Saturday, August 29, 2015

நான்காம் பாகத்தின் பின்னுரை// காண்டவப்ரஸ்தம் நோக்கிய பயணம்!


அடுத்த நாளே பீமனுக்கு யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சுஷர்மாவும், ஜாலந்திராவும் காசிக்குத் திரும்பிச் சென்றனர். விராட அரசனும், சுநீதனும் கூட அவரவர் நாட்டிற்குத் திரும்பினார்கள். அக்ரூரரும் உத்தவனும் பல யாதவ அதிரதர்களுடன் கூட துவாரகை திரும்பினார்கள். பல யாதவர்களும் தங்கள் இருப்பிடம் செல்ல ஆவலாகவே இருந்தனர். என்றாலும் அனைவரும் போக முடியவில்லை. மேலும் கிருஷ்ணன் அளித்த வாக்குறுதியின்படிப் பொன்னும், பொருட்களும் கால்நடைச் செல்வங்களும் துவாரகையிலிருந்து கொண்டு வர யாரேனும் போக வேண்டுமல்லவா? ஆகவே அதற்காகவும் அக்ரூரரும், உத்தவனும் மற்ற யாதவர்களுடன் திரும்ப வேண்டி இருந்தது. மணிமானும், தன் நாட்டில் இருந்து கைவினைக்கலைஞர்களை அழைத்துவருவதற்காக நாக நாட்டிற்குக் கிளம்பினான். காண்டவப்ரஸ்தத்தில் அவர்களின் கைத் திறமையில் அனைத்தும் அமையவேண்டும் என்பது அவன் விருப்பம். ஐந்து சகோதரர்களுக்கும் தங்கள் திறமையைக் காட்டி நட்பை நீடிக்கச் செய்யவே ஆவல் கொண்டனர் அவர்கள்.

தன்னுடைய புயல் வேகப் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை பீமன் செய்ய ஆரம்பித்தான். கூடவே கிருஷ்ணனையும் மேற்பார்வைக்கு அழைத்துக் கொண்டான். அர்ஜுனனும், சஹாதேவனும் குரு வம்சத்து மற்ற மக்களிடம் பேசித் தங்களுடன் காண்டவப்ரஸ்தம் வரத் தயார் ஆக இருக்கிறவர்களைத் தங்களுடன் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இதற்காக அவர்கள் குரு வம்சத்தினரிடம் மட்டுமில்லாமல் மற்ற க்ஷத்திரியர்கள், வைசியர்கள், மஹாஜனங்கள், படை வீரர்கள் என அனைவரிடமும் பேசி ஆக வேண்டி இருந்தது. சற்றும் குற்றம் கண்டு பிடிக்காத வகையில் விதுரரால் பிரித்துக் கொடுக்கப்பட்ட தங்கம், நகைகள், ஆபரணங்கள், ரத்தினங்கள், தானியங்கள், குதிரைகள், யானைகள், ரதங்கள், படைக்கலங்கள், ஒட்டகங்கள் ஆகியவற்றைச் சரிபார்த்துப் பாதுகாக்கும் பொறுப்பை நகுலன் ஏற்றுக் கொண்டான். பாண்டவர்களின் ஆதர்ச குருவான தௌம்யர் மற்ற வேத பிராமணர்களிடமும், முனிகள், ரிஷிகளிடமும் பேசி அவர்கள் குருகுலத்தைக் காண்டவப்ரஸ்தத்திலோ அல்லது அதற்கு அருகிலோ ஏற்படுத்துமாறு வேண்டிக் கொண்டனர். காண்டவப்ரஸ்தம் வருவதற்கு ஆவலுடன் இருப்பவர்களை ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.

சாத்யகியும் மற்ற யாதவ அதிரதர்களும் பாண்டவர்களும் மற்ற பரிஜனங்களும் வரும் முன்னரே அங்கு சென்று வழியில் அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்க வேண்டிய இடம், மற்றும் காண்டவப்ரஸ்தம் சென்றதும் தங்க வேண்டிய இடம் ஆகியவற்றைச் சரியானபடி தேர்ந்தெடுக்க வேண்டி முன்னரே கிளம்பினார்கள். துஷ்சாசனன் மல்லர்களில் இருவரைக் கொன்ற அன்று மல்லர் தலைவன் ஆன பலியா பீஷ்மரிடம் பேசி இதற்கொரு நியாயம் எனில் அது தாங்கள் தங்கள் தாய்நாடான குந்திபோஜனின் அரசுக்குத் திரும்புவதே ஆகும் என்றும் அங்கே தாங்கள் திரும்பிப் போக அனுமதி வேண்டும் எனவும் கேட்டிருந்தான். ஆனால் இப்போது யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை ஆளப் போகிறான் என நினைத்திருந்தபோது அதைக் கொஞ்சம் தள்ளிப் போட்டனர். இப்போதோ முற்றிலும் நிலைமை மாறிவிட்டது. பாண்டவர்கள் காட்டுக்கு நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் மொத்த மல்லர்களும் அவர்களின் துணைக்கும், உதவிக்கும் தேவைப்படும். ஆகவே பலியா அனைத்து மல்லர்களையும் காண்டவப்ரஸ்தம் சென்று பாண்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு கட்டளையிட்டான். அதன்படியே அவர்களும் கிளம்பினார்கள்.

