Thursday, July 4, 2013

ராக்ஷசன் கொடுத்த தகவல்கள்!

அவர்கள் அந்த ராக்ஷசனின் முன்பக்கம் துருத்திக் கொண்டிருந்த பற்களையும், இடுக்கியைப் போல் அமைந்திருந்த கைகளையும் வாயிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த செக்கச் சிவந்த புடைப்புக்களையும் பார்த்து பயந்து அலறினார்கள்.  ஆனால் சீக்கிரத்தில் அந்தச் சிவந்த புடைப்புக்கள் மரச்சில்லினால் ஆனவை என்பது தெரிந்துவிட்டது.  ஆனாலும் பலத்த எதிர்ப்புக்கிடையே சிகுரி நாகன் அவனைக் கட்டினான்.  அவன் ஓடிப் போய்விடப் போகிறான் என்பது ஒரு காரணம்.  இன்னொரு காரணம் அவர்கள் அனைவருமே ராக்ஷசர்கள் பார்க்கச் சிறிய அளவில் இருந்தாலும் திடீரென வளர்ந்து பயம் கொண்ட உருவம் எடுத்துத் தாக்குவார்கள் என்று நினைத்ததும் தான்.  அவனுடைய காயங்களுக்கு மூலிகைகள் கலந்த மண்ணால் மருந்திட்டு, அவன் கால் உடைந்த இடத்திலும் மூங்கிலை வைத்துக் கட்டி எனச் சிகிச்சைகள் செய்து அவனை மிகவும் கவனத்துடன் பாதுகாத்தான்.  குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் அவன் நாயைப் போல் நக்கிக் குடித்தது அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது.  அந்த ராக்ஷசச் சிறுவன் சிகுரி நாகனைக் கடிக்க முயற்சி செய்தான்.  சிகுரி நாகன் அவனை பலமாகத் தாக்கினான்.  ஆனாலும் மீண்டும் மீண்டும் அந்தச் சிறுவன் அவனைக் கடிக்க முயல அவனோ  பசியோடு இருக்கும் குழந்தை அழுவது போல் அழுதான்.  அப்போது தான் சிகுரி நாகனுக்கு அவன் பசியோடு இருப்பதைச் சொல்லும் முறை இதுவாக இருக்குமோ எனத் தோன்றியது. 

சற்று யோசித்த சிகுரி நாகன் ஒரு சிறுமுயலைப் பிடித்து அவனிடம் கொடுக்க அவன் முகம் மலர்ந்தது.  விரைவில் தன் விரல் நகங்களால் அதன் கழுத்தைக் கிழித்துத் தோலை உரித்து அதன் மாமிசத்தை மிகவும் ஆர்வத்துடனும் சந்தோஷத்துடனும் சாப்பிட்டான்.  அவனுடைய வளைந்த உதடுகளில் வயிறு நிரம்பிய திருப்தி தெரியும் ஒரு புன்னகையும் தோன்றியது.  இதற்குள் மற்ற நாகர்கள் காட்டுக் கொடிகளால் ஆன ஒரு கூண்டைச் செய்து முடித்திருந்தனர். அதை ஒரு கம்பில் நான்கு பேர் தூக்கிச் செல்லும்படி கட்டினார்கள்.  அந்த ராக்ஷசச் சிறுவனின் கை, கால்கள் கட்டப்பட்டு அவன் அந்தக் கூண்டில் அடைக்கப்பட்டான்.  பின்னர் அவனைச் சிலர் தூக்கிச் செல்ல அவர்கள் பயணம் நாககூடத்தை நோக்கிச் சென்றது.  கை, கால்கள் கட்டப்பட்டிருந்தாலும் நாகர்கள் அவன் மேல் ஒரு கண் வைத்திருந்தனர்.  திடீரென அவன் தன்னை அளவில் பெரியவனாக்கிக் கொண்டு கூண்டை உடைத்தெறிந்துவிட்டுத் தங்கள் மேல் பாய்ந்துவிடுவான் என எண்ணிக் கொண்டு அச்சத்துடனேயே இருந்தனர். ஒவ்வொரு கிராமமாகத் தாண்டுகையிலும் சிகுரி நாகன் பல கஷ்டங்களை எதிர் நோக்கினான். ஏனெனில் அந்த அந்தக் கிராமத்துக் குடிமக்களான நாகர்கள் விஷயம் தெரிந்து ராக்ஷசனைக் கொல்லத் தங்கள் ஈட்டி, கேடயங்களோடு கூண்டை முற்றுகையிட்டது தான்.  சிறுவனாக இருந்தாலும் அந்த ராக்ஷசனை அடக்குவதும் கடினமாகவே இருந்தது எனலாம்.  ஒரு மிருகம் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படியே அவன் நடந்து கொண்டான்.  ஆனால் சிகுரி நாகனை மட்டும் தன்னைக் காத்தவன் என்ற எண்ணம் அவனிடம் தோன்றியிருக்க வேண்டும்.  அவன் தட்டிக் கொடுத்தபோதெல்லாம் அமைதி காத்தான். 

