Monday, August 18, 2014

சத்யவதி மனம் திறக்கிறாள்!

வார்த்தைகள் வரமுடியாமல் தொண்டையை அடைத்துக்கொள்ள, துரியோதனன் மேலும் தடுமாறிய வண்ணம் பேச ஆரம்பித்தான். “இப்போது அனைவருமே எனக்கு எதிரிகளாகிவிட்டனர் பாட்டியம்மா.  தாத்தா பீஷ்மர் விதுரச் சித்தப்பாவை காம்பில்யத்துக்கு அனுப்பி பாண்டவர்களுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்கிறார்.  என் சொந்த குருநாதர், என் அத்தியந்த சிநேகிதர் என நான் நினைத்துக் கொண்டிருந்த துரோணாசாரியரோ, பாண்டவர்களையே ஆதரிக்கிறார்.  அவருக்கு நான் என் குருகுல காலம் முழுவதும் தகுந்த சேவைகளைச் செய்து வந்திருக்கிறேன்.  தந்தையும் பாண்டவர்களை வரவேற்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.  இங்கே எவருக்கும் நான் முக்கியம் அல்ல; என்னுடைய தேவை எவருக்கும் வேண்டாம்.” பொருமினான் துரியோதனன்.  “ஏன் அப்படிச் சொல்கிறாய், குழந்தாய்?  இப்படி எல்லாம் பேசாதே!  பாண்டவர்கள் எனக்கு எத்தனை அருமையானவர்களோ அப்படியே நீயும், உன் சகோதரர்களும் எனக்கு அருமையானவர்களே!  உன் வாழ்க்கையே ஏமாற்றத்தில் கழிவதாக நீ நினைப்பது எனக்குத் தெரியும். ஆனால் உன்னுடைய இந்த மோசமான சுபாவமே இதற்குக் காரணம் என்பதை நீ அறியவோ, புரிந்து கொள்ளவோ மறுக்கிறாய், குழந்தாய்! அதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறாய்?” சாவதானமாக, நிதானமாகத் தன் குரலின் கனிவு மாறாமல் கேட்டாள் சத்யவதி.


துரியோதனன் தன் கைகளைக் கூப்பி சத்யவதியை வணங்கினான்.  “மாட்சிமை பொருந்திய ராணிமாதா, தயவு செய்து தாங்கள் இப்போது என்னைக் காப்பாற்று ரக்ஷிக்க வாருங்கள்.  இந்தக் குரு வம்சத்தினரின் மாபெரும் சாம்ராஜ்யத்துக்குக் காவல் தேவதையாகவும், ஆலோசனைகளை அளிக்கும் முக்கியமான நபராகவும் தாங்கள் தான் செயல்படுகிறீர்கள்.  நீங்கள் இல்லை எனில் குரு வம்சம் இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை அடைந்திருக்காது என்பதை நான் பெரியவர்களின் பேச்சுக்களின் மூலம் அறிந்துள்ளேன்.  தாயே! பாண்டவர்களை இங்கே கொண்டு வந்து தங்க வைத்தால் நாங்கள் நூற்றுவரும் இங்கே வாழ முடியாது.  நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை.  தாயே, நானும் என் சகோதரர்களும் அழியத் தாங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள்.”


