Wednesday, October 31, 2012

சத்யவதியின் வேண்டுகோள்



கிருஷ்ணன் வியப்பின் உச்சத்துக்கே சென்றான் என்றால் அது மிகையில்லை.  பின்னர் எப்படி அவர்களுக்கு ஈமக்கிரியைகள் நடந்தன?  சத்யவதி மீண்டும் அறையைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.  மிகக் கவனமாகத் தன் எதிரே அமர்ந்திருக்கும் விதுரரையும், கண்ணனையும் தவிர அங்கு வேறும் எவரும் இல்லை என்பதையும் நிச்சயம் செய்துகொண்டாள்.  பின்னர் ரகசியம் பேசும் குரலில், “வாசுதேவா, அவர்கள் தப்பி விட்டனர்.  எரியும் மாளிகையிலிருந்து தப்பிவிட்டார்கள்.” என்றாள்.  “தப்பி விட்டார்களா?” கண்ணனால் இன்னமும் நம்ப முடியவில்லை.  “ஆனால்…..ஆனால்……. தாயே, அவர்கள் உடலும், குந்தி அத்தையின் உடலும் எரியூட்டப்பட்டு ஈமக்கிரியைகள் நடந்தனவே!”  சத்யவதி கண்ணனை அடக்கினாள்.  “உஷ் ஷ் ஷ் ஷ் ஷ்ஷ் ஷ்ஷ்” பின்னர் அதே மெதுவான குரலில்,”விதுரனின் ஆட்கள் தோண்டிக் கொடுத்த சுரங்கப்பாதையின் மூலம் அவர்கள் தப்பி விட்டனர்.”  என்றாள்.

“ஆனால் தாயே, உயிரிழந்த உடல்கள்?”
“அவை குந்தியும் பாண்டவர்களும் அல்ல.” சத்யவதி மேலே தொடர்ந்தாள். “ அப்படி செத்த உடல்கள் கிடைக்கவில்லை எனில் துரியோதனனும், சகுனியும் அவர்கள் தப்பியதை அறிந்திருப்பார்கள்.  பின்னர் எப்படியோ அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தையும் கண்டு பிடித்துத் தொல்லை அளிப்பார்கள்.  மீண்டும் கொலை முயற்சி நடக்கும்.  நிறுத்த மாட்டார்கள்.” 

“அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”
“விதுரன் அவர்களுக்காக ஒரு படகைத் தயார் நிலையில் வைத்திருந்தான்.  அதில் ஏறி கங்கையைக் கடந்து செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தான்.  ஆனால் கங்கையைக் கடந்ததும், அவர்கள் காட்டிற்குள் மறைந்துவிட்டனர்.”

“”அவர்கள் எங்கே எனக் கண்டுபிடிக்க முடியவில்லையா?”
“அதான் எங்களுடைய பிரச்னையே!” என்றாள் சத்யவதி. “எங்களால் இந்த ஹஸ்தினாபுரத்தில் எவரையும் நம்ப முடியவில்லை.  பின்னர் யாரிடம் சொல்லி அவர்களைக் கண்டுபிடிக்கச் சொல்வது?  அப்படிச் செய்தாய் எவரேனும் துரியோதனனிடமோ, சகுனியிடமோ அவர்கள் இருப்பிடத்தைச் சொல்வார்கள்.  பின்னர் என்ன நடக்கும்?  மீண்டும் மனித வேட்டை தான்! கண்ணா, இதற்குத் தான் நான் உன் உதவியை நாடுகிறேன் குழந்தாய்.  நீ எவ்வாறேனும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து பத்திரமாகவும் செளகரியமாகவும் இருக்கிறார்களா என்பதையும் பார்த்துச் சொல்ல வேண்டும்.  உன்னை யாரும் சந்தேகப் படமாட்டார்கள் என எண்ணுகிறேன்.”

“அதோடு அவர்கள் மறைந்திருக்கும் காடும் நாகர்கள் வசிக்கும், அவர்கள் ஆளும் பகுதியாகும்.  உன்னால் அங்கே சுலபமாய்த் தேட முடியும்.  உன் தாய்வழிப் பாட்டன் ஆன ஆர்யகன் நாகர்களில் தலைவன் உன்னிடம் அன்புள்ளவன்.  உனக்கு உதவிகள் செய்வான் என நம்புகிறேன்.  ஆனால் அவனை முழுதும் நம்பி நம் ரகசியத்தை, பாண்டவர்கள் பற்றிய செய்தியைச் சொல்ல முடியாது.  எவரை நம்புவது என்பது புரியவில்லை.  சகுனி அவர்களையும் விலைக்கு வாங்கினாலும் வாங்கிவிடுவான்.  நீ மட்டும் அவர்களைக் கண்டு பிடித்துவிட்டால், உன்னோடு துவாரகைக்கு அழைத்துச் செல்.  எவருக்கும் தெரியவே வேண்டாம்.”

“மாட்சிமை பொருந்திய ராணி அம்மா, உங்கள் கட்டளைகள் ஏற்கப் பட்டன. அவற்றைத் துளியும் பிசகாமல் நிறைவேற்றுவேன். பாண்டவர்கள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப் படும். “இதைச் சொல்கையில் உள்ளூர எழுந்த திருப்தியிலும், சந்தோஷத்திலும் ஏற்கெனவே மலர்ந்திருக்கும் கண்ணனின் முகம் மேலும் மலர்ந்து பிரகாசித்தது. 
“குழந்தாய், நீ செல்லும் பாதையில் வெற்றியே அடைவாயாக!”  கண்ணனை ஆசீர்வதித்த சத்யவதியின் குரலில் பூரண திருப்தியும், இனம் காணா அமைதியும் நிறைந்திருந்தது.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்ணன் இருக்கையில் அனைத்தும் சுபம்... தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

கண்ணன் அறியாததையா சத்தியவதி சொல்கிறார்?