Tuesday, August 25, 2015

யுதிஷ்டிரன் பெற்ற பேறு!

யுதிஷ்டிரனின் மனநிலையைப் புரிந்து கொண்டவராக வியாசர் அவனையே ஒரு பரிதாபமான பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் யுதிஷ்டிரனுக்கு அவருடைய கண்கள் தனக்கு அளித்த கட்டளை என்னவெனத் தெளிவாகப் புரிந்தது!”தர்மத்தின் பாதையை விட்டு வழுவாதே மகனே!” இது தான் அந்தக் கண்கள் சொன்ன செய்தி! அவன் மனமாகிய குகையில் இதைக் குறித்து ஏற்கெனவே அவர்கள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் எதிரொலித்து அடங்கின. தன் பெரியப்பனை நிமிர்ந்து பார்த்தான். தன் கைகளைக் கூப்பி அவனை நமஸ்கரித்தான். பின்னர் தலையையும் மரியாதை காட்டும் பாவனையில் குனிந்த வண்ணம் பேச ஆரம்பித்தான்.

“குரு வம்சத்திலேயே மாட்சிமை பொருந்திய மன்னரே! உங்கள் முடிவை நான் சிரமேற்கொண்டு ஏற்கிறேன். இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்.” இதைக் கூறுவதற்குள் அவன் குரலில் அப்பிக் கொண்ட சோகமானது, அடுத்து அவன் கூறியவற்றைக் கேட்க விடாமல் செய்தது.” என் ஐந்து சகோதரர்கள் சார்பாக நான்…………” யுதிஷ்டிரன் மேற்கொண்டு என்ன சொன்னான்?

அனைவரும் தங்கள் மூச்சை அடக்கிக் கொண்டு காத்திருந்தனர். இந்த வாக்குறுதி, சத்தியம் ஆகியவற்றின் முடிவு தான் என்ன? இது எங்கே போய் முடியப் போகிறது? ராஜசபை மொத்தமும் காத்திருக்கையில் அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கிருஷ்ணனின் குரல் ஒலித்தது. என்ன சொல்லப் போகிறான் கிருஷ்ணன்? மாயங்களையும்,, அதிசயங்களையும் எளிதாக நிறைவேற்றும் கிருஷ்ணன் இப்போதும் ஏதேனும் மாயத்தை நிகழ்த்தப் போகிறானா? ஐந்து சகோதரர்களையும் இதை ஏற்கச் செய்வானா? அல்லது இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தச் சொல்லப் போகிறானா? அல்லது இப்போது யுதிஷ்டிரன் எடுத்திருக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பானோ? என்னதான் நடக்கப் போகிறது?”

“கங்கையின் மைந்தரே! மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து பிதாமகரே! என்னை இங்கே இந்த சபையில் பேச அனுமதி கொடுங்கள்!” பீஷ்மரின் பக்கம் திரும்பி அனுமதி வேண்டினான் கிருஷ்ணன். பீஷ்மரும் தன் தலை அசைவால் அனுமதியைக் கொடுத்தார். முற்றிலும் தெளிவாக அனைவருக்கும் காதில் விழும் வண்ணம் அதே சமயம் மெதுவாகக் கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான்.

“குருவம்சத்தில் சிறந்தவரே!” என திருதராஷ்டிரனை விளித்த கிருஷ்ணன், அவனைப் பார்த்து, “நீங்கள் மிகவும் நன்றாகவும், பாண்டித்தியத்துடனும், விவேகத்துடனும் பேசினீர்கள்.” ராஜசபை ஆச்சரியத்தில் திகைத்துப் போயிருக்க எவருக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அனைவர் முகத்திலும் ஆச்சரியம் கப்பி இருக்க, அதிகம் ஆச்சரியம் அடைந்தது யுதிஷ்டிரனே என்று சொல்ல வேண்டியது இல்லை. அர்ஜுனனுக்கும், நகுலனுக்கும் கோபம் வந்தாலும் தங்களை அடக்கிக் கொண்டனர். ஹூம்! கடைசியில் வாசுதேவக் கிருஷ்ணன் இந்த அநியாயத்திற்குத் துணை போகிறான்! இந்தப் பாரபட்சமான போக்கை ஆதரிக்கிறான். சஹாதேவன் முகம் உணர்ச்சிகளற்ற கல்லைப் போல் காட்சி அளித்தது. அவன் தரையைப் பார்த்த வண்ணம் சிலையைப் போல் குனிந்து உட்கார்ந்திருந்தான்.

