Saturday, September 21, 2013

ஆர்யகனின் விருப்பம்

இயல்பாகவே பாசமும், கருணையும் மிகுந்த கண்ணன் தன் பாட்டனின் இந்த மொழிகளில் மிகவும் மனம் உருகினான்.  பாட்டனின் நடுங்கும் கைகளைப் பிடித்து அவனை ஆதரவாகத்தட்டிக் கொடுத்தான். ஆர்யகன் தொடர்ந்தான்:” கண்ணா, நான் யோசிக்கிறேன், மீண்டும், மீண்டும் யோசிக்கிறேன்! எங்களை காட்டின் இந்தக் கோடிக்கு விரட்டியது எது?  எவர்?” குரல் தழுதழுக்க அவன் குரல் கேட்கமுடியா அளவுக்குப் போனது.  சற்றே நிறுத்தித் தன்னைச் சமாளித்துக் கொண்ட ஆர்யகன், “கார்க்கோடகன் இந்தப் போருக்கெல்லாம் தாங்குபவன் அல்ல.  அவனால் இது இயலாது.  என் கெட்டிக்கார, வலிமை மிக்க மகன்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.   மணிமானோ “கண்டதே காட்சி; கொண்டதே கோலம்” என சுகவாழ்வை விரும்புவான்.   ஆரியர்களின் வலிமையோ, ஆற்றலோ, பலமோ, எழுச்சியோ எங்களிடம் இல்லை.  அவர்களுக்கு நாங்கள் சமம் இல்லை!”

கிருஷ்ணன் இந்த வயதான கிழட்டு நாக அரசனின் புத்தி சாதுர்யத்தை வியந்தான்.  ஆர்யகனும் மூச்சுவிடக் கொஞ்சம் நிறுத்திக் கொண்டான்.  “உன்னையும், அதன் முன்னர் உத்தவனையும் நான் பார்த்ததுமே என் வேண்டுகோளை அந்த பசுபதி நாதர் கேட்டுக் கருணை காட்டியே அனுப்பி வைத்திருக்கிறார்;  அதுவும் என் மக்களைக் காப்பாற்ற வேண்டியே அனுப்பியுள்ளார் எனப் புரிந்து கொண்டேன்.  கண்ணா, நான் எங்கள் ஆசாரியர்களையும், குருமார்களையும் கலந்து பேசினேன்.  பசுபதிநாதரின் கட்டளையின் பேரிலேயே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை அவர்களும் ஒத்துக் கொண்டனர்.  வந்த சில நாட்களிலேயே நீ என் மக்களுக்கு ஒரு புதிய பாதையை, ஒரு புதிய வாழ்க்கையைக் காட்டிவிட்டாய்!  சாகசங்களின் அற்புதத்தை- அதன் உணர்வை- அது சிறிது நேரமே இருந்திருந்தாலும்- அவர்களுக்கு சாகசங்கள் என்றால் என்னவெனக் காட்டி விட்டாய்.  அவர்களும் துணிந்து சாகசங்களில் ஈடுபட்டார்கள். ராக்ஷசர்களுடனான சமாதான உடன்படிக்கையால் அவர்கள் மனதில் பெரும் நிம்மதி பிறந்துள்ளது.  அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது.”


“எங்கள் வருகையினால் உங்கள் அனைவருக்கும் விளைந்த நன்மை குறித்து சந்தோஷம் பாட்டனாரே!” என்றான் கண்ணன்.   ஆர்யகன் தொடர்ந்தான். “இன்று வரையிலும் நான் ஆரியர்களின் வாழ்க்கை முறையை என் மக்கள் கடைப்பிடிப்பதை முற்றிலும் எதிர்த்து வந்தேன்.  ஏனெனில் என் மக்கள் அமைதியானவர்கள், சமாதானம் விரும்புபவர்கள்.  அவர்களைத் தேடி வந்து யார் போருக்கு அழைக்கப் போகின்றனர்?  ஆனால் கண்ணா, சென்ற வாரத்திலிருந்து, ஒவ்வொரு நாளும்,இரவும், பகலும், ஒவ்வொரு நிமிடத்திலும் என் சிந்தனை அதைச் சுற்றியே இருக்கிறது.  நான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்; இருக்கிறேன்.  கண்ணா, நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.  என் மக்கள் ஆரியர்கள் வாழும் பாதையிலேயே செல்லட்டும்.  அவர்களைப் போல ஆயுதம் எடுக்கட்டும்.  யுத்தம் என்றால் பயமின்றிப் போர் புரியட்டும். யுத்த தந்திரங்களை அறியட்டும்.   கால்நடை வளர்ப்புகளைக் கற்று கால்நடைகளைப் பராமரிக்கட்டும்.  ஆரியர்களைப் போலவே பார்லி, அரிசி போன்ற தானியங்களை விளைவிக்கக் கற்கட்டும்.  குதிரை ஏற்றம், யானை ஏற்றம் பழகட்டும்.   கண்ணா, என் மக்களுக்கு எங்கள் எளிமையான வாழ்க்கை முறைதான் பிடிக்கும்.  அதற்குப் பழகியவர்களே.  என்றாலும் உன் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பார்கள்.   ஏனெனில் நீ மரிஷாவின் பேரன்.  அது மட்டுமல்ல, உன்னைக் கண்டால் அவர்கள் பயப்படுவதும் இல்லை.  அவர்கள் உன்னை நம்புகின்றனர். நீ அவர்களை அடிமையாக்கப் போவதில்லை என்றும், அவர்களின் அரசனாக ஆளப் போட்டியிட மாட்டாய் என்றும் புரிந்து கொண்டிருக்கின்றனர்.”