கனிவான புன்சிரிப்பு  இதழ்களில் ஓட அவனைப் பொறுமையுடன் பார்த்தாள் சத்யவதி.    அவனுடைய துக்கம் காரணமாக மீண்டும் தொண்டையை அடைத்துக்கொள்ள துரியோதனனின் பேச்சுத் தடைப்பட்டது.  சத்யவதி அப்போது அவனைப் பார்த்து “துரியோதனா! ஏன் அப்பா, எல்லா விஷயத்திலும் எதிர்மறையாகவே சிந்திக்கிறாய்? இருட்டான அந்தப் பாதையை விட்டுவிட்டு வெளிச்சமான நேர்மறையான பாதைக்கு வா!  உன்கண்களை நேர்மை, நீதியின் பக்கம் திருப்பு.  பாண்டவர்கள் யார்?  உன் சித்தப்பனின் மகன்கள்.  உன் சகோதரர்கள்.  சக்கரவர்த்தி பரதன் அமர்ந்து ஆண்டு வந்த இந்தத் தொன்மையான சிங்காதனத்துக்கு முழு உரிமை பெற்றவர்கள்.  உனக்கு முன்னர் பிறந்தவர்கள்.  ஏற்கெனவே அவர்கள் பல விஷயங்களிலும் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டார்கள்.  அவர்களின் தந்தையின் வீடான இங்கு அவர்களுக்கு உரிமையானதைப் பெற அவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டாமா? ஒரு மரியாதையான இடத்தைக் கொடுக்க வேண்டாமா? “ சத்யவதி மிகவும் உருக்கமாகக் கல்லும் கரையும் வண்ணம் இவற்றைக் கூறினாள்.  ஆனால் துரியோதனனைத் தவிர வேறு யாராக இருந்தாலும் இந்த வார்த்தைகளுக்கு உருகி இருப்பார்கள் தான்.  துரியோதனனுக்கு வந்த கோபத்தில் அவன் பழிப்புக்காட்டுவது போல் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.  அவன் மனம் சிறிது கூட இளகவே இல்லை.


“அவர்களுக்கு இங்கே இடம் இல்லை.  தாயே, ஹஸ்தினாபுரம் அவர்களுக்கு உரியதன்று. தாயே, மற்ற அனைவரையும் விடத் தாங்கள் அனைத்தும் அறிந்தவர்.  இல்லையா?  உண்மையைச் சொல்லுங்கள்.  இப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள் ராணி மாதா!  அவர்கள் அனைவரும் உண்மையிலேயே பாண்டுவின் புத்திரர்களா? அவர்கள் ஐவருக்கும் இந்த வீட்டில், இந்த அரண்மனையில் மட்டுமல்ல, ஹஸ்தினாபுரத்தில் வசிக்கக் கூட உரிமை இல்லை. “ துரியோதனன் தன்னிலையை இழந்தவனாகப் பேச ஆரம்பித்தான்.


சத்யவதியின் அழகான முகம் சொல்லொணா துக்கத்தைக் காட்டியது.  நிலவைக் கருமேகம் மறைப்பது போல் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி காணாமல் போனது.  சில கணங்கள் எல்லையற்ற பரிதாபத்துடனும், கருணையுடனும் துரியோதனனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் என்னதான் பொறுத்துக் கொண்டிருந்தாலும் அவள் உள் மனது துரியோதனனின் இந்தத் தகாத வார்த்தைகளால் கசந்து நொந்து போனது.  என்றாலும் பொறுமையைக் கைவிடாமல், “குழந்தாய், துரியோதனா!  நீ எப்போது உன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தப் போகிறாய்? உன் பொறாமை, தீரா வெறுப்பு ஆகியவற்றை எப்போது வெல்லப் போகிறாய்? “ சத்யவதி நிதானமாகவே கேட்டாள்.


“நான் பாண்டவர்கள் ஐவரையுமே வெறுக்கிறேன். ஒன்று அவர்கள் சாகவேண்டும்;  இல்லையேல்  நான் சாகவேண்டும்.” விரக்தியுற்றவன் போல் பேசினான் துரியோதனன். “மனம் இருந்தால் மார்க்கமுண்டு, துரியோதனா! நீங்கள் அனைவருமே இணக்கமாக இருந்து ஒற்றுமையுடன் இந்த நாட்டை ஆள முடியும். நீ என்ன செய்துவிட்டாய் என்பதை நீ அறிவாயா, துரியோதனா?  நீ என் மனதில் ஆறாமல் இருந்த ஒரு பழைய காயத்தை, ஆழமான காயத்தை , நான் இன்று வரை ஆறிவிட்டது என நினைத்திருந்த ஒன்றைக் குத்திக் கிளறிப் புண்ணாக்கி விட்டாய்!  அந்தக் காயத்தில் இருந்து இப்போது ரத்தம் கொட்டுகிறது, குழந்தாய், ரத்தம் கொட்டுகிறது.” சொல்லும்போதே தாங்கொணா துக்கத்தைக் காட்டிய அவள் குரல் இப்போது நடுங்கியது.  மேலும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி அந்த அழகான அமைப்பான கன்னங்களில் வழிந்தோடியது.  நீண்ட அவள் கண்களில் பெருகி இருந்த கண்ணீரானது  கரையை உடைத்துக் கொண்டு வரும் நதியின் வெள்ளம் போல் வர ஆரம்பித்தது.