ஆனால் ராணிமாதாவுக்கும், பீஷ்மபிதாமஹருக்கும் கவனிக்க ஆட்கள் இல்லாமல் போய்விடுமே! இதை நன்கு யோசித்து சோமேஸ்வரையும் அவன் மனைவியையும் மற்றச் சில மல்லர்களுடன் அங்கேயே தங்கி இருந்து ராணிமாதா சத்யவதிக்கும், பீஷ்மபிதாமஹருக்கும் வேண்டிய சேவைகளைச் செய்யுமாறும் கட்டளை இட்டான் பலியா. இரு வாரங்களுக்குப் பிறகு ஒரு நன்னாளில், ஐந்து சகோதரர்களும், கிருஷ்ணனும், பலராமனும் உடன் வர, ஹஸ்தினாபுரத்துக்கும் குருவம்சத்து மற்ற மூத்தவர்களுக்கும், தங்கள் சித்தப்பாவான விதுரருக்கும் தங்கள் பிரியாவிடையைக் கொடுத்து விட்டுக் காண்டவப்ரஸ்தம் நோக்கிக் கிளம்பினார்கள். வழியெங்கும் ஹஸ்தினாபுரத்தில் தங்கி இருக்கும் மக்கள் கூட்டம் அணிவகுத்து நின்று பாண்டவ இளவரசர்களுக்குப் பிரியாவிடை கொடுத்தது. அதிசயத்திலும் அதிசயமாக, அங்கிருந்த மூத்தோர் அனைவருக்கும் மிகவும் புதுமையாக ராணிமாதா தன் மாளிகையிலிருந்து வெளியே வந்தார். தன் கண்களில் கண்ணீருடன் குந்தி, திரௌபதி மற்றும் பாண்டவர்கள் ஐவர் ஆகியவர்களை அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்து தன் ஆசிகளைத் தெரிவித்தாள். மனம் நிறைய வருத்தத்துடன் அவர்களுக்குப்பிரியா விடை கொடுத்தாள்.

கடினமான மனம் படைத்த பீஷ்மர் கண்களில் கூட அன்று கண்ணீர் நிரம்பி இருந்தது. சகோதரச் சண்டை என்னவோ நிறுத்தப்பட்டு விட்டது; அது உண்மை தான். ஆனால்!!!!!! துரியோதனனா ஹஸ்தினாபுரத்தை ஆளுவது? இது சரியா? முறையா? தர்மமா? ஆனால் அவரால் பாண்டவர்களுடன் செல்ல இயலாது. ஏனெனில் அவர் தந்தை ஷாந்தனுவுக்கு ஹஸ்தினாபுரத்தைக் காப்பேன் என்று உறுதிமொழி கொடுத்துள்ளார். என்ன ஆனாலும் அவர் வாழ்க்கை கடைசி வரை இந்த ஹஸ்தினாபுரத்தில் தான். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஹஸ்தினாபுரம் ஒன்றே அவர் இலக்கு. இதை விட்டு அவர் செல்ல முடியாது.

தன் தாய் சத்யவதியை வேத வியாசர் கீழே விழுந்து நமஸ்கரித்தார். அங்குள்ள மற்றவர்களை ஆசீர்வதித்த அவர் தன் சீடர்களுடன் காண்டவப்ரஸ்தம் நோக்கிப் பயணித்தார். அங்கிருந்த மக்களுக்குப் பார்க்கையில் ஒரு மாபெரும் நகரமே இடம் பெயர்ந்து அங்கிருந்து செல்வது போல் தோன்றியது. ஆம், காண்டவப்ரஸ்தத்தை நோக்கி ஹஸ்தினாபுரத்தில் பாதி சென்று கொண்டிருந்தது. அங்கு எவர் இல்லை? பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், குரு வம்சத்தின் வாரிசுகளில் பலர், மஹாஜனங்கள், மல்லர்கள், வில்லாளிகள், அதிரதர்கள், மஹாரதர்கள், படை வீரர்கள், கைவினைக்கலைஞர்கள், என அனைவரும் தங்கள் குடும்பங்களுடனும் தங்கள் பொருட்களுடனும் காண்டவப்ரஸ்தம் நோக்கிப் பயணித்தனர்.  அதில் சில ஏழை மக்களும், தாங்கள் காண்டவப்ரஸ்தம் போயாவது தங்களுக்கெனச் சொந்தமாகச் சிறு அளவிலாவது நிலம் பெற்றுப்பயனடையலாம் எனத்தங்கள் குடும்பங்களுடன் வாழ்க்கையின் விடியல் நோக்கிப் பயணப்பட்டனர்.

No comments: