Friday, May 22, 2015

ஹஸ்தினாபுர சிங்காதனம் யாருக்கு? கோபுவின் கவலை!

ஆயிற்று! பானுமதி இறந்து போய்ப் பத்து நாட்கள் ஆகிவிட்டன. இனி அவள் ஆட்டத்தையும், கொண்டாட்டத்தையும் கலகலவென்ற சிரிப்பையும் நாம் இனி கேட்கப் போவதில்லை; பார்க்கப் போவதில்லை. அரச குடும்பத்தினர் மட்டுமின்றி  ஹஸ்தினாபுரம் முழுவதும் அவள் இறந்ததை துக்கம் அனுஷ்டித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னமும் பலருக்கு அதிர்ச்சி நீங்கவே இல்லைதான்! பத்துநாட்களுக்கான சடங்குகளும் விதிகளும் முடிந்த பின்னர் பதினோராம் நாளுக்கான சடங்குகள் நடைபெற்றன. பனிரண்டாம் நாள் தன் தலை முடியைப் பாதி மழித்துக் கொண்டிருந்த துரியோதனன் பானுமதிக்காகப் பிண்டதானம் செய்து சடங்குகளை நிறைவேற்றினான். ஆரியர்களுக்கு இப்படிப் பனிரண்டாம் நாள் பிண்டதானம் செய்வதால் அதுவரை பூமியில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் பானுமதியின் ஜீவன் அமைதி பெற்றுப் பித்ருலோகம்போய்ச் சேரும் என்பது வழிவழியாக வந்த அவர்களுடைய நம்பிக்கை.

ஹஸ்தினாபுரத்து மக்களோ எப்போதோ ஓரிருமுறை ஒரு சில அரசக் கொண்டாட்டங்களில் மட்டுமே பானுமதியைப் பார்த்திருந்தனர். அவள் அழகு அவர்களைக் கவர்ந்திருந்தது. எப்போதும் சந்தோஷமாகப் புன்னகைக்கும் இளவரசி இன்று இல்லை என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. கடவுளருக்கெல்லாம் கடவுளான அந்த மஹாதேவனுக்கு ஹதகேஸ்வர் என்னும் பெயரில் அவள் ஒரு கோயில் எழுப்பியபோது ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவருமே அவள் பக்தியைக் கண்டு வியந்து போற்றினார்கள்; இப்ப்போது அந்தக் கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் அவள் இல்லாமல் வெறுமையாக இருக்கும் என்பதை உணர்ந்து மனம் வருந்தினார்கள்.  என்றேனும் ஒரு நாள் துரியோதனன் அவள் ஆளுகைக்கு உட்படுவான் என்றே பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அரச மாளிகைக்கு நெருங்கி இருந்த அனைவரும் இதைத் தான் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்ப்புப் பொய்யாகும் வண்ணம் இன்று பானுமதியே உயிருடன் இல்லை.

பானுமதி இறந்த மறுநாள் அவள் சகோதரன் சுஷர்மாவுக்கும், ஜாலந்திராவுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. சுஷர்மா துரியோதனன் ஜாலந்திராவை அடுத்தாற்போல் கல்யாணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறான் என்றும், மற்ற இளவரசிகளை விட அவள் துரியோதனனைக் கல்யாணம் செய்து கொள்வதின் பலாபலன்களையும் எடுத்துக் கூற ஆரம்பித்தான். இதைக் கேட்ட ஜாலந்திரா கொதிப்படைந்தாள். உடனடியாக துரியோதனன் மாளிகையை விட்டு வெளியேறி பானுமதியின் இறுதிச் சடங்குகள் முடியும்வரை வேறு எங்காவது தங்கலாம் என்று முடிவு கட்டி சுஷர்மாவை அதற்கு வற்புறுத்தினாள்.  அவள் தொந்திரவு பொறுக்க முடியாமல் அவர்கள் இருவரும் ரேகாவுடன் அங்கிருந்து வெளியேறினார்கள். கிருஷ்ணன் வசித்த மாளிகைக்குச் சென்றனர். அங்கே உத்தவனின் இரு நாககுல மனைவியரான கபிலாவும், பிங்கலாவும் அவர்களை எதிர்கொண்டு உபசரித்தனர். அவர்கள் இந்தச் சடங்குகளும் துக்கதினங்களும் முடிந்த பின்னர் ஒரு நல்ல நாள் பார்த்து இங்கிருந்து கிளம்பிக் காம்பில்யம் செல்லும் முடிவில் இருந்தனர்.

நாட்கள் நகர்ந்தன. பானுமதி இறந்து பதின்மூன்றாம் நாள் இரவு. கோபு வழக்கம்போல் பீமனின் உடலைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தான். தினம் இரவு நேரத்தின் தன் அருமை எஜமானுக்கு இந்தச் சேவையைச் செய்வதில் அவன் சந்தோஷம் அடைந்தான். அப்போது தான் அவன் கேள்விப் பட்ட பல விஷயங்களையும் பீமனுடன் பகிர்ந்து கொள்வான். அது போல் இன்றும் தன் மனதில் காலையில் இருந்து வெளிவரத் தவித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை பீமனிடம் சொல்ல ஆரம்பித்தான். “பிரபுவே, நான் இல்லாதபோது வாரணாவதத்தில் எரிந்து கொண்டிருந்த மாளிகையிலிருந்து நீங்கள் தப்பி இருக்கக் கூடாது. நீங்கள் தனியாக இருந்ததில் உங்கள் உடலும் வீணாகப் போய் விட்டது. அதோடு உங்கள் ஆயுதங்களும் துருப்பிடித்துப் போய் விட்டன. நான் இருந்திருந்தால் தினம் உங்கள் உடலையும் ஆயுதங்களையும் ஒரு சேரக் கவனித்துக் கொண்டிருப்பேன். “ என்றான்.

