Monday, April 14, 2014

அஸ்வத்தாமாவும் போட்டியிடுகிறான்!

சுயம்வரத்தையே ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதாக ஜராசந்தன் கூறினான். என்றாலும் அவன் மனதுக்குள்ளாக இது நடக்கும் காரியமா என்ற சந்தேகமே இருந்தது.  இவ்வாறு நடந்தால் என்ன ஆகும் என்பதையும் நினைத்துப் பார்த்தான்.  இங்கே குரு வம்சத்து இளவல்கள் வந்திருக்கின்றனர். அவர்களோடு ஒரு சிறிய ஆனால் வலுவான படை வந்துள்ளது.  யாதவர்களிலும் வல்லமை படைத்த யாதவர்களாகப் பொறுக்கி எடுத்துக் கிருஷ்ணன் அழைத்து வந்திருக்கிறான்.  பாஞ்சால வீரர்களைக் குறித்தோ எதுவுமே சொல்ல வேண்டியதில்லை.  இது அவர்கள் நாடு என்பதோடு ஏற்கெனவே அவர்கள் வலிமை பெற்றே விளங்குகின்றனர்.  ஜராசந்தனுக்குக் கவலை அளிக்கும் விஷயமே அவர்களின் அதிகாரப் பரவலும், வலிமையும் தானே.  அதற்காகத் தானே அவர்களைத் தன்னோடு திருமண பந்தத்தின் மூலம் இணைக்க விரும்புகிறான்.

 இவர்களின் வலிமை போதாது என வந்திருக்கும் அரசர்கள் அனைவருமே கிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக ஆகிவிட்டனர்.  அவன் எடுக்கும் முடிவைத் தான் அவர்கள் ஆதரிப்பார்கள்.  இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு சுயம்வரத்தை உடைக்க நினைக்கும் ஜராசந்தனைத் தாக்கினால்??  ஜராசந்தனுக்குத் தோல்வி தான் கிட்டும்.  ஆகவே அவன் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று.  துருபதனை எவ்வகையிலேனும் அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்க வைத்து ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவேண்டும். அப்படி அவன் மறுத்தால் அடுத்த கணமே ஜராசந்தன் இங்கிருந்து தன் நாட்டுக்குப் பறந்துவிட வேண்டும்.  வெறும் கையோடா?  இல்லை…இல்லை,… திரெளபதியைத் தூக்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.  ஜராசந்தன் தனக்குள் தீர்மானித்து விட்டான்.

தன் மகனைப் பார்த்து, “துருபதன் என்னை ஏமாற்றாமல் இருக்க வேண்டும். சஹாதேவா, அவனிடம் தீர்மானமாய்ச் சொல்லிவிடு.  அவனுடைய உளறல்களை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்காதே!  எப்படியாயினும் திரெளபதி மேகசந்தியைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்;  இல்லை எனில் துருபதன் ஜராசந்தனை எதிர்கொள்ளும்படி இருக்கும்;  போர்க்களத்தில்! என்று திட்டவட்டமாய்த்தெரிவித்து விடு.” இத்தோடு அந்த சபை கலைந்ததற்கு அடையாளமாய் ஜராசந்தன் தலையை அசைத்தான்.


இப்போது குரு வம்சத்தினர் இருக்கும் கூடாரத்தின் பக்கம் போய் அவர்கள் முயற்சி எல்லாம் எம்மட்டில் இருக்கிறது எனப் பார்ப்போமா?  கர்ணன், அஸ்வத்தாமா இருவருமே துரியோதனனுக்கு மிக நெருங்கியவர்கள்.  ஆகையால் துரியோதனனின் கூடாரத்துக்கு அருகிலேயே அவர்கள் இருவரும் கூடாரம் அடித்துத் தங்கி இருந்தனர்.  கர்ணன் சூரிய வழிபாடு செய்பவன்.  அதோடு அவன் தன்னுடைய வழிபாட்டு விஷயங்களிலும், அநுஷ்டானங்களிலும் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டான்.  எங்கே இருந்தாலும் சூரிய வழிபாட்டையும், அநுஷ்டானங்களையும் மிகச் சரியாகச் செய்து முடித்துவிடுவான். அன்றும் காலை எழுந்ததும் முதல்வேலையாக  கங்கையில் குளித்துவிட்டு சூரியனுக்கு அர்க்யம் விடுவதைச் செய்து முடித்தான்.  அவன் தினம் தினம் ஏழைகளுக்கு தானம் செய்துவிட்டுத் தான் தன்னுடைய உணவை உட்கொள்ளுவது என்று ஒரு நியமம் வைத்திருந்தான்.  அது போல் அன்றும், அங்கேயும் ஓர் மரத்தடியில் அமர்ந்த வண்ணம் கண்களில் எதிர்ப்பட்ட ஏழை மக்களுக்குத் தன்னால் இயன்ற தானங்களைச் செய்து கொண்டிருந்தான்.


குரு வம்சத்து துரியோதனனின் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் கர்ணன் முகத்தில் ஒளிர்ந்ததொரு அபூர்வமான ஒளி அவன் நேர்மையிலும், உண்மையிலும் பற்றுள்ளவன் என்பதைச் சொல்லாமல் சொன்னது.  அவன் கண்களோ வைரமணிகளைப் போல் ஜொலித்தன.  அதில் சூழ்ச்சியையோ, வஞ்சகத்தையோ காணமுடியவில்லை.  எவரையும் நேருக்கு நேர் சந்தித்துப்பேசும் ஆற்றலையே கொண்டிருந்தன அந்தக் கண்கள்.  தானம் அளிக்கையில் அவன் முகமோ கருணையின் சொரூபமாகவே மாறி எல்லையில்லா அன்பையும், கருணையும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. இதழ்களில் தோன்றிய முறுவல் அந்த அன்புக்கும், கருணைக்கும் மேலும் மெருகு கூட்டிக் கொண்டிருந்தது.  ஏழைகளையும், இல்லாதவர்களையும், முடவர்களையும், குருடர்களையும் பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு மனமார உதவ வேண்டும் என்னும் நினைப்பைத் தவிர்த்து வேறொன்றும் இல்லாதவனாகத் தோன்றினான்.  அப்போது துரியோதனனின் கூடாரத்திலிருந்து அஸ்வத்தாமா வெளி வந்தான்.  தூக்கிக் கட்டிய கொண்டையும், கையில் வில்லோடும் அம்புறாத்தூணியோடும் வந்த அவன் புருவங்கள் நெரிந்து சிந்தனையில் இருப்பதைக் காட்டின.  கர்ணன் தன் தானங்களை அளித்து முடிக்கும்வரை பொறுமையுடன் காத்திருந்தான் அவன்.  பின்னர் இருவருமாக உணவருந்த அமர்ந்தனர்.

அஸ்வத்தாமா எதுவோ சொல்லத் துடிப்பதைக் கர்ணன் உணர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.  அஸ்வத்தாமாவாலும் வெகு நேரம் பொறுக்க முடியவில்லை.  பட்டென வெடித்தான். “கர்ணா, துரியோதனனின் சுயநலத்துக்கு அளவே இல்லாமல் போகிறதே!” என்று ஒரு நீதிமானுக்குரிய சீற்றத்தோடும், நேர்மையைத் தொனிக்கும் குரலோடும் கூறினான் அஸ்வத்தாமா.  கர்ணன் பொறுமையாக, “என்ன ஆயிற்று அஸ்வத்தாமா? நீயே இவ்வளவு கோபப்படும்படியாக ஏதோ நிச்சயம் நடந்திருக்கிறது.  அது என்ன?  ஏன் இவ்வளவு கோபம் கொள்கிறாய்?” என்று கேட்டான். “ ஹூம், துரியோதனன் மிக மிக அவசரமாக என்னை இப்போது கூப்பிட்டனுப்பினான் அல்லவா?  அதன் காரணம் என்னவென உனக்குத் தெரியுமா?”  அஸ்வத்தாமா  கேட்கக் கர்ணன் அதே சிநேகமான தொனியில், “தெரியாது, அஸ்வத்தாமா, நிதானமாகச் சொல்வாய்!”  என்றான்.  “அவன் என்னை ஒரு சபதம் எடுத்துக்கொள்ள அழைத்திருக்கிறான்.  அதைக் கேட்டாலே சிரிப்பாய். அவ்வளவு நகைப்புக்கிடமான செயல் அது!  அதோடு மிகுந்த சுயநலம் கொண்டதும் கூட!” பொரிந்து தள்ளினான் அஸ்வத்தாமா.  அவனால் அவனுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியின் காரணமாக சாப்பாடைக் கூட ஒழுங்காய்ச் சாப்பிட முடியவில்லை.  தடுமாறினான். அவன் தொண்டையை அடைத்தது.   கர்ணன் இவை எல்லாவற்றுக்கும் பழக்கப்பட்டவனாகவே இருந்தான்.  அவன் அஸ்வத்தாமாவைப் போல் பதற்றம் கொள்ளவே இல்லை.  நிதானமாகவே இருந்தான்.

அதோடு அவன் நண்பர்கள் இப்படி அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது அவன் வரையில் புதிதும் இல்லை.  எப்போதும் நடக்கும் ஒன்றுதான்.  எரிமலை வெடிக்குமா, வெடிக்குமா எனக் காத்திருந்து கடைசியில் எதுவும் இல்லாமல் போகும்;  அது போல இவர்களும் இப்படித் தான் ஒருவருக்கொருவர் வெடித்துச் சிதறுவார்கள் என நினைத்தால், கடைசியில் ஒன்றும் இருக்காது.  கர்ணன் அஸ்வத்தாமாவிடம், “நிதானமாக நடந்தது என்ன என்பதைச் சொல்லு.” என்றான்.  “திரெளபதியை அடையக் கிருஷ்ண வாசுதேவனின் உதவியை துரியோதனன் எதிர்பார்க்கிறான்.” என்று ஆரம்பித்தான் அஸ்வத்தாமா.  தொடர்ந்து, “ ஆனால்…..ஆனால்….. இந்த யாதவர்கள், ஒருக்காலும் இதற்கு ஒப்ப மாட்டார்கள்.  ஏனெனில் தந்தையார் துருபதனிடமும், திரெளபதியிடமும் விரோதம் பாராட்டுகிறார் அல்லவா? ஆகவே துரியோதனன் யாதவர்களிடம் வாக்குக் கொடுக்க வேண்டுமாம்; அதாவது  துரோணாசாரியார் இப்படிச் சொல்ல வேண்டுமாம்: “குரு வம்சத்துத் தளபதியான நான் பாஞ்சால இளவரசி திரெளபதி குரு வம்சத்து மருமகளாய் ஹஸ்தினாபுரம் வந்தால் அவளிடம் விரோதம் பாராட்ட மாட்டேன்; ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற மாட்டேன். “ என்றெல்லாம் என் தந்தை வாக்குக் கொடுக்க வேண்டுமாம்.  அதை துரியோதனன் யாதவர்களிடம் சொல்லி அவர்கள் உதவியை வாங்கிக் கொள்வானாம்.  என் தந்தையும், நானும் அவனுக்கு அவ்வளவு மட்டமாகவா போய்விட்டோம்.  நாங்கள் என்ன சின்னக் குழந்தைகளா?” குமுறினான் அஸ்வத்தாமா.  அவன் தொண்டையை துக்கம் அடைத்தது.