“விசித்திரவீரியனின் புத்திரரே! நீங்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் பேசினீர்கள். நீங்கள் இந்தக் குரு வம்சத்து மாபெரும் சாம்ராஜ்யத்தைச் சரியாகவும் உங்கள் குமாரர்கள் மற்றும் தம்பியின் குமாரர்கள் ஆன பாண்டவர்களுக்கும் இடையில் சமமாகவும் பிரித்திருக்கிறீர்கள். “கிருஷ்ணன் குரலின் சந்தோஷம் அனைவரையும் ஆச்சரியப் பட வைத்தது. “இனியாவது குரு வம்சத்தினரிடையே அமைதியும் ஒற்றுமையும் நிலவும் என நம்புவோம்.” என்று சொன்ன கிருஷ்ணன் சுற்றிலும் அனைவரையும் பார்த்தான். இந்த ராஜசபை இதை எதிர்பார்க்கவில்லை! அதுவும் கிருஷ்ணனிடமிருந்து நிச்சயமாக இதை எதிர்பார்க்கவே இல்லை. பாண்டவர்கள் ஐவருக்கும் அத்தை மகனும் ஒரு நண்பனுக்கு மேல் மேலானவனாகவும் இருக்கும் வாசுதேவக் கிருஷ்ணன் இப்படி அவர்கள் ஐவரும் நாடு கடத்தப்பட்டு காட்டுக்கு அனுப்பப்படுவதை ஆதரிக்கிறானே!

ஆனால் யுதிஷ்டிரன் அமைதி அடைந்தான். அவனுக்குள் நிம்மதி வந்தது. கிருஷ்ணனுக்கே இது சம்மதமா? தர்மத்தைக் காப்பதற்கும் தர்ம சாம்ராஜ்யம் நிலைநாட்டவுமே பிறப்பெடுத்திருக்கும் கிருஷ்ணனுக்கே இது சம்மதம் எனில்! யுதிஷ்டிரன் இதை ஒத்துக் கொண்டதின் மூலம் தவறு ஏதும் செய்யவில்லை! கிருஷ்ணன் மேலும் பேசினான்.

“மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து அரசே! உங்கள் முடிவு உங்கள் தர்ம நியாயங்களை அலசிப்பார்க்கும் போக்கையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. இந்தக் குலத்தின் அருமையான வாரிசும் நீதிமானும், நேர்மையானவனுமான யுதிஷ்டிரன் தன் தம்பிமார்கள் நால்வருடனும் சேர்ந்து உம் மக்கள் நூற்றுவருடனும் இந்த தேசத்தைப் பகிர்ந்து கொள்ளச் சம்மதம் தெரிவித்து விட்டான். இப்போது இங்கு உள்ள தானியங்கள், தங்கம், கால்நடைச் செல்வங்கள், குதிரைகள், ரதங்கள், யானைகள், படை வீரர்கள் மற்றும் படைக்கலங்கள் ஆகியவற்றையும் இவ்வண்ணமே சரிசமமாகப் பிரிக்க வேண்டும். இல்லையா? மாட்சிமை பொருந்திய அரசே! என்ன சொல்கிறீர்கள்? நான் சொல்வது சரிதானே?” என்று கம்பீரமாகக் கேட்டான் கிருஷ்ணன். அவன் குரலில் ஒரு வசீகரத் தன்மை இருந்தது.

துரியோதனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆஹா! இந்த முடிவின் மூலம் நாம் நம் செல்வத்தை வளத்தையும் பங்கிட்டாக வேண்டும் போலிருக்கிறதே! முடியாது! முடியாது! இதைச் சொல்ல நினைத்து வாயைத் திறந்தான் துரியோதனன். ஆனால் அவன் குரலே அவனை மோசம் செய்து விட்டது. அதற்குள்ளாகக் கிருஷ்ணன் மேலும் பேசினான்.” ஒரு வேளை மரியாதைக்குரிய பிதாமகர் பீஷ்மர் இவற்றை எல்லாம் யோசித்து முடிவு செய்திருப்பார்.” என்ற வண்ணம் பீஷ்மர் பக்கம் திரும்ப, அவரும் மிக மிக அவசரமாகவும், வேகமாகவும் “ஆம், ஆம், நிச்சயமாக!” என்ற வண்ணம் கிருஷ்ணன் சொல்வதை ஆமோதித்தார். இந்தச் சூழ்நிலைக்கு ஏற்பப் பேசியாக வேண்டும் என்னும் எண்ணம் அவருள் உதித்தது.

திருதராஷ்டிரனுக்கோ இதை எல்லாம் யோசித்துப் பார்க்கக் கூடிய அளவுக்கு அறிவுத் திறன் இல்லை. இப்போது இவற்றை எல்லாம் கேட்டதும் அவனுக்குத் தலை சுற்றியது. ஆனால் அவனால் செய்யக் கூடியது அப்போது ஒன்றே ஒன்றுதான். “ஆம் வாசுதேவா! ஆம், நீ சொல்வது சரியே!” என்பது மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. வியாசர் முகம் புன்னகையில் விரிந்தது. கிருஷ்ணன் குறிப்பிட்டவற்றின் உட்கருத்தைப் புரிந்து கொண்ட அவர், வெளிப்படையாக, “மகனே திருதராஷ்டிரா, நன்றே சொன்னாய்!” என்று அவனைப் பாராட்டினார்.

திருதராஷ்டிரன் தோள்களின் மேல் தன் கைகளை வைத்துக் கொண்டு கிருஷ்ணன் மேலும் பேசினான். “விசித்திர வீரியனின் மகனே! குரு வம்சத்து அரசே! பரதனால் ஆளப்பட்ட இந்தப் பரந்த பாரத வர்ஷத்தின் பாரம்பரியமான நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் பிறழாமல் அவற்றைப் போற்றிப் பாதுகாப்பது மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. பரத வம்சத்துப் பாரம்பரியம் தழைத்து ஓங்கட்டும்!” என்றான். பின்னர் பீஷ்மரைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய தாத்தா அவர்களே! இப்போது நாங்கள் யாதவர்களில் சில தலைவர்கள் இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் பாண்டவர்கள் ஐவரோடு காண்டவப்ரஸ்தத்துக்குச் சென்று அவர்களுக்கு உதவிகள் செய்ய விரும்புகிறோம். அதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறோம்! கிடைக்குமா?” என்று கேட்டான்.

“ஆஹா! இதற்கு என் அனுமதி தேவையா? நீ நிச்சயமாக அவர்களுடன் சென்று உதவி செய்ய வேண்டும் வாசுதேவா! இது என் கோரிக்கை! “ என்று பீஷ்மர் கூறினார். அவருடைய கடுமை பொருந்திய முகத்தில் எப்போதேனும் தோன்றும் புன்னகை மலர்ந்தது. யுதிஷ்டிரனோ அங்கேயே அப்போதே கிருஷ்ணன் கால்களில் விழுந்துவிடுவான், போல் இருந்தான். வயது மட்டும் தடை செய்யவில்லை எனில் கிருஷ்ணனை நமஸ்கரித்திருப்பான். இப்போது மிகுந்த வணக்கத்துடன் கிருஷ்ணனைப் பார்த்தான் யுதிஷ்டிரன். கிருஷ்ணன் அவர்களுடைய ரக்ஷகன், புரவலன், அவர்களைப் பாதுகாப்பவன். இப்போது புதிய இடம் செல்கையில் கூடவே வந்து உதவவும் போகிறான். இதைவிடப்பெரும்பேறு வேறென்ன வேண்டும்?