“மாட்சிமை பொருந்திய பாட்டனாரே!  நான் உங்கள் நாக குலத்துக்கோ, அல்லது எங்கள் ஆரியர்களின் ஏதேனும் ஒரு ராஜ்யத்துக்கோ அரசனாக இருக்க வேண்டும் என என்றுமே விரும்பியதில்லை; இனியும் விரும்ப மாட்டேன்.  எங்கள் யாதவ குலத்தில் இருந்தே ஒருமுறைக்கு இருமுறை எனக்கு அரச பதவி அளிக்கப்பட்டது.  ஆனால் நான் மறுத்துவிட்டேன்.  ஏன் தெரியுமா?  ஒரு முறை நாம் அரசபதவியை அடைந்து அரசனாகிவிட்டால்  மக்கள் உங்களைக் கண்டு பயந்து ஒதுங்குவார்கள். தங்கள் மனதை உங்களுக்காகத் திறக்க மாட்டார்கள்.  அச்சம் அவர்களைக் கொன்றுவிடும்.  நான் வேண்டுவது எல்லாம் எல்லா மக்களும் திறந்த மனதோடு என்னை அணுகித் தங்கள் மனதைத் திறந்து என்னிடம் நெருங்கிப் பேசுவது தான்.  அவர்கள் மனதில் நான் இருக்க வேண்டுமே தவிர, அரசனாக அல்ல. “ கண்ணன் சொன்னதில் இருந்த உணர்ச்சி பூர்வமான பாவம் ஆர்யகன் மனதில் வியப்பையும், ஆனந்தத்தையும் ஒருசேரத் தோற்றுவித்தது.   உணர்வு மிகுதியால் கண்ணீர் பெருகியது ஆர்யகனுக்கு.  “உதவு கண்ணா, எனக்கு உதவி செய்!” கண்ணீர் வழிய நடுங்கும் கரங்களால் கண்ணனின் கரங்களைப் பிடித்தான் ஆர்யகன்.  “என் மக்களுக்கு உதவி செய்.  அவர்களை உன் தலைமையில் தைரியமுள்ளவர்களாக, பலமானவர்களாக மாற்று.  “

“மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, குதிரைகளையும், ரதங்களையும் பற்றி நினைப்பது மிக எளிது.  ஆனால் அவற்றை அடைவது சாமானியமான ஒன்றல்ல!” என்றான் கண்ணன்.  “எனக்குப்  புரியவில்லை.” என்றான் ஆர்யகன்.  “குதிரைகள் பூட்டிய ரதங்கள், விற்கள், அம்புகள், எல்லாம் இருக்கின்றன.  யுத்தம் செய்வதற்கு வேண்டிய ஆயுதங்கள்.  உண்மை தான் பாட்டா, ஆனால் அவை மிகவும் விலை பெற்றவை.  மதிப்பில்லாதவை.  அதை சாமானியன் கையாள முடியாது.  வல்லுநர்களாலேயே கையாள முடியும்.  குதிரைகளைப் பழக்குவதும் சாமானியம் அல்ல.  மிகுந்த உழைப்பு வேண்டும்.  மன உறுதி வேண்டும். அதோடு பணமும் நிறைய வேண்டும்.    என்னவெல்லாம் தேவையோ எல்லாவற்றையும் பூமித்தாய் கொடுக்கிறாள் தான்.  எப்படி? கால்நடைச் செல்வங்களைப் பெருக்கி, முக்கியமாய்ப் பசுக்கள்!  அவை விலையில்லா செல்வங்கள்.  அவை எல்லோருக்கும்/எல்லாவற்றுக்கும் தாயாக இருந்து வருகின்றன.  அந்தப் பசுக்களைப் பெருக்க வேண்டும். அதுவும் எளிதானது இல்லை.  கடுமையான உழைப்பு, உழைப்பு, உழைப்பு ஒன்றே வழி!  இவற்றில் ஒன்றில்லாமல் மற்றது இல்லை. “

“கண்ணா, உன் மக்களை மத்ராவில் இருந்து துவாரகை அழைத்துச் செல்கையில் எப்படி இவ்வளவு கால்நடைகளையும் எடுத்துச் செல்ல முடிந்தது உன்னால்?  எப்படிச் சமாளித்தாய்?”

