Wednesday, June 4, 2014

கோவிந்தன் என்னும் புதிர்!

“திரௌபதி, எப்படி அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்கிறாய்?  நீ முழுவதும் மாறி விட்டாய் எனத் தெரிகிறது.”

“கவலை வேண்டாம் தந்தையே!   கண்ணன் எனக்குச் சரியான வழியைக் காட்டி இருக்கிறான்.  தர்மத்தின் பாதையை.  அதுவும் நான் கடைப்பிடிக்க வேண்டிய தர்மத்தின் பாதையைக் காட்டி உள்ளான்.  இப்போது, இந்த நிமிடத்திலிருந்து நான் செய்ய வேண்டியது எல்லாம், எவ்விதக் கவலையும் இன்றி என் இஷ்டத்துக்குப் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் சுயம்வரத்தில் பங்கெடுக்க வேண்டியது ஒன்றே.   தந்தையே, நான் அதைத் தான் செய்யப் போகிறேன்.”  திரௌபதியின் வாக்கு வன்மை துருபதனைத் திகைப்பில் ஆழ்த்தியது.

“முடியவில்லை, என்னால் உன்னுடைய மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை, கிருஷ்ணா!” என்றான் துருபதன்.

“எனக்கும் தான் தந்தையே!’ என்றால் திரௌபதி பணிவாக.

“சரி, சரி, போகட்டும்.  வாசுதேவக் கிருஷ்ணனிடம் உனக்கு நம்பிக்கை இருந்தால் சரி.  நான் அதை அத்தோடு விட்டு விடுகிறேன்.   எனக்குச் சொல்ல வேறொன்றும் இல்லை.  ஆனால் துரோணரின் கர்வத்தை எவ்வாறுச் சுக்கு நூறாக்கப் போகிறான், இந்த வாசுதேவன்?  அதற்கு என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறான்?”

“தந்தையே, அதைக் குறித்தும் மற்ற விஷயங்களைக் குறித்தும் எந்தக் கேள்வியும் கேட்கவேண்டாமென அவன் என்னிடம் கெஞ்சினான்.  நானும் விட்டுவிட்டேன்.”

“ஓஹோ, அப்போது அவன் சொன்னதிலேயே நீ திருப்தி அடைந்து விட்டாயா?”

“ஆம், தந்தையே, எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டேன்.  தந்தையே, அவன் அனைவர் மனங்களிலும் மாபெரும் உயர்ந்த இடத்தைப் பெறுவான் என்பதோடு அனைவரின் ஆசைகள், அபிலாஷைகளையும் பூர்த்தியும் செய்வான்.  அதற்கெனவே அவன் பிறந்திருக்கிறான்.  இதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.   தந்தையே, அதுமட்டுமல்ல,  அவன் என்னுள் புகுந்து விட்டான்.  அதில் தான் நான் மிகவும் மாறி விட்டேன்.  என்னுள் அவனைக்கண்டேன்; அதே சமயம் அவனுள் என்னையும் கண்டேன்.  இவ்வுலகையே கண்டேன், தந்தையே!  நீங்கள், நாம் அனைவரும், இந்தப் பாஞ்சாலம் மட்டுமின்றி பூவுலகு முழுவதையும் அவனில் கண்டேன்.  பூவுலகில் அவனைக் கண்டேன். அது ஓர் அற்புத அனுபவம் தந்தையே!”  இதைச் சொல்கையில் திரௌபதியின் முகமும் மிக மென்மையாக ஆனதோடு அவள் குரலிலும் இனம் புரியாத இனிமை தொனித்தது.

தன் மகளைப் புத்தம்புதியவளாக அப்போது தான் புரிந்து கொண்டவனாகப் பார்த்தான் துருபதன்.  அவனுக்குள் அவள் சொன்னவற்றின் தாத்பரியம் புரிந்தாலும் மனதில் பரிதாபமே எஞ்சியது.  தன்னால் எவ்வித உதவியும் செய்யமுடியவில்லையே என்னும் பரிதாப உணர்வோடு அவன் மேலே பேசினான்; “குழந்தாய், என் மற்ற மூன்று குழந்தைகளை விடவும் நீ எனக்கு மிகவும் அருமையானவள்.  உன்னிடம் நான் பெரிய சுகத்தையே கண்டேன்.  என்னுடைய அவமானங்களை நீ சரியாகப் புரிந்து கொண்டாய்; நான் பழிவாங்கத் துடிப்பதையும் சரியான கோணத்தில் தெரிந்து கொண்டாய்.  துரோணரை நான் ஏன் வெறுக்கிறேன் என்பதை உன்னைவிட வேறெவரும் சரியாகப் புரிந்து கொண்டதில்லை.  ஆனால் இப்போது……. இப்போது, மகளே, நான் செல்லப் போகும் பாதை எதுவென எனக்குப் புரியவில்லை.  என் வழியை என்னால் சரியாகக் காண முடியவில்லை.  நீ மிகப் புத்திசாலியான தைரியமான பெண்.  இந்த சுயம்வரத்தை நான் உன் கைகளில் விட்டு விடுகிறேன்.    ஆனால் பெண்ணே, இது மட்டும் தவறாகப் போய்விட்டால், அந்த அவமானத்தை என்னால் தாங்க இயலாது.  எனக்கு அதைவிட மிகப் பெரிய அவமானம் வேறெதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொள்.  புரிந்து கொள்வாய் அல்லவா?”

தன் மனத்தில் உள்ள பாசத்தை எல்லாம் கண்கள் வழியாகத் தந்தையைப் பார்த்த பார்வையில் காட்டினாள் திரௌபதி.  பாசத்துடன் தந்தையைப் பார்த்தவள், “ தந்தையே, உங்களை துக்கத்தில் ஆழ்த்திவிட்டு நான் மட்டும் மகிழ்ச்சியோடு இருப்பேனா?  என்னை அவ்வாறு பார்த்திருக்கிறீர்களா? நான் எப்போதுமே உங்கள் சேவையில், உங்களுக்கு மகிழ்வை மட்டும் உண்டாக்கும் சேவையில் இருந்து கொண்டு உங்களை தீர்க்கமாகக் கவனித்தும் வருகிறேன்.  அதை அறிவீர்கள் அல்லவா?”

“என் கண்மணி, ஆமாம், ஆமாம், நீ அப்படித் தான் இருந்து வருகிறாய்,  சந்தேகமில்லை!” என்றவாறே தன் மகளின் உச்சந்தலையைத் தடவிக் கொடுத்தான் துருபதன்.

“எனில் தந்தையே, கோவிந்தனை நான் நம்புகிறேன்.  நீங்களும் என்னோடு சேர்ந்து கொண்டு அவனை நம்புங்கள். “

“ஓஹோ, அந்த மஹாதேவன் எனக்கு வேறு வேலை என்ன வைத்திருக்கப்போகிறான்!  இங்கே இந்த மந்திரவாதி தன் மந்திர, தந்திர வேலைகளை ஆரம்பித்துவிட்டான். “கஷ்டப்பட்டுப் புன்னகையை வரவழைத்துக் கொண்ட துருபதன் மேலும், “ அவன் மந்திர, தந்திரங்களுக்கு நாம் அடிமை.  அவற்றிற்கு நாம் பலியாட்களும் கூட.  ம்ம்ம்ம்ம்ம்ம் இனி என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க நீ விரும்பினாயானால், உன்னோடு சேர்ந்து அதற்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியும் எனக்கு இல்லை.”

