Thursday, July 5, 2012

சகுனியின் பூர்வோத்திரமும், அவன் எடுத்த பழியும்! 1

அப்பாதுரை சகுனி பற்றிய பூர்வீகத் தகவல்கள் குறித்துக் கேட்டிருந்தார்.  இரு விதங்களில் சகுனி பழி தீர்த்துக் கொண்டது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவற்றில் வாரிசுகள் பற்றிய விபரங்கள் அடங்கிய இந்தப் பகுதியை முதலில் பகிர்ந்து கொள்கிறேன்.



சகுனியைப் பற்றித் தெரிந்து கொள்ள முதலில் அவனுடைய பூர்வோத்திரத்துக்குப் போக வேண்டும்.  மஹாபாரத காலத்துக்கு வெகு காலம் முன்னால் புராணகாலம் எனச் சொல்லப்பட்ட காலத்திலே யயாதி என்னும் அரசன் ஆண்டு வந்தான்.  பாண்டவர்களும், கெளரவர்களும் யயாதியின் வழித் தோன்றல்களே.  அது எங்கனம் எனப் பார்ப்போம்.  யயாதியின் ஆட்சிக் காலத்தில் ஓர் நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்று இருந்தான்.  அங்கே ஓர் கிணற்றில் இருந்து தாகத்துக்கு நீர் எடுக்க வேண்டி அவன் சென்றபோது அந்தக் கிணற்றில் அழகிய இளம்பெண் ஒருத்தி விழுந்திருந்ததைக் கண்டான்.  அந்தப்  பெண்ணைக் காப்பாற்ற வேண்டி செய்வது என்ன எனத் தெரியாமல் யயாதி தன் வலைக்கையை நீட்ட அந்தக் கையைப் பற்றிய வண்ணம் அந்தப் பெண் கிணற்றில் இருந்து மெல்ல மெல்ல மேலே ஏறி வந்தாள்.  வந்தவள் தன்னைக் காப்பாற்றியது ஓர் சக்கரவர்த்தி என்றும், அவன் இளமையையும், அழகையும் கண்டதும். அவன் மேல் அவளுக்குக் காதலும் மேலிட்டது.  தன் வலக்கையைப் பற்றிக் கொண்டு யயாதி அவளை மேலே இழுத்ததால், தனக்கும் அவனுக்கும் கந்தர்வ முறைப்படி திருமணம் நடந்துவிட்டதாகவும், தன்னை ஏற்கும்படியும் அவள் அவனிடம் வேண்டினாள். ஆனால் மன்னனோ மறுத்தான். அவள் யாரெனத் தெரியாமல் அவளை மணக்க இயலாது என்பதோடு, அவள் பெற்றோரின் சம்மதமும் வேண்டும் என்றும் கூறிவிட்டான்.  மன்னன் தன் வழி செல்ல, கிணற்றில் இருந்து வந்த பெண்ணான தேவயானி தன் தந்தையான சுக்ராச்சாரியாரைத் தேடிச் சென்றாள்.


ஆம் அசுரகுருவான சுக்ராசாரியாரின் ஒரே மகளான தேவயானி தான் அவள்.  சுக்ராசாரியாரிடம் சஞ்சீவனி மந்திரம் கற்க வந்திருந்த கசன் என்னும்  பிருஹஸ்பதி குமாரனிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தாள்.  ஆனால் அவனோ அவளைத் தன் உடன் பிறந்தவளாக நினைப்பதாகக் கூறிவிட்டான்.  குருவின் மகள் சகோதரிக்குச் சமானம் என்பதால் அவளை மணக்க இயலாது எனக் கூறிவிட்டான்.  தேவயானி அவனை மேலும் மேலும் வற்புறுத்தினாள்.  கசன் தொடர்ந்து மறுக்கவே, அவன் கற்ற வித்தையை அவன் பயன்படுத்த இயலாது என சாபம் கொடுத்தாள்.  கசனோ அதனால் பரவாயில்லை என்றும், தான் வித்தையைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், கற்றுக் கொடுக்கப் போவதாகவும் கூறிவிட்டு பதிலுக்கு தேவயானியும் பிராமணர் எவரையும் மணக்க இயலாது என சாபம் கொடுத்துவிடுகிறான்.  ஆகவே இப்போது யயாதி மன்னனைப் பார்த்ததுமே தேவயானிக்குத் தனக்கேற்ற மணாளன் இவனே எனத் தோன்றுகிறது.