தன் வார்த்தைகளால் ராணிமாதாவுக்கு இவ்வளவு தாங்கொணாத் துயர் ஏற்படும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்காத துரியோதனன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.  எப்போதும் கனிவையும், கருணையையும், மகிழ்ச்சியையும் காட்டும் அந்த முகத்தில் இப்போது தெளிவாகக் காணப்பட்ட துக்கத்தை அதிசயமாகப் பார்த்தான்.  “துரியோதனா, உன் வயதுக்கு நீயாகப் புரிந்து கொள்வாய் என எதிர்பார்த்தேன். பாண்டவர்கள் ஐவரையும் குறித்து நீ சொன்னவை கொடிய வார்த்தைகள்.  அவை அவர்களைக்குறித்து மட்டுமல்ல.  என்னைக் குறித்தும் சொல்லப்பட்டவையே!  நீ மட்டும் இதை பீஷ்மனிடம் சொல்லி இருந்தாயானால் என்ன நடந்திருக்குமோ, தெரியாது.  ஆனால் நான் எவ்விதப் பாதுகாப்பும், உதவியும் இல்லாத வயதான பெண்மணியாகிவிட்டேன்.” தன் எண்ணங்களை முழுதும் வெளிக்காட்டாமல் அடக்கமாகவே பேசினாள் சத்யவதி.


“ஆனால், ஆனால், தாயே, அனைவருமே எனக்கு எதிராகச் சதி செய்து வருவதை நீங்கள் அறியவே மாட்டீர்கள்! “


“மீண்டும் நீ சொல்வது சரியல்ல, மகனே!  நீ உண்மை பேசவில்லை.  நீ ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனம் குறித்தும், ஆட்சியைக் குறித்தும் பேசுகிறாய்.  உன் மனதில் அது உனக்கு மட்டுமே சொந்தம் என்னும் எண்ணம் இருக்கிறது.  சரி,போகட்டும், இதைக் கேள்.  இன்று வரை யாருக்கும் சொல்லாத ஒரு விஷயத்தை உனக்கு நான் சொல்லப் போகிறேன். உங்களில் எவருக்கும் இவ்விஷயம் தெரியாது.  பீஷ்மன், என் மகன் கிருஷ்ண த்வைபாயனன் ஆகிய இருவரும் மட்டுமே என்னைத் தவிர இவ்விஷயம் அறிந்தவர்கள் ஆவார்கள்.  கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக இந்த சாம்ராஜ்யம் எப்படி வளர்ந்தது? எப்படிக் கட்டி ஆளப்பட்டது?  இதன் பூர்வ சரித்திரம் என்ன என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா?  இதை எப்படி இவ்வளவு பலமும், வலிமையும் வாய்ந்த சாம்ராஜ்யமாக ஆக்கினார்கள் என்பதை நீ அறிவாயா?”


துரியோதனன் ஆர்வத்துடனும், அச்சத்துடனும் சத்யவதியைப் பார்ர்த்தான். அவன் மனம் முழுதும் எரிச்சலும், கோபமும் மண்டிக்கிடந்தாலும், அந்நிலையிலும் அவனுக்கு சத்யவதி இன்று வரையிலும் எவரும் அறியா ஓர் ரகசியமான செய்தியைப் பகிர்ந்து கொள்ளப் போகிறாள் என்பது புரிந்தது.  அது மிக முக்கியமான ஒன்று என்பதும், அது தான் தன் வாழ்க்கையையும், பாண்டவர்களின் வாழ்க்கையையும் நிர்ணயம் செய்யப் போகிறது என்பதும் புரிந்தது.  அவன் உடல் தன்னையறியாமல் நடுங்கியது. அவனையே அன்புடன் பார்த்தாள் சத்யவதி.  அவள் கண்கள் ஏதோ திரை போட்டாற்போல் மங்கிக் காணப்பட்டது.  கனவுலகிருந்து பேசுவது போல் அவள் பேச ஆரம்பித்தாள்.


1 comment:

ஸ்ரீராம். said...

என்ன ரகசியமோ...