அதற்கூ பீமன், “ அட! என்ன அப்பா நீ? நீ இல்லை எனில் உலகமே தலைகீழாகவா போய்விடும்? உன்னால் தான் அதிசயங்களைச் செய்ய முடியுமா? நீ இல்லை எனில் எவராலும் முடியாதா என்ன?” என்று உடலை முறித்துக் கொண்டே மிகவும் சோம்பலாகச் சொன்னான்.

“பிரபுவே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்குத் தெரியும்! சொல்கிறேன் கேளுங்கள். இளவரசி பானுமதி சாகும் முன்னர் என்ன செய்தாள் தெரியுமா?கிருஷ்ண வாசுதேவன் அவள் அருகில் இருந்திருக்கிறான். அவனிடம் என்ன வேண்டிக் கொன்டாள் தெரியுமா? அவனைப் பார்க்க வேண்டும் என அவள் நினைத்திருக்கிறாள். உடனே உங்கள் அத்தை மகன் அவள் முன்னே தோன்றி இருக்கிறான். அவள் அருகே அமர்ந்து அவளுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லி அவளை சகோதரி என்றும் அழைத்திருக்கிறான். ஒரு மனிதன் பிரசவித்த அந்நியப் பெண்ணின் அருகேயே செல்லக் கூடாது. கிருஷ்ண வாசுதேவன் சென்றிருக்கிறான். அந்தக் குழந்தையும் உயிருடன் இல்லையாமே!” மெதுவாகப் பேசிய கோபு மீண்டும் ரகசியம் பேசும் குரலில் “அவளிடம் அவன் அடுத்த பிறவியில் உன்னைச் சந்திக்கிறேன் என்று சொல்லி இருக்கிறான்.” என்று ஏதோ முக்கியமான ரகசிய விஷயத்தைச் சொல்வது போல் கூறினான்.

“கதை கட்டி விடாதே! கோபு, உன் வேலையைப் பார்!” என்று சீறினான் பீமன்.

“இல்லை, பிரபுவே, இல்லை. நான் என்னுடைய இந்தப் பூணூல் மேலே சத்தியம் செய்து சொல்கிறேன். புனிதமான இந்தப் பூணூலின் மேல் சத்தியமாக இவை அனைத்தையும் எனக்கு ரேகா என் தாயிடம் சொல்லித் தான் தெரிந்தது.”

“ஹூம், பூணூல் மேல் சத்தியமா? அது சரி! அப்புறம் என்ன நடந்தது?” என்றான் பீமன். அதற்கு கோபு இன்னமும் குரலைத் தழைத்துக் கொண்டு, “பிரபுவே! இப்போது நான் சொல்லப் போவது மிக ரகசியமாக இருக்க வேண்டும். உங்கள் அத்தை மகன் பானுமதிக்கு என்ன சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் தெரியுமா? துரியோதனன் தான் ஹஸ்தினாபுரத்தை ஆளுவான் எனச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான்.” என்றான். பீமன் உடனே கோபுவின் காதுகளை வலுக்கும்படி வேகமாகத் திருகினான். “நிச்சயமாய் இல்லை! அவன் எங்களுக்கு அத்தை மகன் மட்டுமல்ல; நண்பனும் கூட! வாசுதேவன் இப்படி எல்லாம் செய்ய மாட்டான்..” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

கோபுவுக்கு வெறுப்பு மேலிட்டது. அலுப்புடன், “சரி, இப்போது நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நாள் உண்மை தெரியும். அப்போது உங்களுக்கு என் வார்த்தையைக் கேட்கவில்லையே என்பது புரியும். ரேகாவுக்கு அனைத்தும் தெரியும். வாசுதேவன் இந்த வாக்குறுதியை பானுமதிக்கு அளித்ததை ரேகா கேட்டிருக்கிறாள்.” என்றான். “அவள் தூக்கக் கலக்கத்தில் சொப்பனம் கண்டிருக்கலாம். அல்லது அளவுக்கு மீறிய துக்கத்தில் புரியாமல் இருந்திருக்கலாம். சரி, சரி, இன்றைக்கு இது போதும்! “ என்றான் பீமன். பின்னர் கோபுவின் வாடிய முகத்தைப் பார்த்து விட்டு, “கவலைப்படாதே! போய்த் தூங்கு!” என்று அவனைத்ட் ஹட்டிக் கொடுத்தான். பீமனும் திரும்பிப் படுத்த உடனேயே தூங்கி விட்டான். அவன் தூக்கத்தில் பரத வம்சத்து அரியணையில் துரியோதனன் ஏறி அமருவதற்கு வாசுதேவக் கிருஷ்ணன் உதவுவதைப் போல் கனவு கண்டான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட விழித்துக் கொண்டவன், தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான். “கிருஷ்ணன் ஒருக்காலும் நம்மை ஏமாற்ற மாட்டான். இல்லை; இல்லை; கோபு சொன்னது உண்மையாக இருக்காது!” என்று சொன்னவண்ணம் மீண்டும் படுத்தான்.