Thursday, June 28, 2012

கண்ணன் கிளம்பி விட்டான்.


தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் கண்ணன் தொடர்ந்தான். “நம்முடைய திட்டங்கள் அனைத்தும் தவறாகப் போய்விட்டன.  எதுவும் சரியாக நடைபெறவில்லை.  பாண்டவர்களை நாடு கடத்தியது குறித்த தகவல் எனக்கு எட்டியதுமே ஹஸ்தினாபுரம் சென்று பீஷ்மரை பார்த்து இது குறித்துப் பேச விரும்பினேன்.  இவர்கள் தாயாதிச் சண்டைக்கு ஒரு முடிவு கட்டவும் விரும்பினேன்.  வேறு சில எண்ணங்களும், திட்டங்களும் கூட இருந்தன.  ஆனால்????ஆனால்??? இப்போதோ?? பாண்டவர்களே உயிருடன் இல்லை.”  கண்ணன் குரலின் ஆழ்ந்த வருத்ததைப் புரிந்து கொண்ட மற்றவர் அனைவரும் அவனுடைய வருத்தத்தையும், துயரத்தையும் பங்கு போட்டுக் கொள்ளும் விதம் அமைதி காத்தனர். 

“””ம்ம்ம்ம்…கடைசிவரை நீ அவர்களோடு இருந்து ஆறுதல் சொல்லி இருக்கலாமோ உத்தவா?  நீ அவர்களோடு கடைசி வரை இல்லை; விரைவில் கிளம்பி விட்டாய்!” என்றான் கண்ணன். 

கண்ணன் குரலில் குற்றம் சாட்டும் தொனி சிறிது கூட இல்லை எனினும், அவன் முகமும் உத்தவனிடம் இணக்கமாகவே காணப்பட்டது எனினும் உத்தவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  வாரணாவதத்தில் அவர்களுக்கு ஆபத்து காத்திருக்கும் செய்தி உத்தவன் நன்கு அறிவான்.  ஆபத்துச் சமயத்தில் அவர்களைத் தன்னந்தனியே விட்டு விட்டு அவன் கிளம்பி வந்துவிட்டானே! என்ன சுயநலக்காரனாக இருந்திருக்கிறேன் நான்! இதை நினைத்த உத்தவனுக்குக் கண்ணீர் ததும்பியது. நெஞ்சம் விம்மியது.  அவன் முகமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியது. 

கிருஷ்ணன் அவனையே அன்புடனும், ஆறுதல் சொல்லும் விதமாகவும் கவனித்துக் கொண்டிருந்தான்.  உத்தவன் செய்த தவறை உணர்ந்துவிட்டான் என்பதையும் கிருஷ்ணன் புரிந்து கொண்டான்.  அவன் மனதை அப்படியே படித்தவன் போல, “நீ அங்கேயே இருந்திருக்க வேண்டும், உத்தவா!” என்றான் மென்மையாக.

“கிருஷ்ணா, கிருஷ்ணா, என்னைப் போன்ற முட்டாள்களும் இவ்வுலகில் இருப்பரோ?  நான் ஆபத்துச் சமயத்தில் அவர்களைத் தன்னந்தனியே விட்டு வந்துவிட்டேனே! என்னை விடச் சுயநலக்காரனும் உண்டோ?” என்று புலம்ப ஆரம்பித்தான்.

“நீ அங்கே அவர்களோடு இருந்திருக்க வேண்டும் உத்தவா!  அதைத் தான் நான் உன்னிடம் எதிர்பார்த்தேன்.  ஆனால் நீ அவர்களைத் தன்னந்தனியே விட்டு வந்துவிட்டாய்!  சரி, போகட்டும்; நடந்தது நடந்ததே!  அதை எவரால் மாற்ற இயலும்! நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்! பழசை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டாம்.” என்றான் கிருஷ்ணன். தன் நினைவுகளை மீண்டும் ஒன்று சேர்த்தவன் போல, “பாண்டவர்கள் இல்லாமல் குரு வம்சம் கெளரவர்களின் ஆட்சியில் கடுமையான நிகழ்வுகளைச் சந்திக்கும்.  அதுவும் அவர்களின் மாமன் காந்தார தேசத்து இளவரசன் சகுனியின் மேற்பார்வையில் அது நிச்சயம் தர்மத்தின் பாதையாக இருக்காது.  தர்மத்தை விட்டு விலகியே செல்வார்கள். பாண்டவர்கள் உயிருடன் இருந்தவரைக்கும் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.” என்றான்.

“இப்போது நாம் அடுத்துச் செய்யவேண்டியது என்ன கிருஷ்ணா?” உத்தவனும் மற்றவர்களும் கேட்க, கிருஷ்ணனும், அந்தக் கேள்வியையே திரும்பச் சொன்னான். “என்ன செய்ய வேண்டும்?” சற்று நேரம் மெளனமாகவே அமர்ந்திருந்தான் கிருஷ்ணன்.  சற்று நேரம் கழித்து அவன் நிமிர்ந்து பார்த்தபோது முன்னிருந்த குழப்பம் ஏதுமில்லாமல் அவன் முகம் அமைதியாகவும், முன்னைப் போல் புன்னகையுடனும் ஒளிர்ந்தது.  கிருஷ்ணன் ஏதோ முடிவு எடுத்திருக்கிறான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு அவன் பேசக் காத்திருந்தார்கள்.

“நான் இப்போது துக்கம் விசாரிக்கும் நிமித்தம் ஹஸ்தினாபுரம் செல்லப் போகிறேன்.  மரியாதைக்குரிய பீஷ்மரைச் சந்திக்கப் போகிறேன்.  அங்கேயே இருந்து கொண்டு ஐந்து சகோதரர்களையும் அழித்த விதம் எப்படி எனக் கண்டு பிடிக்கப் போகிறேன்.” என்ற கிருஷ்ணன் உத்தவனைப் பார்த்து, “நீ எவ்வழியில் வந்தாய்?” என வினவினான்.

No comments: