Saturday, April 19, 2014

கர்ணனின் விசுவாசம்!

“அதோடு ஒரு பிராமணன் க்ஷத்திரியப் பெண்ணையோ, இளவரசியையோ மணப்பது இது ஒன்றும் முதல்முறை அல்லவே!  பலமுறை நடந்திருக்கின்றன.  ஆனால் இங்கே வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், திரெளபதி என்னைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புக் குறைவே என்று தோன்றுகிறது.” இப்படிச் சொன்னபோதிலும் அஸ்வத்தாமாவுக்குள் தன்னைக் குறித்தும், தன் திறமைகள் குறித்தும் இறுமாப்பு நிறைய இருக்கிறது என்பதைக் கர்ணன் அவன் தன்னைப் பார்த்த பார்வையிலிருந்து புரிந்து கொண்டான்.  மேலும் அஸ்வத்தாமா, “இப்போது துரியோதனன் விரும்புவது எல்லாம் அவன் திரெளபதியை மணக்கும் வண்ணம் அவனுக்குள்ள இடைஞ்சல்களை எல்லாம் நான் நீக்கி வழியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்;  திரெளபதியை நான் மணக்காமல் இருந்தால் மட்டும் அவனுக்குப் போதாது.  அவனுக்காக அவளைப் பாதுகாக்கவும் வேண்டும்.  அவனுக்கு அவளை மணமகளாக்க வேண்டும். ஹூம், பார்த்தாயா கர்ணா!  நான் இத்தனை வருடங்களாக அவனோடு பழகி அவனுக்குச் செய்திருக்கும் எண்ணிலடங்காச் செயல்களுக்கு அவன் என்னிடம் காட்டும் நன்றிக்கடன் இது தான்!” என்றான் வெறுப்போடு.

“அஸ்வத்தாமா, அஸ்வத்தாமா!  பொறுமை, பொறுமை!” என அவனை சமாதானம் செய்தான் கர்ணன்.  மேலும், “நீ துரியோதனனிடம் கோபம் கொள்வது அர்த்தமற்றது;  அவனிடம் கோபம் கொள்ளாதே!  அவன் எப்பாடு பட்டாலும் திரெளபதியை மணந்தே ஆக வேண்டும் எனத் தன்னை அதற்கேற்பத் தயார் செய்து கொண்டிருக்கிறான்.  அதோடு அவன் ஏற்கெனவே தனக்கு உரிமையாகக் கிடைக்கவேண்டியவை எல்லாம் கிடைக்காமல் போயிற்று என மனம் வெதும்பியும் இருக்கிறான்.  இந்தத் திருமணம் அரசியல் ரீதியாக அவனுக்கு ஒரு பாதுகாப்பை மட்டும் தராது;  அவன் நிலைமையை மேலும் மேம்படுத்தும்.  அவன் வேண்டியது அவனுக்கு உடனே கிடைத்தாலும் கிடைத்துவிடும்;  அதுவும் அவன் தந்தை உயிருடன் இருக்கையிலேயே அவன் அடைய முடியும் அல்லவா?  அதை நினைத்துப்பார்.  நாம் இருவருமே அவனுக்கு உற்ற நண்பர்கள்.  நாம் இருவருமே அவனுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.  அவன் தன் லக்ஷியத்தை எட்டும் தருவாயில் இருக்கிறான்.  இப்போது அவனிடம் சண்டை போட்டு அவனுடைய லக்ஷியத்தை அவன் அடையமுடியாமல் செய்யலாமா?  அவன் ஆசைகளை நசுக்கலாமா?  கொஞ்சம் யோசித்துப் பார்! “ என்றான் கர்ணன்.

“ஹா, உனக்கென்ன!  நீ சொல்வாய்!  அவன் நமக்கு எவ்வளவோ செய்திருக்கிறான் என்பது உண்மைதான்.  ஆனால் பதிலுக்கு நாமும், குறிப்பாக நான் அவனுக்குத் திருப்பி நிறையவே செய்திருக்கிறேன்.  அதை மறவாதே! அது சரி, நீ என்ன திரெளபதியை அடையப் போட்டி போடப் போவதில்லையா?  உனக்கு அந்த எண்ணம் ஏதும் இல்லையா?” கர்ணனிடம் கோபமாகப் பேசினாலும் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான் அஸ்வத்தாமா.

“இத்தனை பெரிய ராஜாக்கள், மஹாராஜாக்கள், சக்கரவர்த்திகள் நிறைந்த சபையிலே என்னை யார் கவனிக்கப் போகின்றனர்?    நான் எதிலும் சேராதவன்!” கர்ணன் தன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டே பேசினான்.  “ஆஹா, அப்படிச் சொல்லாதே கர்ணா!  நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாயோ, அத்தனைக்கு இளமையோடும், கம்பீரத்தோடும், எந்தப் பெண்ணையும் கவர்ந்திழுக்கும்படியாகத் தான் இருக்கிறாய்.  அதோடு நீயும் மிகச் சிறந்த வில் வித்தை வீரன் அல்லவா?   உன் வீரத்தில் தான் என்ன குறை ? திரெளபதி மட்டும் கண்ணுக்கு அழகானவனாகவும், அதே சமயம் வீரம் மிக்கவனாகவும் ஒருவனைத் தேர்ந்தெடுக்க எண்ணினாள் எனில் உன்னைவிடச் சிறந்த இளைஞன் எவரும் இங்கே இல்லை.  நிச்சயமாக இதில் எந்த ராஜா, மஹாராஜாக்களும் உன்னுடன் போட்டியிட முடியாது. “ உண்மையான மனப்பாங்குடன் அஸ்வத்தாமா தன்னைக் குறித்துச் சொன்னது கர்ணன் மனதில் பதிந்ததோடு அல்லாமல்  அவன் கண்களில் நீரையும் வரவழைத்தது.

“ஆனால் நான் துரியோதனனோடு போட்டி போட விரும்பவில்லை, அஸ்வத்தாமா!   அதிலும் நான் எத்தகைய ஒரு நிலைமையில் இருந்தேன் என்பதை நீயும் அறிவாய்!  அப்படிப்பட்ட ஒரு தெளிவற்ற நிலைமையில் இருந்து என்னை மீட்டு, அங்க தேசத்துக்கு அரசனாக்கி, என்னையும் ஒரு அரசனாக ஆக்கிப் பார்த்தது யார்!  துரியோதனன் அல்லவோ!  என் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நான் விசுவாசமாகவே இருப்பேன்.  அப்படியும் என் நன்றிக்கடன் தீராது.  இதனால் என்ன நேர்ந்தாலும் சரி!  நான் இப்போது சொல்வது அனைத்தும் சத்தியமான வார்த்தைகள்!  இந்த என் வாக்குறுதியை நான் எப்பாடுபட்டாயினும் காப்பாற்றுவேன்.  இப்போதே பார் அஸ்வத்தாமா, உன்னிடத்தில் நான் இருந்து இப்படி ஒரு கோரிக்கையை துரியோதனன் கேட்டிருந்தால் கட்டாயமாய் அதை உடனடியாக நிறைவேற்றி  இருப்பேன். அதோடு நீ ஒரு விஷயத்தை மறந்து விட்டாய் அஸ்வத்தாமா!  குரு வம்சத்து யுவராஜாவை விட்டுவிட்டு நம்மைத் தேர்ந்தெடுப்பார்கள் என நீ நினைக்கிறாயா?  இந்தத் திருமணத்தின் மூலம் குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டுக்கும் நன்மை விளையுமெனில் நாம் ஏன் அதற்குக் குறுக்கே நிற்க வேண்டும்?”

“அதெல்லாம் சரி கர்ணா!  ஆனால் சுயம்வரத்தில் வில் வித்தையில் போட்டி இருந்தால்,  உன்னைத் தவிர வேறு எவர் அதில் வெல்வார்கள்?”