“தந்தையே, வாசுதேவன் உங்களிடம் ஒரு விண்ணப்பம் செய்திருக்கிறான்.” என்றாள் திரௌபதி.  மெல்ல மெல்லத் தன் தகப்பன்  சகஜ நிலைக்குத் திரும்ப முயற்சிப்பதையும் உணர்ந்தாள்.  “என்ன?  என்ன விண்ணப்பம்?” துருபதனுக்குள் ஆவல் அதிகரித்தது.  விபரீதமாக எதுவும் இருக்கக் கூடாதே என்னும் எண்ணமும் வந்தது. சந்தேகம் அதிகரித்தது.  “உன் மூலமாக என்னிடமிருந்து எதைப் பிடுங்க எத்தனிக்கிறான்?”

“அதெல்லாம் எதுவும் இல்லை தந்தையே!  துரியோதனனின் தாய் மாமன் ஷகுனியையும், அவன் நண்பனும், துரோணரின் ஒரே மகனும் ஆன அஸ்வத்தாமாவையும் நாம் இருவரும் சந்திக்க வேண்டுமாம்.”

“என்ன துரோணைன் மகனை நான் சந்திக்க வேண்டுமா?  என்ன தைரியம்?” துருபதனுக்கு மீண்டும் ஆத்திரம் அதிகரித்தது.  “என்ன அவனிடம் நான் ஏதேனும் வாக்குறுதி கொடுக்க வேண்டுமோ?” ஆத்திரத்துடன் கேட்டான் துருபதன்.

“”இல்லை தந்தையே, அதற்கு பதிலாக அவன் நமக்கு வாக்குறுதி கொடுப்பான்.  நாம் அதை ஏற்க வேண்டும்.  ஒரு வேளை விதி வசத்தால் நான் குரு வம்சத்து இளவலைக் கல்யாணம் செய்து கொள்ள நேரிட்டால், அப்போது அஸ்வத்தாமா, தன் உயிரைக் கொடுத்தாவது தன் தகப்பனார் துரோணர் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லாமல் தடுப்பான்.”

“என்ன இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது?  முட்டாள் தனம்!  இதை விட மோசமான வாக்குறுதியை நான் கேட்டதுமில்லை; கண்டதுமில்லை.  ஒரு சமயம் உனக்கு வாக்குறுதி கொடுக்கிறான்.  அதுவும் எப்படி?  துரியோதனனை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் நேரிடாது என வாக்குக் கொடுக்கிறான்.  அது முடிவதற்குள்ளாக உன்னை குருவம்சத்து இளவரசன் மணமுடித்தால் எனச்  சொல்கிறான்.  இப்படிஒரு முட்டாள் தனத்தை நான் எங்கும் கண்டதில்லை.  இதை விட அபத்தமான வாக்குறுதியை எவரும் கொடுத்தது இல்லை!”

“எனக்கும் இதில் ஏதும் பொருள் இருப்பதாகப் படவில்லை தந்தையே!  எனக்கும் இது நகைப்புக்கு இடமாகத் தான் தெரிந்தது.  அஸ்வத்தாமா இப்படி ஒரு வாக்குறுதியை அளிக்க வேண்டும் என கோவிந்தன் நினைக்கிறான்.  அவன் ஏன் அப்படி நினைக்கிறான் என்பது எனக்குப் புரியத்தான் இல்லை.  ஆனால் தந்தையே, அவன் சொன்னபடியே நாம் செய்துவிடுவோம்.  இவற்றிற்குப் பின்னர் ஏதோ மர்மம் புதைந்திருக்கிறது.  நம்மால் ஆழமாக யோசித்து அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.” திரௌபதி சொல்ல துருபதன் கூறினான்: “கோவிந்தா!  திரௌபதி உன் கோவிந்தன் ஒரு புதிர்!  எவராலும் புரிந்து கொள்ள முடியாப் புதிர்!” என்று கூறினான்.  கிருஷ்ணனை திரௌபதி கோவிந்தன் என அழைத்ததைத் தான் கண்டு கொண்டதன் விதமாக அந்தப் பெயரைக் கூறுகையில் சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னான் துருபதன்.



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முந்தைய பதிவை தொடர்ந்து விட்டு வந்தேன்...

ஸ்ரீராம். said...

கோ விந்தன் தான் அவன்!