக் கவர்ந்து தன் மணமகளாக ஏற்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். பல சமயங்களிலும் அவள் கனவுகளில் கிருஷ்ணனோடு தான் குடும்ப வாழ்க்கை நடத்துவதாகக் கண்டிருக்கிறாள். அது தான் உண்மையோ என்னும்படியாக இருக்கும். பின்னர் கனவு கலைந்து திடீரெனத் தூக்கிவாரிப் போட்டு எழுந்திருக்கையில் தன்னைப் போன்ற உயர்குடும்பத்துப் பெண்ணிற்கு இப்படி எல்லாம் கனவுகள் வரலாமா என்று அவள் வெட்கம் அடைவாள். ஆனால் அதற்காக தன் கனவுகளில்கிருஷ்ணன் வராமல் போய்விடப் போகிறானே என நினைத்து அவள் தினமும் இரவு தூங்கப் போகையில் இன்று கனவில்கிருஷ்ணன் வர வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்வாள்.

அவள் வளர வளர அவள் மனம் கிருஷ்ணன் பால் அதிகம் சென்றது. அவனைத் தான் மணந்து கொள்ள வேண்டும் என்னும் தீர்மானம் உறுதிப்பட்டது. அவள் இல்லாமல் கிருஷ்ணன் என்ன செய்வான்? அவளால் தான் அவனுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும். அவளால் மட்டுமே அவனுக்கு ஓர் ஆதர்ச மனைவியாக வாழ்க்கை நடத்த முடியும். அவள் இல்லையேல் கிருஷ்ணனுக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. இது வரை அவன் வாழ்க்கையில் சந்தித்த எந்தப் பெண்ணும் கொடுக்காத அளவுக்கு மகிழ்ச்சியை மட்டுமின்றி அவனுடைய வேலைகளிலும், மற்றப் பிரச்னைகளிலும் பங்கெடுப்பாள். பெருந்தன்மையுடன் அவனைப் பகிர்ந்து கொள்வாள். அவன் வாழ்வில் இத்தகைய பெண்ணையே இதுவரை சந்தித்ததில்லை என அவன் எண்ணும்படி நடந்து கொள்வாள்.

ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல கிருஷ்ணனை மணக்க முடியும் என்னும் நம்பிக்கை அவள் மனதில் ஆட்டம் கண்டது. அவள் தந்தையும் மற்ற யாதவர்களும் மற்ற யாதவர்களிலிருந்து பிரிந்தே காணப்பட்டார்கள். அவர்களை இவர்கள் லட்சியமே செய்யவில்லை.

1 comment:

ஸ்ரீராம். said...

இதில் சில பகுதிகளை ஏற்கெனவே படித்தது போல இருக்கிறதே....