Monday, July 14, 2014

அர்ஜுனன் சிக்கிய அன்பு வலை!

இப்போது நாம் பாண்டவர்கள் அங்கே வந்ததைக்குறித்துப் பார்ப்போம்.  ஐவரும் நீண்ட நெடும் பயணம் மேற்கொண்டு காம்பில்யம் வந்தடைந்தனர்.  அங்கே ஒரு குயவன் வீட்டில் அவர்களுக்குத் தங்க இடம் கிடைத்தது.  அங்கே தங்கிக் கொண்டனர். துறவிகளைப் போல் உடை அணிந்திருந்த ஐவரும் சுயம்வர மண்டபத்துக்குக்கிளம்புகையில் அர்ஜுனன் மனதில் இனம் தெரியா மகிழ்ச்சி. தனக்கென ஒரு அருமையான எதிர்காலம் காத்து இருப்பதாக உள்ளூர நம்பினான். இன்றைய தினம் அவன் செய்யப்போகும் சாகசம் அதற்கு அஸ்திவாரம் அமைக்கப்போகிறது. துணிகர சாகசங்களும், மகிழ்ச்சி நிறைந்த அனுபவங்களுமே அவன் நீண்ட நாள் கனவாக இருந்தது.  இப்போது அந்தக் கனவுகள் நிறைவேறப் போவதை அவன் உணர்ந்து  கொண்டான்.  அவனுடைய முன்னோரான பரதன் செய்த சாகசங்களை விடப் புதுமையாகவும், துணிவாகவும் அவன் செய்யப் போகிறான்.  தேவதையைப் போன்ற அழகுடைய மணமகளை அவன் பொறுமைக்குப் பரிசாகவும், அவன் திறமைக்குப் பரிசாகவும் பெறப் போகிறான். அவன் வாழ்க்கையே கவிதை மயமாகவும், ஆடல், பாடல்களிலும் ஆனந்தமாகக் கழியப் போகிறது.

என்னதான் தன் நான்கு சகோதரர்களையும், தன் தாயையும் அவன் மிகவும் நேசித்தாலும் அவனுக்கென ஒரு தனி உலகம் அவனுள் இருந்து வந்தது. அவன் எண்ணங்கள் அவர்களோடு பகிரப்பட்டது.  வாழ்க்கையையும் பங்கு போட்டுக் கொண்டனர்.  ஆனாலும் தான் மட்டுமே தனியாக வாழ்வது போல ஒரு கனவுலகம் அவனுள் உருவாகி இருந்தது. ராக்ஷசவர்த்தத்தில் அவர்கள் கழித்த மாதங்களில் அவன் மிகவும் மனச்சோர்வு அடைந்திருந்தான்.  அதிலும் பீமனும் அந்த ராக்ஷசி ஹிடும்பியும் ஒருத்தர் மேல் ஒருத்தர் கொண்டிருந்த காதலை நினைக்கையில் எல்லாம் அவனுக்குள் சொல்லவொண்ணா கோபமும் எரிச்சலும் வரும்.  அர்ஜுனன் அழகை மிகவும் ரசிப்பவன்.  தான் இளமையாகவும் அழகாகவும் இருப்பதில் பெருமை கொண்டவன்.  அப்படிப்பட்டவனுக்கு இப்படி ஒரு மனைவியிடம் தன் அண்ணன் பாசமும், காதலும் கொண்டிருப்பதைக் கண்டால் அங்கேயே உள்ள ஒரு பெரிய மரத்தில் முட்டிக் கொண்டு கதறலாம் போல் இருந்தது.   இந்தத் துன்பியல் நாடகத்தை அதன் பின்னராவது தன் அண்ணன் நிறுத்துவானோ என்றெல்லாம் நினைத்துக் கொள்வான்.


ராக்ஷச வர்த்தத்தை விட்டு அவர்கள் கிளம்பியது அவனுக்குள் பெரிய ஆறுதலை ஏற்படுத்தியது. அவனுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளும் புத்துணர்ச்சி பெற்றன.  ஆற்றல் மிகுந்தாற்போல் ஓர் எண்ணம் அவனுள் ஏற்பட்டது.  அவனுடைய நீண்டநாள் ஆசைக்கு ஏற்ப வழியெங்கும் பலவிதமான அனுபவங்கள், சாகச நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.  அவன் ஆற்றலுக்கும் ஆர்வத்துக்கும் தீனி போட்டாற்போல் இருந்தன அவை. முக்கியமாக வழியில் ஒரு மோகங்கொண்ட கந்தர்வனின் விளையாட்டுக்களை அவன் வெல்ல வேண்டி இருந்தது.  பீமனுக்கோ கேட்கவே வேண்டாம். அவன் இருக்குமிடம் தேடிக் கொண்டு வீர, தீர சாகசங்கள் வந்து விடுகின்றன. அதிர்ஷ்டக்காரன்!  ஏகசக்ரத்தில் ஒரு ராக்ஷசன் தினம் ஒரு வீட்டில் ஒரு நபரை அனுப்பச் சொல்லிக்கொன்று தின்று கொண்டிருந்தான்.  அவனை முடித்துவிட்டான் பீமன்.  பின்னர் அவர்கள் அனைவரும் வியாசர் சொன்னபடி உத்கோசகத்தில் இருந்த தௌம்ய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.  அவர்களுடைய நீண்ட நெடும் பயணத்தில் இது ஓர் ஓய்வுக்கு உகந்த இடமாக அமைந்தது.  எனினும் காட்டில் முட்கள் நிறைந்த பாதையில் ஆங்காங்கே ஊரும் விஷ நாகங்கள், எப்போது பார்த்தாலும் ஊளையிடும் ஓநாய்கள், மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருக்கும் குரங்குகள், காட்டின் பழமரங்களின் வித விதமான பெயர் தெரியாத பழங்கள். அனைத்துமே கவர்ந்தன.

