Tuesday, February 24, 2015

பலியாவின் கதை! தொடர்ச்சி!

பலியாவின் துரதிருஷ்டம் என்னவெனில் பாண்டவர்கள் ஐவரும் ஹஸ்தினாபுரத்தை விட்டு நாடு கடத்தப்பட்டு வாரணாவதம் சென்ற சமயம் அவர்களுடன் அவனால் போக முடியவில்லை என்பதே! ஏனெனில் அப்போதே அவன் முதுமையை எய்தி இருந்ததோடு கிட்டப்பார்வை மட்டுமே படைத்திருந்தான்.  அவனால் நடக்கவும் இயலாமல் பிறர் கைகளை எதிர்பார்க்கும் நிலையில் இருந்து வருகிறான்.  ஆனால் அவன் பேரன் கோபு பீமனுடன் சென்றான். பீமனின் சரீரத்துக்குத் தேவையான சிகிச்சையை அங்கேயும் அவனே செய்து வந்தான்.  ஆனால் என்னே துரதிருஷ்டம்!  ஐந்து சகோதரர்களும் நெருப்பில் வெந்து இறந்துவிட்டார்கள் என்னும் துக்கச் செய்தியைத் தாங்கிக் கொண்டு திரும்பி வந்தான் அவன்.

ஆனாலும் பலியா அரச குடும்பத்தினரின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரியவனாகவே இருந்து வந்தான்.  அவன் குலத்தோரும் அவனிடம் மிகவும் மரியாதை செலுத்தியதோடு அவன் தலைமையை ஏற்றே வந்தனர். இப்போது இங்கே உள்ள குரு வம்சத்தினருக்கே அவனும், அவன் உறவின்முறை மக்களும் சேவை செய்து வந்தாலும் அதையும் முழு விசுவாசத்தோடு நம்பிக்கைக்கு உகந்த முறையில் செய்ய வேண்டும் என்பதில் அவன் மிகக் கண்டிப்புக் காட்டி வந்தான்.  அவன் இனத்து மக்களும் அவன் நம்பிக்கை பொய்யாகாவண்ணமே நடந்து கொண்டனர். ஆனாலும் பாண்டவர்களையும் அவர்களுக்கு நேர்ந்த துர்மரணத்தையும் அவனால் மறக்க இயலவில்லை.  அவர்களுக்கு நேர்ந்த துரதிஷ்டகரமான விபத்தைக் குறித்தும் அவன் அறிய நேர்ந்ததோடு அல்லாமல், தன் சின்ன எஜமான் ஆன பீமனும் அதில் இறந்தது குறித்து நினைத்து வருந்தினான்.

அங்கிருந்த குடியிருப்பில் ஒவ்வொரு மல்லனுக்கும் ஒரு குடில் இருந்தது.  அவரவர் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர்.  அவரவருக்கு எனக் குறிப்பிடப் பட்டிருந்த எஜமானர்களுக்கு அவர்கள் குடும்பம் சேவை செய்து கொண்டு வந்தது. அந்தக் குடியிருப்பு வளாகத்தின் மையத்தில் அவர்கள் மல்யுத்தம் செய்யும் மைதானம் இருந்தது.  அவர்கள் அரச சேவை முடிந்து ஓய்வில் இருக்கையில் இங்கு வந்து மல்யுத்தப் பயிற்சி செய்வார்கள். ஒருவருக்கொருவர் யுத்தம் செய்து கொள்வார்கள். பெண்களும் ஆண்களுக்குத் துணையாக அரச குடும்பத்துப் பெண்டிருக்குத் தம் சேவைகளை ஆற்றுவதோடு அல்லாமல் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டனர். பீமனுக்குத் தெரிந்தவரையில் இந்த அக்காடக்கா குழந்தைகள் அழுக்காகவும், நிர்வாணமாகவும் விளையாடும் இடமாகவே இருந்து வந்தது.  ஆங்காங்கே பசுக்கள் சுற்றிக் கொண்டிருக்கும். வயதான பெண்கள் நூல் நூற்றுக் கொண்டிருப்பார்கள்.  சளசளவென்று பேசிக் கொண்டும் இருப்பார்கள்.

ஆனால் இப்போது பலியாவின் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு பீமன் உள் நுழைகையிலேயே அந்த இடம் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சிறு வயதில் அந்த இடத்தில் மல்லர்களோடு தான் விளையாடிய நினைவுகளெல்லாம் பீமன் கண்ணெதிரே தோன்றி மறைந்தன.  இப்போது அங்கே ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத ஆண்களும், பெண்களும் பீமன் பலியாவின் வண்டியைத் தள்ளிக் கொண்டு வருவதைப் பார்த்துக் கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.  பீமனும் தன் பங்குக்கு அவர்களைப் போல் கத்தித் தன் மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டதோடு அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து விளையாட்டாக உறுமிக் காட்டினான்.  அவனுக்கு அடையாளம் தெரிந்த ஓரிருவரைப் பெயர் சொல்லி அழைத்த பீமன் தன்னுடைய உறுமலுக்குப் பயப்படாதவர்களைக் கண்டு மகிழ்ந்து அவர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தினான். பீமன் ஒருபோதும் தன்னை ஒரு அரசகுமாரனாக நினைத்துக் கொண்டதே இல்லை.

இப்போதும் அப்படியே நடந்து கொண்டான்.  அவன் தலையில் சூடி இருக்கும் கிரீடம், அரச குடும்பத்தினரின் நகைகள், பட்டாடைகள் போன்றவையே தவிர்க்க முடியாமல் அவன் அரச குலத்தவன் என்பதை உணர்த்திக் கொண்டிருக்கும். அவனுடைய அற்புதமான நடத்தையால் அவன் எவ்வளவு எளியவரையும் எளிதில் அணுகித் தன் வயப்படுத்தி விடுவான். அவர்களைத் தன்னில் ஒருவராக நினைக்கச் செய்வான்.  இப்போது அங்கிருந்த மக்களைத் திரும்பிப் பார்த்து,”இந்தக் கிழவன் உங்களை எல்லாம் மிக மோசமாக நடத்தி வருகிறான், இல்லையா?” என்று குறும்புடன் கேட்டான்.  பின்னர் அவனே சிரித்துக் கொண்டான். “கவலைப் படாதீர்கள்!  நான் தான் வந்து விட்டேனே! இவனை இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன். இவனுக்குச் சரியான தண்டனை தரப் போகிறேன்.” என்றான்.

வயதான பெண்கள் சத்தமாகச் சிரிக்க, இளம்பெண்கள் தங்கள் முகத்தைத் துணியால் மூடிக் கொண்டு கிளுகிளுவெனச் சிரித்து மகிழ்ந்தனர்.  பீமன் இப்போது அங்கிருந்த குழந்தைகள் பால் தன் கவனத்தைத் திருப்பினான்.  குழந்தைகள் அனைவரும் அவன் உருவத்தையும், குரலையும் அதிசயம் பொங்கப் பார்த்ததைக் கண்டான்.  வேண்டுமென்றே தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு கத்தினான். “நான் இப்போது பலியாவை கங்கையில் மூழ்க அடிக்கப்போகிறேன்.  இல்லை எனில் அவன் எளிதில் சாக மாட்டான்.  இப்போ நீங்க அனைவரும் இங்கிருந்து செல்லவில்லை எனில் உங்களையும் கங்கையில் மூழ்க அடிப்பேன்.” என்று சத்தமாகக் கத்தினான். ஆனால் அந்தக் குழந்தைகள் குதித்துக் கும்மாளமிட்டன.  அவர்களுக்கு அச்சமும், அதே சமயம் மதிப்பும் கொடுக்கிற பலியாவைக் கங்கையில் மூழ்க அடிப்பது என்பது விநோதமானதாகவும், ரசிக்கக் கூடியதாகவும் தோன்றியது அவர்களுக்கு.  கூச்சலிட்டுத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

பீமன் பலியாவைத் தன்னிரு கரங்களால் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்று அங்கிருந்த படுக்கையில் அவனை அமர வைத்தான்.  பின்னர் தன் அரைக்கச்சையைக் கழட்டிவிட்டு வாளை அங்கிருந்து எடுத்துக் கீழே போட்டான்.  தன் தலையிலிருந்த கிரீடத்தையும் கழட்டி ஒரு புறம் வைத்தான். பலியாவின் மருமகள் அவனுக்கு அமர அளித்த ஆசனத்தைப் புறம் தள்ளிவிட்டுக் கீழே அமர்ந்து கொண்டான்.

1 comment:

ஸ்ரீராம். said...

//பீமன் ஒருபோதும் தன்னை ஒரு அரசகுமாரனாக நினைத்துக் கொண்டதே இல்லை.//

பல இடங்களில் இது உணர்த்தப்படுகிறது.

சுவாரஸ்யமான காட்சிகள். எவ்வளவு நுணுக்கமாக விவரங்கள் ஆங்காங்கே எழுதப் பட்டிருக்கின்றன என்பது ஆச்சர்யம் தருகிறது.