Friday, December 6, 2013

நள்ளிரவில் நடந்த விநோதங்கள்!

மறுநாள் மாலையில் யாகத்தீயை ஒட்டி பாண்டவர்கள் ஐவரும், குந்தியுடன் அமர்ந்திருக்க வியாசரும் அங்கே அமர்ந்திருந்தார். அப்போது வியாசர் சகோதரர்கள் ராக்ஷசவர்த்தத்தை விட்டு நீங்கி வெளிப்படும் காலம் நெருங்கிவிட்டதாகவும், இதுவே தக்க சமயம் என்றும் கூறினார்.  பீமனுக்கு இஷ்டமே இல்லை.  அவனுக்குத் தனக்கென ஒரு தனி ராஜ்யம் இருப்பதை விரும்பியதோடு அதை அனுபவித்து ரசித்து அரசனாகவே வாழ விரும்பினான்.  அதோடு இல்லை;  ஹிடும்பியையும், அவளுக்கும் தனக்கும் பிறந்த கடோத்கஜனையும்  மிகவும் நேசித்தான்.  கடோத்கஜனைக் குழந்தையிலேயே பிரிய பீமன் விரும்பவில்லை.  ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் தன் மகனின் அருகேயே தானும் இருந்து அவன் வளர்ச்சியைக் காண விரும்பினான்.  ஆனால் மற்றவர்களோ எப்போது அங்கிருந்து ஓடலாம் என்றே காத்திருந்தனர்.  சொல்லப் போனால் ராக்ஷசவர்த்தம் வந்ததில் இருந்தே அங்கிருந்து செல்லவேண்டும் என்றே எண்ணினர்.

அவர்கள் அப்போது வெளிப்படுவதன் நன்மைகளை வியாசர் விரிவாக எடுத்து உரைத்தார். காம்பில்யத்தின் இளவரசியான திரெளபதிக்கு நடைபெறப் போகும் சுயம்வரத்தையும் அதை ஒட்டி ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்கள், இளவரசர்கள் கூடி இருக்கும் மகாசபையில் அவர்கள் தங்களை வெளிப் படுத்திக் கொள்வது நன்மை பயக்கும் என்றார்.  அதோடு இல்லாமல் மற்ற அரசர்கள் முன்னிலையில் துரியோதனனால் அவர்களை ஒதுக்கித் தள்ள முடியாது என்றும் அவனும் வரவேற்றே ஆக வேண்டிய நிலையில் இருப்பான் என்பதையும் விளக்கினார்.  பீஷ்மரும், மஹாராணி சத்யவதியும் எப்போது அவர்கள் வருவார்கள் என்று காத்திருப்பதாகவும் கூறினார்.  “கிருஷ்ண வாசுதேவனும் நீங்கள் வெளிப்படுவதை விரும்புகிறான்.  அவனுடன் நீங்கள் ஒத்துப் போவதையே நான் விரும்புவேன்.  அவன் உங்களுக்கு நல்ல உறவினன் மட்டுமல்லாமல் நல்ல நண்பனாகவும் இருப்பான்.”  என்றார் வியாசர்.  யாரும் ஒன்றும் சொல்லவில்லை.  அவ்வளவில் அந்தக் கூட்டம் முடிந்து இரவு உணவுக்குப் பின்னர் அனைவரும் அங்கேயே படுத்து உறங்கினர்.  நடு இரவு. எல்லாருமே அசந்து உறங்கினார்கள்.    யாகத் தீ மெதுவாக அணைந்து புகையை மட்டும் கக்கிக் கொண்டிருந்தது.  அந்தக் காட்டின் மெளனத்தையும் தாண்டி மிகப் பலமான காற்று, விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரெனச் சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது.  அதைத் தவிர வேறு சப்தமே இல்லை.  அப்போது அர்ஜுனனுக்குத்  திடீரென விழிப்பு வந்து விட்டது.