ஆனாலும் ஆசிரமத்தின் அமைதியோ, அங்கே மெல்லப் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த வேத மந்திர முழக்கங்களோ, பசுக்களைக் கறக்கும் சப்தமோ எதுவுமே அர்ஜுனன் மனதை அமைதிப்படுத்தவில்லை. அவனுக்குள் இனம் புரியாத தவிப்பு.  எப்போது அவன் அவர்களுக்கே உரித்தான அரண்மனைக்குச் செல்வான்? அங்கே நாட்டியத் தாரகைகள் நடனம் ஆட இசை வல்லுநர்கள் இன்னிசை பொழிய உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க முடியுமா? அவனுக்கென சொந்தமாக ஒரு சாஸ்த்ர சாலையை அவனால் ஏற்படுத்திக் கொள்ள இயலுமா?  அங்கே வித விதமான அம்புகள்  சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்க, அவன் வில்லின் நாணைச் சுண்டி விட, அது போடும் “ட்ர்ங்ங்ங்ங்” என்னும் சப்தமே காதுக்கு இனிமையாக இருக்குமே. அதை எல்லாம் எப்போது கேட்கப்போகிறான்?  தௌம்யரும் அவர்களுக்கு ஆசானாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டு, அவர்களைக் காம்பில்யத்துக்குச் செல்ல அநுமதி கொடுத்ததோடு ஆசிகளும் வழங்கினார்.  ஏதோ போர்க்களத்தில் போரிட்டு வெல்லப் போவதாக அவனுக்குத் தோன்றியது.  இதற்கு முன்னரும் பல அரசர்களும் இப்படியான சாகசங்களைத் தேடிச் சென்றிருக்கின்றனர்.  வெற்றியும் அடைந்திருக்கின்றனர்.  அனைவருக்கும் சொந்தமான ஆசாரியர்கள் இருந்து வழிகாட்டி ஆசிகளையும் தந்திருக்கின்றனர்.

என்றாலும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து அவன் அறிந்திருக்கவில்லை. அவனுக்குள் ஒரு திருப்தியும் ஏற்படவில்லை.  கொஞ்சம் அமைதியின்றியே காணப்பட்டான்.  காம்பில்யத்தில் என்ன நடக்கப் போகிறது?  அவர்களுக்குக் கிடைக்கப் போவது என்ன?  மேலும் உலகளவில் இப்போது அவர்கள் இறந்தவர்கள்.  கிருஷ்ணன் எப்போது, எந்த சந்தர்ப்பத்தில் அவர்களை உலகுக்குக் காட்டப் போகிறான்?  அவர்கள் இருப்பு எப்போது அனைவராலும் உணரப் படும்? எப்படி ஒரு விசித்திரமான நிலைமை அவர்கள் ஐவருக்கும்!  உயிருடன் இருக்கின்றனர்!  ஆனால் செத்துவிட்டனர்.  வேறு எவராவது அவர்களுக்கு சமிக்ஞை செய்தால் தான் அவர்கள் உயிருடன் இருப்பதாகக் காட்டிக் கொள்ள முடியும்.  புத்துயிர் பெற முடியும்.  கிருஷ்ண வாசுதேவனை அர்ஜுனன் மிகவும் மதிக்கிறான்;  அன்பும் செலுத்தி வருகிறான். ஆனால் இம்மாதிரி மறைந்திருந்து ஒருவர் வெளியே வரலாம் என சமிக்ஞை கொடுத்ததும் வெளியே தலைகாட்டுவதைப் போன்றதொரு அவமானகரமான நிகழ்வு வேறில்லை.  கிருஷ்ணன் பொருட்டல்லவோ இவை எல்லாம் சகிக்க வேண்டி உள்ளது!