“அது சரி, அப்பா,  அதற்கு நீ என்ன செய்வாய்? உன்னை ஏன் கூப்பிடுகிறான்?” என்று அஸ்வத்தாமாவைச் சமாதானம் செய்யும் குரலிலேயே கேட்டான் கர்ணன்.  ஆனால் பொறுமை இழந்திருந்த அஸ்வத்தாமாவுக்குக் கர்ணனின் நிதானம் எரிச்சலையே வரவழைத்தது.  மாறாக அவன், “பொறுமையின்றிப் பேசாதே கர்ணா.  நிதானமாகப் பேசு! திரெளபதி குரு வம்சத்து மருமகளாக ஹஸ்தினாபுரம் வரும்போது  என் தந்தை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லக் கூடாதாம். அதற்காக நான் என் உயிரைக் கொடுத்தாவது என் தந்தையைப் போகாதிருக்கச் செய்வேன் என சபதம் கொடுக்க வேண்டுமாம். இந்த துரியோதனன் அதற்குத் தான் என்னை அழைத்திருக்கிறான். ஆரம்பத்திலிருந்தே அஸ்வத்தாமாவின் இந்தக் கோபத்தை விளையாட்டாகவே எடுத்துக் கொண்ட கர்ணன், இப்போதும் விளையாட்டாகவே அவனிடம், “அப்போது நீ ஏன் இந்த சபதம் எடுத்துக் கொள்ளத் தயங்குகிறாய்?  எடுத்துக் கொள்ள வேண்டியது தானே!” என்று கேட்டான்.

“ஆஹா, என்ன சொன்னாய் கர்ணா?  நான் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டுமா?  என் தந்தையின் விரோதியான ஒருவனின் மகளை துரியோதனன் மணந்து கொள்ள  வேண்டி, நான் என் தந்தையின் விரோதத்தைக் கூடப் பாராட்டாமல் இருக்க வேண்டுமா?  இதன் மூலம் அவருக்கு ஏற்படும் அவமானங்களை நான் சகித்துக் கொள்ள வேண்டுமா? அதற்கு சபதம் எடுக்க வேண்டுமா?  ஏன் , எதற்கு?  நான் அப்படி ஒரு சபதம் எடுத்துத் தான் தீர வேண்டும் எனில் துரியோதனனுக்காக இல்லை,  விரோதி என்றும் பாராது, அந்த இளவரசியை மணக்க  என் தந்தையின் சம்மதம் கிடைத்துவிட்டால் நானே மணந்து கொண்டுவிடுவேனே!  துரியோதனனுக்கு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? இவனுக்காக என் தந்தை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லக் கூடாது எனில் எனக்காகவும் செல்லாமல் இருக்கலாமே!”

கடகடவெனச் சிரித்த கர்ணன், “ அது சரி, அஸ்வத்தாமா, உண்மையாகவே நீ பாஞ்சால இளவரசியை மணந்து கொள்ள விரும்புகிறாயா? என்று கேட்டான்.  “ஏன் கூடாது?   நான் எதில் குறைந்தவன்?  மாபெரும் வீரரும், குரு வம்சத்தினரின் ஆசாரியரும் ஆன துரோணரின் ஒரே பிள்ளை என்னும் தகுதி மட்டுமில்லாமல் ற என் வில் வித்தையின் சிறப்பை நீ அறிவாய்!  என் வீரத்தைக் குறித்தும் நீ நன்கு அறிவாய்! இங்குள்ள அனைத்து அரசர்களும் எதிர் வந்தாலும் அனைவரையும் எதிர்கொள்ளும் ஆற்றல் எனக்கிருக்கிறது என்பதை நீ நன்கறிவாய்!  இத்தனை அரசர்களை விடவும், நான் நல்ல தகுதி வாய்ந்த மணமகனாக திரெளபதிக்கு அமைவேன்.  அது சர்வ நிச்சயம்!” என்றான் அஸ்வத்தாமா!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

ஆசை யாரை விட்டது!