இத்தனைக்கும் பிறகு நாககூடம் கொண்டு வரப்பட்ட ராக்ஷசச் சிறுவனுக்குத் தான் உத்தவன் இப்போது சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான்.  அதைச் சுற்றிலும் இருந்த நாகர்கள் அனைவருமாய்க் கூடி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.  அந்த நாளையப் போர் வீரர்களுக்கு யுத்த விதிமுறைகளும், யுத்தம் செய்யவும் மட்டும் அறிந்து கொண்டவர்களாய் இல்லாமல் இம்மாதிரிக் காயங்களுக்கான சிகிச்சை முறையும் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆகவே உத்தவன் ஒரு தேர்ந்த மருத்துவனைப் போலவே அவனுக்கு சிகிச்சை அளித்தான்.  கார்க்கோடகன் அந்தத் தாழ்வாரத்திலிருந்து சற்றுத் தூரத்தில் நிற்க ஆர்யகன் அமர்ந்திருந்த பல்லக்குத் தாழ்வாரத்தின் அருகே கொண்டுவரப் பட்டது.  இளவரசிகளும் தொடர்ந்து வந்தனர்.  முக்கியமாய் அந்த இரட்டைச் சகோதரிகள் தங்கள் பெற்றோரின் பின்னால் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்தனர்.  உத்தவன் தான் பழகி வந்ததொரு நாய்க்குட்டியைத் தடவிக் கொடுப்பது போல் பிரியமுடன் அவனைத் தட்டிக் கொடுத்துத் தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்லுவதை தெறிக்கும் விழிகளுடன், அதில் ஆச்சரியம் மட்டுமில்லாமல் அச்சமும் தெரியப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கே ஆசாரியர் வியாசர் வந்தார்.  ராக்ஷசச் சிறுவன் ஒடிந்த மரம் போல் அவர் கைகளில் சாய்ந்தான்.  அவனை மிருதுவாகத் தட்டிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார் வியாசர்.

“அமைதியாய் இரு மகனே.  உனக்கு ஒன்றும் இல்லை.  நீ சரியாகிவிடுவாய்!” என்று வியாசர் கூறி இருக்க வேண்டும்.  அதுவும் அந்த ராக்ஷசனுக்குப் புரியும் மொழியில் கூறி இருக்க வேண்டும்.  அவன் முகத்தில் அவர் சொல்வதைப் புரிந்து கொண்ட பாவனை இருந்தது.  ஜைமினி ரிஷியைக் கூப்பிட்டு மூங்கிலால் கட்டப்பட்டிருந்த எலும்பு முறிந்த காலைப் பரிசோதிக்கச் சொன்னார் வியாசர்.  ஜைமினியும் அந்த மூங்கில் கட்டைப் பிரித்துப் பார்த்துவிட்டு மூலிகைகள், பச்சிலைகள்  ஆகியவற்றை வேகவைத்துக் காயத்தில் போட்டுத் தேர்ந்த மருத்துவரின் அனுபவத்தோடு அந்த முறிந்த காலை எலும்புகளை ஒன்று சேரும் விதமாகக் கட்டினார்.  ராக்ஷசச் சிறுவனுக்கு உள்ளூரப் பயமாய் இருந்திருக்க வேண்டும்.  ஆசாரியரின் இதமான அணைப்புக்குள்ளே தான் தனக்குப் பாதுகாப்பு என்னும்படியாக நினைத்தவன் போல அவரை நெருங்கி அணைத்தாற்போல் இருந்து கொண்டான்.  பழகிய நாய் தன் எஜமானனிடம் நெருங்கி நிற்பதைப் போல் தோன்றியது அது.  உத்தவனை அவன் பார்த்த போது ஏதோ அறிந்து கொண்டவன் போல, எவரையோ புரிந்து கொண்டவன் போல் அவன் பார்வை இருந்தது.  உத்தவன் அவனுக்கு பதிலளிக்கும் விதமாகத் தன் கரங்களை நீட்டி அவனை ஆறுதல் படுத்த விரும்பினான்.  தன் கரங்களை நீட்டவும் செய்தான்.  அந்தப் பையனின் முகம் சகிக்க முடியாததொரு விகாரத்தை அடைந்தாலும், அது புன்முறுவல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  அவன் தன்னுடைய மொழியில் ஏதோ சொன்னான்.  அது உத்தவன் காதுகளில் “பீமன்” என்பது போல் அரைகுறையாக விழுந்தது. 

ஆசாரியர் முகம் புன்சிரிப்பால் விகசித்தது.  “உத்தவா, நீ அரசன் பீமனின் சகோதரனா? என்று கேட்கிறான் இவன்” என்றார் ஆசாரியர். இப்படி ஒன்றை எதிர்பாரா உத்தவன் திடுக்கிட்டுத் திகைத்துப் போய்விட்டான். என்ன சொல்வது என்பதே அவனுக்குப் புரியவில்லை.  ஆனால் ஆசாரியர் அங்கே நிதானத்துடனும், தக்க சமயத்தில் தக்க வார்த்தைகளைப் பேசும் தெளிவும் பெற்றவராக இருந்தது அனைவருக்கும் கை கொடுத்தது.  அந்தச் சிறுவனைப் பார்த்து ஆசாரியர், “உனக்கு பீமனைத் தெரியுமா?” என்று கேட்டார்.  அந்தப் பையன் மிகவும் தெளிவாகவும், அதைவிடவும் மரியாதை நன்கு தெரியும்படியும் மீண்டும் ஒருமுறை, “பீமன்” என்று சொல்லிவிட்டுத் தன் தலையையும் ஆட்டினான். “மகனே, பீமன் எப்படி இருப்பான்? சொல் பார்க்கலாம்! மிக மிக உயரமாகவும், மிகமிக அதிக பலத்தோடும், கை, கால்கள் இரண்டும் வலிமையுடனும், தோள்களிலும், புஜங்களிலும் அதிகமான சதைப்பற்றோடும் காணப்படுவானா?” வியாசர் அவனைக் கேட்டார்.  அந்தச் சிறுவனுக்கு வியாசர் பேசியதில் பாதிக்கும் மேல்புரிந்தது என்பது அடுத்து அவன் ஆமோதித்துச் செய்த சைகைகளிலும், அவன் முகத்து சந்தோஷத்திலும், பீமன் எப்படி இருப்பான் என்பதைத் தன் சைகைகளால் அவன் அபிநயித்துக் காட்டியதிலும் இருந்து தெரிந்து விட்டது. 

இப்போது உத்தவன் அவனைப் பார்த்து, “என்னைப் போல் வெளுத்த நிறமுடையவனா?” என்று தன் தோலைக்காட்டிக் கேட்டான்.  அந்தப் பையன் புன்னகையுடன் தலையை ஆட்டினான். வியாசர், “அங்கே ஐந்து பீமர்கள் இருக்கின்றனரா?” என்று கேட்டுவிட்டுத் தன் விரல்களாலும் ஒன்று, இரண்டு என எண்ணிக் காட்டிக் கேட்டார்.  இதற்கும் அந்தப் பையன் ஆமோதித்துத் தலையை ஆட்டினான்.  உத்தவன், “நான் பீமனின் சகோதரன்!” என்றான் அவனிடம். அந்தப் பையனை ஆறுதலுடன் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.  வியாசரும் உத்தவன் சொன்னதை ஆமோதித்தார்.  அந்தப் பையன் தன் தலையை ஆட்டினாலும் உள்ளூர எரிச்சல் பட்டான் என்பது தெரிந்தது.  “பீமனிடம் போக வேண்டுமா உனக்கு?” என்று கேட்ட உத்தவன் அதை அவனுக்குப் புரியுமாறு சைகைகளாலும் சொன்னான்.  அவனுக்குப் புரிந்தது.  அவன் முகம் மலர்ந்தது. அவன் தன் தலையை வெகு வேகமாக ஆட்டியதோடு அல்லாமல், பீமன் மிகப் பெரியவன் என்பதை மீண்டும் தன் சைகைகளால் அபிநயித்துக் காட்டினான். அதோடு தன் கட்டை விரலை மடக்கிய வண்ணம் மீதம் நான்கு விரல்களைக் காட்டி, மற்ற நான்கு பீமர்களும் மிகவும் சிறியவர்கள் என்பதையும் வேடிக்கையாகச் சொல்லிச் சிரித்தான்.  வியாசர் மனம் விட்டுச் சிரித்தார். யுதிஷ்டிரன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரையும் இந்த ராக்ஷசன் எப்படி வர்ணிக்கிறான் என நினைத்துச் சிரித்தபடியே, “பெரிய பீமன் எங்கே இருக்கிறான்?” என்று வினவினார்.  “அங்கே, அங்கே!” என்று தனக்குத் தென் பக்கமாகக் கைகளால் சுட்டிக் காட்டினான் அந்த ராக்ஷசன்.  “ஓஹோ, அங்கேயா?”என்ற வியாசரிடம் உத்தவன், “ஆசாரியரே, இந்தப்பையன் என்னுடனே இருக்கட்டும்.  இவன் உடல் நலமும் காலும் சரியாகும் வரை இவனை நான் நன்றாய்க் கவனித்துக் கொள்கிறேன்.” என்றான்.




1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...