அவனுடைய உணர்வுகள் அனைத்துமே எப்போதுமே விழிப்பில் இருக்கும்.  ஆகவே ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வில் அவன் விழித்து எழுந்துவிட்டான்.  ஏதோ நடக்கக்கூடாதது ஒன்று நடக்கப்போகிறது.  உற்றுக் கவனித்தான் அர்ஜுனன்.  அப்போது, “தொப்” என்று ஒரு சப்தம் மிக மிக லேசாகக் கேட்டது.  சற்று நேரத்தில் அதைப் போன்றே மீண்டும் ஒரு தொப்.  அடுத்து இன்னும் ஒரு தொப்!  ம்ஹூம், இதில் ஏதோ விஷயம் இருக்கிறது.  மரங்களில் இருந்து பழங்கள் கீழே விழும் சப்தம் எனில், இப்போது எந்த மரத்திலும் பழங்களே கிடையாதே!  யோசித்த அர்ஜுனனுக்கு, இது மனிதர்கள்/அதாவது ராக்ஷசர்கள் ஒருவர் பின் ஒருவராக அவர்களின் உயரமான குடியிருப்பிலிருந்து சப்த மில்லாமல் குதிக்கும் ஓசையே என்று நிச்சயம் ஆனது.  அடர்ந்த அந்தக் காட்டுக்குள்ளே ராக்ஷசர்கள் அவர்களின் மரத்து மேல் இருக்கும் வீடுகளில் இருந்து ஒருவர் ஒருவராகக் கீழே குதிப்பது என்பதை நினைத்தால் கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருந்தது.   அவர்கள் இம்மாதிரி ரகசியமாகப் பயணம் கிளம்புவது எனில் அது யாரையேனும் கொலை செய்து உண்ணத் தான் இருக்கும்.  மற்ற நேரங்களில் இப்படிக் கிளம்புவது இல்லை. 

யாக குண்டத்திலிருந்து வந்த அந்தக் குறைந்த ஒளியில் தன் கண்களைத் தீட்டிக் கொண்டு உற்றுக் கவனித்தான் அர்ஜுனன்.  அணைந்து கொண்டிருந்த அந்தக் குண்டத்தின் அருகே திறந்த வானத்தின் கீழே ஒரு குழந்தையைப் போல் வியாசர் தூங்கிக் கொண்டிருந்தார்.  சற்று தள்ளிக் குந்தியும், அவள் அருகே வரிசையாக யுதிஷ்டிரனும், நகுலன், சஹாதேவனும் படுத்திருந்தனர்.  ஜைமினியும் மற்ற மாணாக்கர்களும் இன்னும் தள்ளி வேறொரு திசையில் படுத்திருந்தனர்.  இன்னும் தொலைவிலே அவர்களைப் பாதுகாப்பது போல் பீமன் படுத்திருந்தான்.  அவன் விடுத்த குறட்டை ஒலி ஒரு கர்ஜனையைப் போல் கேட்டது.  ஆனாலும் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை அர்ஜுனன் புரிந்து கொண்டான்.  இந்தக் காட்டில் தரையில், பூமியில் படுப்பது பாதுகாப்புக்கு உரியதன்று என்பதை அர்ஜுனன் அறிவான்.  இரவு நேரங்களில் மரங்களின் மேலுள்ள வீடுகளில் படுத்து உறங்குவதே பாதுகாப்பு என்பதையும் அறிந்திருந்தான்.  ஆனால் வியாசரால் மரத்தின் மேல் ஏறிப்படுப்பது என்பது இயலாது;  அது தான் அவர் உயிரைக்காக்கும் என்றாலும் அம்மாதிரிப் படுப்பதை அவர் விரும்பவில்லை.  ஆகவே அனைவருமே கீழே படுத்து உறங்கினார்கள்.  ராக்ஷசர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டதோ?

அர்ஜுனன் தன் கண்களை நன்கு திறந்து கொண்டு காற்றில் வாசனைகளை முகர்ந்தான்.  ஒவ்வொரு நிமிடமும் ஒரு ராக்ஷசன் மரத்தின் மேலிருந்து கீழே குதிப்பது கேட்டுக் கொண்டிருந்தது.  ஏதோ ஒன்று நடக்கிறது அல்லது நடந்து கொண்டிருக்கிறது.  ராக்ஷச ராஜா வ்ருகோதரனுக்கு அது குறித்து எதுவும் தெரியாது.   அவனறியாமல் ஏதோ நடக்கிறது.  அர்ஜுனன் சப்தமில்லாமல் சஹாதேவனை எழுப்பினான்.  அவனுக்குத் தன் சந்தேகத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  சஹாதேவனும் உற்றுக் கேட்டுவிட்டு மரங்களின் இலைகளின் மெல்லிய அசைவையும், ராக்ஷசர்கள் கீழே குதிக்கும் சப்தத்தையும், அவர்கள் காய்ந்த இலைகளின் மீது நடக்கும் போது எழும் கரகரவென்ற சப்தத்தையும் கேட்டுவிட்டு ராக்ஷசர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மரத்தின் மீதிருந்து இறங்கி எங்கோ ஓர் இடத்தில் கூடுகின்றனர் என்பதை அறிந்து கொண்டான்.  ஏற்கெனவே அவர்களுக்குள்ளாகப் பேசி முடிவு செய்திருக்கின்றனர்.  அதன்படி கூடுகின்றனர் என்பதையும் புரிந்து கொண்டனர் இருவரும்.  இந்தக் கபட நாடகத்தின் பின்னே எத்தகைய சூது ஒளிந்திருக்கிறதோ என இருவரும் யோசித்தனர்.  அவர்கள் அனைவரையும் ராக்ஷசர்கள் தாக்கப்போகின்றனரா?   அப்படித் தான் இருக்க வேண்டும்.

ராக்ஷசர்கள் வ்ருகோதரனிடம் விசுவாசம் வைத்திருந்தனர்.  அவனிடம் எல்லையற்ற அன்பும் மரியாதையும் காட்டினார்கள்.  ஏனெனில் அவன் மிக பலசாலியாக இருந்ததோடு அல்லாமல் அவர்களின் முன்னோரான விரோசனனின் ஆவி அவனிடம் பரிபூர்ணமாக இறங்கி இருந்ததாக நம்பினார்கள்.  பீமனை ஏற்றுக் கொண்ட அவர்களால் பீமனின் சகோதரர்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  அவர்களோடு ஒத்துப் போகவோ, சமரசம் செய்து கொள்ளவோ விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த வரை பீமனின் சகோதரர்கள் வெளி தேசத்திலிருந்து வந்த அந்நியர்களே!  அதுவும் இப்போது ஆசாரியர் வியாசர் வந்திருப்பதினாலும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கக் கூடும்.   ஆகவே அவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகத் தாக்கிக் கொல்ல வேண்டுமென நினைக்கலாம்.  அர்ஜுனன் மெல்லத் தவழ்ந்து சென்று பீமனை எழுப்பினான்.  அதற்கு அவன் மிக முயற்சிக்க வேண்டி இருந்தது.  சந்தோஷமாய் சுக நித்திரை செய்து கொண்டிருந்த பீமனுக்குத் தன்னுணர்வு வரவும் நேரம் பிடித்தது.  ஆனால் அவன் சுய உணர்வுக்கு வந்ததுமே ஏதோ நடக்கிறது என்பதையும் அசாதாரணமான ஒன்று நடப்பதையும் புரிந்து கொண்டு விட்டான்.  தன்னருகே வைத்திருந்த தன் ஆயுதமான கனத்த தடியைக் கையிலேந்திக் கொண்டு தாக்குதலைச் சமாளிக்கத் தயாராகி விட்டான்.

அர்ஜுனன் அப்போது, “ சகோதரா, பீமா, அவர்கள் பலர்;  நாமோ எண்ணிக்கையில் குறைந்தவர்கள்.  எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லையே!” என்று பீமன் காதில் கிசு கிசுத்தான். சஹாதேவன் உடனே தன் காதை பூமியில் வைத்துக் கேட்டான். சற்று நேரம் கேட்டவன், “அவர்கள் ஐம்பது பேருக்குள்ளாகத் தான் இருக்கின்றனர்.   ஒன்றிரண்டு பேர் கூட இருக்கலாம்.” என்று கூறினான்.  பீமன் உடனே அர்ஜுனனிடம், “உன் வில்லையும், அம்புகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறாயா?  உன்னால் இருட்டில் கூட அம்பைக் குறி பார்த்து எய்ய முடியும்!” என்றான்.  “ம்ம்ம், எனக்குத் தெரியும், இருட்டிலும் அம்பு எய்வேன் நான். ஆனால், இந்தக் கூட்டத்தின் முன்னர் நான் எய்யும் பலவீனமான அம்புகள் என்ன செய்ய முடியும்?  சிறிதளவே தாக்க இயலும்.  அதற்கு முன்னர் இந்த இருட்டிலே நம் மண்டைகள் உடைக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.  நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளும் முன்னரே நம் மண்டைகள் உடைக்கப்பட்டுவிடும்.” என்றான் அர்ஜுனன்.



3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளும் முன்னரே நம் மண்டைகள் உடைக்கப்பட்டுவிடும்.” //

நல்ல சுவாரஸ்யமான கட்டத்தில் திகிலுடன் கதையை நிறுத்தியுள்ளீர்கள்.

மேற்கொண்டு என்ன ஆச்சு எனத்தெரியாமல் எங்கள் மண்டை இப்போது உடைந்துவிடும் போல உள்ளதே ! ;)

ஸ்ரீராம். said...

அடுத்து என்ன நடக்கும் என்று அறியக் காத்திருக்கிறேன். இந்தக் காட்சி நான் படித்ததில்லை.

இராஜராஜேஸ்வரி said...

மர்மமான விநோதங்கள்..!