“ஆம், என்னால் முடியும் தான்! ஆனால் அதை விட முக்கியமான ஒன்று எனக்கு நன்கு தெரியும்.  அது என்னவெனில் நான் ஒரு தேரோட்டியின் மகன். அரச குலத்தவர் பங்கேற்கும் ஒரு நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது.  அப்படி நான் இந்த சுயம்வரத்தில் வில் வித்தைப் போட்டியில் பங்கேற்றேன் எனில் அதுவும் துரியோதனனுக்காகத் தான் இருக்கும்.  மூவுலகிலும் சிறந்த தேர்ந்த ஒரு வில் வித்தை வீரன் தன்னுடைய கட்டளைக்கு அடங்கியவன் என்பதை அவன்  இங்கே வந்திருக்கும் ஆர்யகுல அரசர்களுக்குத் தெரிவிக்கலாம் இல்லையா!”

“கர்ணா, கர்ணா, உன் பலவீனமே இது தான்.  நீ எப்போதும் ஒரு தேரோட்டியின் மகன் என்பதை மறப்பதே இல்லை.  நீ தேரோட்டியால் வளர்க்கப்பட்டவன்! இதற்கு மேல் உன் ஆசைகளையும் அபிலாஷைகளையும் மேம்படுத்திக் கொண்டு உயர வரப் பார்ப்பாய்!  உனக்கு இதைவிட அதிகமாக நினைக்கவே தோன்றவில்லையா?  இது தான் உன்னிடம் மிகப் பெரிய தொந்திரவு!”

“அஸ்வத்தாமா, தேரோட்டியின் மகன் தானே நான்!  அது தானே உண்மை!  உண்மையை மறைக்கவோ, மறக்கவோ இயலுமா?  எனக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும்.  விலைமதிக்க முடியா இந்த நட்புக்கு நான் எப்படி நன்றி செலுத்தவேண்டும் என்பதை அறிவேன்.   என்னிடம் என்ன இருந்தது?? இப்போது இருப்பவை அனைத்தும் துரியோதனன் கொடுத்தது தானே!   இதை மறந்தேன் எனில் நான் நன்றி கெட்டவன் ஆகிவிடுவேன்.  அஸ்வத்தாமா, உனக்கும் தான் சொல்கிறேன்.  உனக்கும் துரியோதனன் நிறையவே செய்திருக்கிறான்.  அதை நீயும் மறவாதே!  அவனிடம் நன்றியில்லாமல் பேசாதே!”

கர்ணனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அஸ்வத்தாமா!  அவன் முகம் எல்லாம் வியர்த்தது.  தனக்குள்ளே ஏதோ யோசிப்பவன் போல் நின்றிருந்தவன் தன்னை உலுக்கி விட்டுக் கொண்டு சொன்னான்: “உண்மைதான் கர்ணா!  நீ சொல்வது சரியே!  துரியோதனன் கேட்கும் வாக்குறுதியை நான் திரெளபதிக்கு அளித்தே ஆகவேண்டும்.  இல்லை எனில் செய்ந்நன்றி மறந்தவன் ஆவேன்.” என்றான்.

“போ, போய் உன் வாக்குறுதியை அவனுக்கு அளித்து அவனை சந்தோஷம் அடையச் செய்!  செய்வாய் என நம்புகிறேன். “ மிக மிக இனிமையாகப் பேசினான் கர்ணன்.  “சரி, சரி, அது தான் நீ கேட்பது எனில் அதை நான் செய்கிறேன்;  செய்துவிடுகிறேன்.  இப்போது உனக்குத் திருப்தியா?  ஆனால் ஒன்று!  இதுதான் நான் துரியோதனன் சொல்வதைக் கேட்பது கடைசிமுறையாக இருக்கும். இனி நான் அவன் சொல்வதைக் கேட்க மாட்டேன்.” என்று திட்டவட்டமாக அறிவித்தான் அஸ்வத்தாமா.