அது மட்டுமா?  காம்பில்யத்தில் அவர்கள் தங்கி இருந்த குயவனின் குடிசை துர்நாற்றமடித்துக்கொண்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது. எல்லாவற்றையும் விட மோசம் என்னவெனில்!  ஒரு ஒழுங்கில்லாமல் அங்குமிங்குமாய் ஆனால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட குடிசைகள், ஒரு குவியலாகக் காட்சி அளித்தன.  சுத்தமான ஆடை அணியாத சின்னஞ்சிறு குழந்தைகள்,  எந்த நேரமும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் கழுதைகள், ஓயாது சுற்றிக் கொண்டிருந்த குயவர்களின் சக்கரங்கள், எங்கு பார்த்தாலும் மூத்திரநாற்றம், உவர்ப்பு மண்ணின் நாற்றம் என்று போதும் போதுமென்றாகி விட்டது.  அவனுக்கு ஒரு பிராமணனைப் போல் வேஷம் மாற்றிக் கொண்டு சுயம்வரத்தில் கலந்து கொள்வதிலும் விருப்பமே இல்லை.  அவன் விருப்பத்திற்கு விட்டிருந்தால் ஒரு யானையின் மேல் சவாரி செய்து கொண்டு வந்து கலந்து  கொண்டிருப்பான்.  ஆனால் பெரியண்ணா யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதிக்கவில்லை.  அவர் பிராமணர் வேஷத்தில் தான் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  கிருஷ்ணன் தோன்றி அவர்கள் உலகுக்குத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்று சமிக்ஞை செய்ய வேண்டும். அது வரை பொறுத்துத் தான் ஆகவேண்டும். அதைத் தான் நம்முடைய குருவான வியாசமுனியும் சொல்லி இருக்கிறார்.  நாம் அதைத் தான் பின்பற்றியாக வேண்டும். யுதிஷ்டிரன் உறுதியாகத் தெரிவித்து விட்டான்.

இம்மாதிரியானதொரு நிலைமையைத் தன் சகோதரர்கள் எதிர்கொண்ட விதம் அர்ஜுனனுக்கு வெறுப்பையும், கோபத்தையும் அளித்தது.  யுதிஷ்டிரனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  எப்போதுமே பொறுமையாக இருப்பவன். எப்படிப்பட்ட கீழ்த்தரமான நிலையிலும் அதற்காகக் கவலைப்படாதவன். அதை அவமானமாகவே நினைக்க மாட்டான்.  எவ்வளவு மோசமான நிலையையும் சந்தோஷத்துடன் வரவேற்று ஏற்றுக் கொள்வான்.  இப்படி ஏற்படும் ஒவ்வொரு சோதனையான நிகழ்விலும் தாங்கள் ஐவரும் புடம் போடப்படுவதாகவும், பக்குவப்படுத்தப்படுவதாகவும் இதுவே தங்கள் ஆன்மாவை சுத்தப்படுத்த ஏற்பட்டதாகவும் நினைத்துக் கொள்வான். இதன் மூலம் பரிசுத்தம் அடைவதாகவும் சொல்வான். பீமனுக்கோ எனில் மனநிலை எப்போதுமே அலைபாய்ந்தது இல்லை.  எப்போதுமே எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்வதோடு அவற்றைக் குறித்து நகைச்சுவையாக ஒரு கருத்தைச் சொல்லி அனைவரையும் சிரிக்க வைப்பான். எப்படிப்பட்ட இழிந்த நிலையிலும்  என்ன நடந்தாலும் அவன் மகிழ்ச்சியை மட்டுமே வெளிப்படுத்துவான்.  நகுலனுக்குக் கொஞ்சம் அதிருப்தி இருந்தாலும் அவனுக்கு அவற்றை வெளிப்படுத்தும் வழக்கம் இல்லை.  சஹாதேவனோ தன் எண்ணங்களில் தானே ஆழ்ந்து போனவனாகக் காணப்படுவதோடு கேட்கப் படும் கேள்விக்கு ஒற்றை வார்த்தையிலேயே பதிலைக் கொடுப்பான். பொதுவாக அவன் மௌனமாகவே இருப்பான்.  தன் தாய் மற்றும் சகோதரர்களிடம் இப்படி ஒரு அன்பு வலையில் தான் சிக்கிக் கொண்டிருப்பதை நினைக்கையில் பல சமயங்களில் அர்ஜுனனுக்குக் கோபமும், எரிச்சலும் வரும்.  ஆனால் அதை உடைக்கவேண்டும் என அவன் நினைத்தாலும் அதை அவனால் செய்யமுடியவில்லை.   அவனால் எப்படி முடியும்?


2 comments:

ஸ்ரீராம். said...

//ஒரு மோகங்கொண்ட கந்தர்வனின் விளையாட்டுக்களை அவன் வெல்ல வேண்டி இருந்தது//

இது திரௌபதியுடன் திருமணத்துக்குப்பின் அஞ்ஞாத வாசத்தில் இலையோ? அது வேறா?

ஒவ்வொருவர் மனநிலையையும், தனிக் குணங்களையும் பட்டியலிட்டிருப்பதும், குயவர் வெட்டு சூழல் வர்ணனையும் நன்றாக இருந்தன.

திண்டுக்கல் தனபாலன் said...

சகிப்புத்தன்மை மட்டும் இல்லையெனில்... தொடர்கிறேன்...