Wednesday, July 18, 2012

துரியோதனனின் கொதிப்பு!


“நான் என்ன பாவம் செய்தேன்?  ஏன் என்னைக் கண்டால் ஒருவருக்குமே பிடிக்கவில்லை?  யுதிஷ்டிரனை அனைவரும் கொண்டாடுவதோடு அவனை வழிபடவும் செய்கிறார்கள்.  “தர்மத்தின் தேவதை”யாமே அவன்! ஹூம்!  என்னைக் கண்டால் தான் யாருக்கும் பிடிக்கவில்லை.  அவ்வளவு ஏன்?  என் அருமைத் தந்தை கூட என்னை மகா இடைஞ்சலாகவே நினைக்கிறார்.  என்னை தொந்திரவாகக் கருதுகிறார்.   மாமா..மாமா.  உங்களுக்கும் கூட நான் இடைஞ்சலாகவும், தொந்திரவாகவும் இருக்கிறேன் இல்லையா?  ஆஹா, இவ்வுலகில் அரசகுமாரனாய்ப் பிறந்தும் என்னை விரும்புவார் இல்லையே?  என் தாய் ஒருத்தியைத் தவிர என் மேல் அன்பு செலுத்துவார் இல்லையே? ஏன் இப்போது நான் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக ஆக ஒரு வாய்ப்புக் கொடுக்கக் கூடாதா?  நான் எப்போது சக்கரவர்த்தியாக ஆவேன்?  எனக்கு அதற்கான தகுதிகள் இல்லையா?”  துரியோதனன் விண்ணைப் பார்த்த வண்ணம் புலம்பினான்.

“துரியோதனா, பொறுமை..பொறுமை.  விரைவில் நீ பொறுமை இழந்துவிடுகிறாய்.  நான் உனக்கு உதவினேன் எனில் நீ இந்த சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாக அரியணையில் அமரலாம்.  உடனே இல்லாவிட்டாலும், சிலநாட்களில் அல்லது மாதங்களில்.”  சகுனி துரியோதனனைச் சமாதானம் செய்யும் குரலில் கூறினான்.

“மாமா, என்னை மன்னியுங்கள்.  எனக்கு உதவக்கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டுமே என்பதை நன்கறிவேன்.  ஆனால், ஆனால்……மாமா, நான் எவ்வளவு எளிதில் மன்னனாக ஆகி இருக்க முடியும்?  ஏன் கடவுள் அந்த வழியை எனக்குக் கிடைக்கவிடாமல் பாதையை மூடிவிட்டார்!  பார்க்கப் போனால் இந்த அஸ்தினாபுரத்தின் உண்மையான வாரிசு நானல்லவோ!”

“ஓஹோ, துரியோதனா, அமைதியாய் இரு.  இப்போது இதை நீ சொல்ல வேண்டிய அவசியம் எல்லாம் ஏதும் இல்லை.  உன் எதிரிகள் அடியோடு ஒழிந்தார்கள் அல்லவோ!”  கர்ணன் சமாதானம் செய்தான்.

ஆனால் துரியோதனனுக்கு மனம் அமைதி அடையவில்லை.  கண்ணன் ஹஸ்தினாபுரம் வருவது அவனுக்குக்கொஞ்சமும் பிடிக்கவில்லை.  அவன் மனதில் அதே உறுத்திக் கொண்டிருந்தது.  அந்தக் கசப்புடனும், வெறுப்புடனும் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்: “ஆம், அந்தக் கண்ணன் வருகிறான்.  ஹஸ்தினாபுரத்துக்கு அழையா விருந்தாளியாக வருகிறான்.  காரணம் என்னவோ துக்கம் விசாரிப்பது என்ற சாக்கு.  ஆனால் அவன் வந்ததும் இனிமையான சொற்களால் அந்தக் கிழவன் பீஷ்மனை மயக்குவான்.  பீஷ்மனும் அவனைக் கண்டதுமே பல்லை இளித்துக்கொண்டு , “கண்ணா, வாசுதேவா, கிருஷ்ணா!” என்றெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு அவனுடன் பேசுவான்.  தன்னை விட பக்தியிலும் புனிதத்திலும் சிறந்தவன் இல்லை என்று சொல்லிக் கொண்டு மோசடிகள் செய்யும் அந்தச் சித்தப்பா விதுரன், கண்ணன் கால்களிலே விழுந்து தன் மூட பக்தியைக் காட்டிக்கொள்வான்.  அவன் மனதில் என்னவெல்லாம் நினைக்கிறான் என்பதை அந்தக் கண்ணனிடம் பகிர்ந்து கொள்வான்.  அதோடு மட்டுமா?  அவனுக்குத் தெரிந்த விஷயங்களையும், யூகங்களையும் கூறுவான்.  அவற்றில் பாண்டவர்களை வாரணாவதத்துக்கு அனுப்பி வைத்ததும் சேரும்.  அவ்வளவு தான்.  அந்தப் பொல்லாத கண்ணன் கண்டு பிடித்துவிடுவான்.  அந்த மாட்டிடையனுக்கு மட்டும் உண்மை தெரிந்தால் என்ன செய்வானோ?  பாண்டவர்களை நாம் வலுக்கட்டாயமாக அவர்களைக் கொல்ல வேண்டியே வாரணாவதம் அனுப்பி வைத்தோம் என்பதை மட்டும் அவன் உணர்ந்தால்!!  கடவுளே!  வேறு வினையே வேண்டாம்.  பின்னர் இந்த உலகுக்கே அந்தக் கண்ணன் மூலம் தெரிந்து விடும்.   அதர்மம் நடந்துவிட்டது எனக் கூப்பாடு போடுவான்.  அவன் குரலை இந்த ஆர்ய வர்த்தத்தின் அரசர்களும், மக்களும் எதிரொலிப்பார்கள்.  உடனே எல்லாரும் பொல்லாத அந்த துரியோதனன் தான் இதை நடத்தி இருக்கிறான் என்று கூறுவார்கள்.  அனைவருக்கும் உண்மை தெரிந்துவிடும்;  அது இருக்கட்டும். இந்தக் கண்ணன் அவன் மாமன் கம்சனைக் கொன்றானே! ஏன் ஒருவருமே அதைக் குறித்து எதுவும் பேசுவதில்லை?  அது என்ன நியாயம்?”  துரியோதனன் கேட்டான்.

“ஹா,ஹா, ஹா, துரியோதனா, கண்ணனின் காலடிகளைத் தொடர்ந்து அவன் சென்ற பாதையிலேயே நீயும் செல்ல விரும்பினால், முதலில் என்னைக் கொன்றுவிடு.  இதோ நான் உன்னருகே இருக்கிறேன்.  நான் உன் தாய்மாமன்.  எங்கள் குலத்தில் பிழைத்திருக்கும் ஒரே நபர் நான் தான்.”  என்றான் சகுனி சிரித்துக்கொண்டே.

“மாமா, நான் என்ன கேலிக்குரியவனாகி விட்டேனா உங்களுக்கு?  என்னைக் கிண்டல் செய்யாதீர்கள் மாமா.  நான் ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக ஆகிவிடுவேன் தான்!  ஆனால் எப்போது?  என்று?  கடவுளே, மஹாதேவா! என் தந்தைக்கு வயது என்னமோ ஆகிவிட்டது தான்.  ஆனால் அவர் அதற்காக உடனே இறந்துவிடும் நிலையில் இல்லை.  இன்னும் பல்லாண்டுகள் உயிர் வாழ்வார்.  அந்தத் தாத்தா பீஷ்மரோ என்றோ இறந்திருக்கவேண்டும்;  இத்தனை வருடங்கள் ஆகியும் உயிரை வைத்திருக்கிறார்.  அதே போலத் தான் அந்த வேத வியாசனும்.  நான் பார்த்ததில் இருந்து அவன் கிழவனாகவே இருக்கிறான்.  ஆனால் அதற்காகத் தொண்டு கிழமாகவெல்லாம் ஆகவில்லை.  அவனும் சாகக் காணோம்.  நான் தான் அதற்குள் வயதாகிக் கிழவனாகி இறந்தாலும் இறந்துவிடுவேன்;  இந்தத் தாத்தாக்கள் எல்லாம் இளைஞர்களாக ஆகிக் கொண்டிருக்கின்றனர்.”  கசப்புடன் கூறினான் துரியோதனன். 

“இம்மாதிரி உணர்ச்சி வசப்பட்டாயானால் உனக்கு வயதாகும் முன்னரே இறந்து தான் போவாய், துரியோதனா!” எச்சரிக்கைக் குரலில் கூறினான் சகுனி.

“என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்;  என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். அதற்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்.  என் வழியில் எவர் வந்தாலும் தூக்கிப் போட்டு மிதியாடுவேன்.  நான் இறந்தாலும் சரி, அதற்குள்ளாக என் நோக்கத்துக்குக் குறுக்கே வருபவர்களை விட்டு வைக்கப் போவதில்லை.  அது எவராக இருந்தாலும் சரி.  என்னை மீறி என்னை விலக்கி விட்டு அரசாட்சி புரிபவர்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.  சும்மா இரு.  எந்த வம்புக்கும் போகாதே. அது தான் தர்மம், நீதி, நியாயம், நேர்மை என சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் அவர்கள் சொல்வதைக் கேட்கப் போவதில்லை.  எனக்கு உரியதை அடையவிடாமல் தடுப்பவர்களைச் சும்மா விட மாட்டேன்.  சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது என் தர்மம் அல்ல.”  என்றான் துரியோதனன் திட்டவட்டமாக.  இதைச் சொல்கையில் அவன் முகம் பயங்கரமாகக் காணப்பட்டது.