“பாட்டா, நாங்கள் எங்கள் சுதந்திரத்தைத் தேடி மத்ராவை விட்டுச் செல்கையில், மிகுந்த துன்பத்துடன் இருந்தோம்.  சொல்ல முடியாத் துன்பம்.  அனுபவித்தோம்;  சொந்த நாட்டை விட்டுச் செல்லும்போதும் அனுபவித்தோம்.  அது எங்களைக் கொஞ்சம் இல்லை நிறையவே முரடர்களாக மாற்றிவிட்டது.  அது தான் நாங்கள்; யாதவகுல மக்கள்.  நாங்கள் கால்நடைகளையும் கூடவே அழைத்துச் சென்றோம்.  அதோடு நாங்கள் நிலத்தை உழுது பயிர் செய்வதிலும், மாடுகள் வளர்ப்பிலும், மற்றக் கால்நடை வளர்ப்பிலும் நிபுணர்கள்.  ஆகவே எங்களால் அழைத்துச் செல்ல முடிந்தது.  அது மட்டுமல்ல.  செளராஷ்டிரா அடைந்த சில மாதங்களிலேயே பசுமை வளம் மிகுந்ததாக ஆக்கிவிட்டோம்.   முக்கியமாக எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள் எங்களுக்கு அருமையான மூன்று துறைமுகங்களைக் கொடுத்துள்ளான்.  பிரபாச க்ஷேத்திரம், துவாரகை, சாபர் கட்ச். இதன் மூலம் எங்களுக்கு எங்கள் தேவைக்கு மேலேயே வருமானம் கிடைக்கிறது.  மஹாலக்ஷ்மி தன் கருணாகடாக்ஷத்தை வாரி வழங்குகிறாள்.   ஆகவே எங்களுக்கு மற்ற மன்னர்களைப் போல இன்னொரு நாட்டுடன் போரிடவோ, வரி வசூலிக்கவோ தேவை இல்லை.  அதன் மூலம் எங்கள் பலத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.”

“நீ அதிர்ஷ்டக்காரன் கிருஷ்ணா!  கடவுள் உனக்கு அனைத்துச் செல்வங்களையும் தாராளமாக வழங்கியுள்ளார்.  அதோடு அதைக் காப்பாற்ற வேண்டிய புத்தி சாதுர்யமும் உன்னிடம் உள்ளது.  கண்ணா, நான் செய்யவேண்டியது என்ன?  உன் ஆலோசனையைக் கூறு.” என்றான் ஆர்யகன்.  “பாட்டா, உங்கள் மக்கள் எந்த விஷயத்தில் மிகப் பலவீனம் அடைந்துள்ளார்களோ, அவற்றில் ஆரிய வழிமுறைகளையும், மற்றபடி அவர்களின் சுய மரியாதையைக் காக்கும் விதமாக நாகர்களின் பழைய வாழ்க்கை முறையையும் கடைப்பிடிக்கட்டும்.   இதுவே அவர்களுக்கு நன்மை பயக்கும்.” என்றான் கண்ணன்.  “எனக்கு அந்த வழியைக் காட்டு, குழந்தாய்!” ஆர்யகன் இறைஞ்சினான்.  “என் மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்வதை நான் விரும்பவில்லை.   அவர்களை நான் காப்பாற்றியாக வேண்டும்.”



3 comments:

ஸ்ரீராம். said...

இங்கு ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் யார்? கிருஷ்ணனைப் பற்றிச் சொல்லும்போது மரிஷாவின் பேரன் என்று அடிக்கடி வருகிறது. மரிஷா என்று சொல்லும்போது அப்பாதுரை எழுதிய மரிஷ்காவின் பூதங்கள் நினைவுக்கு வருகிறது! :)))

வை.கோபாலகிருஷ்ணன் said...

// “ கண்ணன் சொன்னதில் இருந்த உணர்ச்சி பூர்வமான பாவம் ஆர்யகன் மனதில் வியப்பையும், ஆனந்தத்தையும் ஒருசேரத் தோற்றுவித்தது. உணர்வு மிகுதியால் கண்ணீர் பெருகியது ஆர்யகனுக்கு. “உதவு கண்ணா, எனக்கு உதவி செய்!” கண்ணீர் வழிய நடுங்கும் கரங்களால் கண்ணனின் கரங்களைப் பிடித்தான் ஆர்யகன். “என் மக்களுக்கு உதவி செய். அவர்களை உன் தலைமையில் தைரியமுள்ளவர்களாக, பலமானவர்களாக மாற்று. “//

அருமையான வேண்டுதல் - அதுவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம்.

பகிர்வுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

உங்கள் மக்கள் எந்த விஷயத்தில் மிகப் பலவீனம் அடைந்துள்ளார்களோ, அவற்றில் ஆரிய வழிமுறைகளையும், மற்றபடி அவர்களின் சுய மரியாதையைக் காக்கும் விதமாக நாகர்களின் பழைய வாழ்க்கை முறையையும் கடைப்பிடிக்கட்டும். இதுவே அவர்களுக்கு நன்மை பயக்கும்.” என்றான் கண்ணன்.

எக்காலத்திலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் தத்துவம்..!