“நண்பா, என் அருமை நண்பா, அஸ்வத்தாமா!  நாம் துரியோதனன் பக்கமே எப்போதும் நிற்க வேண்டும்.  அவனுக்கு உதவியாக.  எத்தனை முறைகள் என்பதை எல்லாம் இப்போதே சொல்ல இயலாது.  அவன் ஒவ்வொரு முறையும் எப்படியோ இக்கட்டுகளில் மாட்டிக் கொள்கிறான்.  அவனிடமிருந்தே அவனை நாம் காப்பாற்றியாக வேண்டும்.”  என்றான் கர்ணன்.
********************************************************************************
நாக நாட்டு இளவரசன் ஆன மணிமான் உத்தவனோடு காம்பில்யம் வந்ததும் தனக்குக் கிடைத்த வரவேற்புகளைப் பார்த்துவிட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான்.  அவன் இப்போது முன்னைப் போல் உல்லாசியாக இல்லை.  தன் மைத்துனன் ஆன உத்தவனால் ஒரு நல்ல வீரனாக, ஆயுதப் பயிற்சிகளில் தேர்ந்தவனாக ஆகிவிட்டிருந்தான்.   உத்தவனும் அவனை மிகச் சிறந்த வீரனாக ஆக்குவதாக உறுதி கொடுத்திருந்தான்.  புஷ்கரத்தில் நடந்த கோலாகலங்களிலும் கலந்து கொண்ட மணிமான், கிருஷ்ணன், பலராமன் ஆகியோரின் உபசரணைகளிலும் அன்பிலும் திக்குமுக்காடித் திணறினான்.   அவன் மரீஷாவின்  அண்ணன் பேரன் என்பதில் யாதவர்களும் அவனிடம் மிகவும் அன்பாகவும் பக்ஷமாகவும் இருந்தனர்.  அனைத்து அதிரதர்களுடனும் பழகிப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டான்.

தன் நாக இனத்துப் படைகள் இந்த ஆர்ய வர்த்தத்தின் மாபெரும் அரசர்களோடும், அவர்களின் வீரர்களோடும் இணைந்து ஒன்றாக இருப்பதில் அவன் உள்ளூர மகிழ்ச்சி அடைந்தான்.  அவனுக்கு திரெளபதியின் சுயம்வரத்தில் ஆர்வம் ஏதும் இல்லை;  அவள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும்.  அவனுக்கு ஆக்ஷேபணை இல்லை.  அவனுக்கு அவனுடைய நாக நாட்டுப் பெண்களே போதும்.  இந்த மாபெரும் ஆர்யவர்த்தத்தின் மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசியெல்லாம் தேவையே இல்லை.  இருவருக்கும் எவ்வகையிலும் ஒத்துப் போகாது என்பதையும் அவன் நன்கறிவான். ஆரிய அரசர்களோடு கலந்து பழகுவதில் அவனுக்குக் கிடைத்த சந்தோஷம் அளவிட முடியாதது.  அவன் மக்களுக்கு ஆரியர்களின் ஊடுருவல் இனி இருக்காது;  அவர்கள் நம் நண்பர்கள் என்னும் ஒரு பாதுகாப்பு உணர்வை அவனால் கொடுக்க முடியும்.  இதுவே அவனுக்கு மிக மகிழ்ச்சியை அளித்தது.  அப்போது சிகுரி நாகா அவனுடைய படைகளின் தலைமைத் தளபதி அங்கே வந்தான்.  அவனிடம், “ஐந்து சகோதரர்களையும் குறித்து ஏதேனும் தெரிந்ததா?” என மணிமான் கேட்டான்.  எல்லாக் கூடாரங்களையும் தான் நன்கு அலசிப் பார்த்துவிட்டதாக சிகுரி நாகன் தெரிவித்தான்.   “எங்கேயும் இல்லை என்றா சொல்கிறாய்?  இது என்ன?  கிருஷ்ணனுக்கு நான் என்ன பதிலைக் கொடுப்பேன்?  சரி, நீயும் வா, அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வருவோம். “ என்று மணிமான் சிகுரி நாகனையும் அழைத்துக் கொண்டு கிருஷ்ணனைப் பார்க்கக் கிளம்பினான்.

 

1 comment:

ஸ்ரீராம். said...

உண்மையான நண்பர்களிடையே நடக்கும் உரையாடல் அழகாக அமைந்திருக்கிறது. கர்ணன் என்ன அழகாக அஸ்வத்தாமனுக்கு நிலைமையை விளக்கிப் புரிய வைக்கிறான்!

மணிமானை மறந்தே விட்டேனே!