சுக்ராசாரியாரோ அசுர குலத்து விருஷபர்வா என்னும் மன்னனின் ஆதரவில் வசித்து வந்தார்.  அவனுக்கு ஒரே மகள் சர்மிஷ்டை என்னும் பெயரில் இருந்தாள்.  தேவயானியும் அவளும் நல்ல தோழிகளாகப்பழகி வந்ததோடு ஆடல், பாடல்களிலும் ஈடுபட்டிருந்தனர்.  அப்படி ஒருநாள் சென்றிருந்தபோது தான் சர்மிஷ்டை தேவயானியைக் கிணற்றில் தள்ளிவிட்டாள்.  மேலும் அவள் தந்தை சுக்ராசாரியார் தன் தந்தையிடம் ஊழியம் செய்பவர் தானே எனக் கேட்டு விட்டாள்.  இதனால் எல்லாமும் தேவயானி அவமானம் அடைந்திருந்தாள்.  யயாதியை அவள் சந்தித்தது அப்போது தான்.  இதெல்லாமும் சேர்ந்து யயாதியையே அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளைத் தூண்டியது.  தன் தகப்பனிடம் சர்மிஷ்டை தனக்குச் செய்த அவமானத்தைக் கூறுகிறாள் தேவயானி.  சுக்ராசாரியார் கோபத்துடன் விருஷபர்வாவிடம் சென்று இதற்குப் பரிகாரம் கேட்கிறார்.  அவரே பரிகாரத்தைக் கூறும்படி விருஷபர்வா கூற, மன்னன் மகள் என்ற கர்வத்தில் தன் மகளை அலக்ஷியம் செய்த சர்மிஷ்டை  தன் மகளுக்கு தாசியாக இருக்க வேண்டும்; அவள் திருமணம் செய்து கொடுக்கையில் அவளோடு கூடச் சென்று பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் சுக்ராசாரியார்.


குருவின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத வ்ருஷபர்வா தன் மகளிடம் எல்லாவற்றையும் எடுத்துக்கூறித் தனக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் சர்மிஷ்டை செய்ய வேண்டிய தியாகத்தைக் கூறுகிறான்.  சர்மிஷ்டையும் தகப்பனுக்காக ஒத்துக்கொண்டு தேவயானியின் பணிப்பெண் ஆகிறாள்.  சுக்ராசாரியார் அடுத்து யயாதி மன்னனிடம் சென்று அழகும், இளமையும், வித்தையும் பொருந்திய தன் மகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறார்.  அவள் பிராமணப் பெண் என்பதாலேயே தான் மறுத்ததாகவும் சுக்ராசாரியார் மனமுவந்து கொடுத்தால் ஏற்பதாகவும் யயாதி கூறி தேவயானியை மணந்து கொள்கிறான்.  தேவயானிக்கு யயாதியை விடவும் அவன் வகித்த அரசபதவியும், தான் பட்டமஹிஷி என்பதுமே முக்கியமாய்ப் பட்டது.  அவளோடு சீர் வரிசைகளில் சர்மிஷ்டையும் சேர்ந்தே வந்தாள்.  அவளைக் கொடுக்கையில் சுக்ராசாரியார் யயாதியிடம் அவளைக் குறித்துக் கூறி அவளை தேவயானியின் தாசியாகவே நடத்த வேண்டும் என்று வாக்குறுதி பெற்றிருந்தார்.  ஆனால் சர்மிஷ்டையோ, தேவயானியுடன் நட்போடு இருந்த காலகட்டத்திலேயே ஓர் நாள் நந்தவனம் ஒன்றில் யயாதியைக் கண்டு அவனிடம் ஒருதலைக்காதல் கொண்டிருந்தாள்.  தேவயானி அவனையே மணந்ததும், தான் அங்கேயே பணிப்பெண்ணாகச் சீர் வரிசைகளோடு வந்ததும், அவள் எப்படியேனும் யயாதியின் உள்ளத்தைக் கவர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாள்.  இதற்குள்ளாக தேவயானிக்கு இரு ஆண்மக்கள் பிறந்தனர்.  ஒருவன் பெயர் யது;  இன்னொருவன் பெயர்  துர்வசு.


அவள் இருந்த அசோக வாடிகா வழியே ஒருநாள் தற்செயலாகச் சென்ற யயாதி அங்கே பெண் துறவி போல் அமர்ந்திருந்த சர்மிஷ்டையையும், அவள் அழகையும் கண்டான்.  அங்கேயே சற்று நேரம் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.  சர்மிஷ்டையும் அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து அவனை வரவேற்றாள்.  தங்கள் கதையை அவனிடம் கூறினாள்.  தான் வ்ருஷபர்வாவின் மகள் எனவும், அவனைக் கண்ட முதலே காதலித்து வருவதாகவும் கூற தேவயானியின் அலக்ஷிய சுபாவத்தால் மனம் நொந்திருந்த யயாதி அவளுடைய அன்பில் மயங்கினான்.  அவளைக் காந்தர்வ விவாஹம் செய்து கொண்டான்.  அவளுடனும் குடும்பம் நடத்தினான்.  அவளுக்கும் பிள்ளைகள் பிறந்தன.  அவர்கள்,   த்ருஹ்யூ, அநு, புரு ஆகியோர்.   இந்த விஷயம் தேவயானிக்குத் தெரிய வருகிறது.  கோபம் கொண்ட அவள் தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள்.



No comments: