Tuesday, June 26, 2012

கண்ணன் யோசிக்கிறான்.


“ஆம், துரியோதனன் எப்பாடு பட்டாவது யுவராஜா பதவியைக் காத்துக்கொள்ளவே முயற்சிப்பான்.  நீ சொல்வது சரிதான்.  பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்ட தகவலை ஷ்வேதகேது எனக்கு ஏற்கெனவே தெரிவித்தான்.  அந்தச் சமயம் அவன் ஹஸ்தினாபுரத்தில் இருந்திருக்கிறான். ஆனால் நீ எப்படி அறிந்தாய்? பாண்டவர்கள் ஐவரும் இறந்த செய்தி உனக்கு எப்படிக் கிடைத்தது?”

“நான் உத்கோசகத்தில் இருக்கையில் செய்தி வந்தது.  வாரணாவதத்தில் அரசிளங்குமரர்கள் தங்கி இருந்த மாளிகையில் தீப்பற்றியதாகவும், கடுமையான அந்தத் தீ விபத்தில் ஐந்து அரசகுமாரர்களோடு சேர்ந்து அவர்கள் அன்னையும் எரிந்து சாம்பலாயினர் என்றும் பேசிக் கொண்டனர்.  உண்மை என்னவென அறிய வேண்டி நான் வாரணாவதத்துக்கே சென்றேன்.  அங்கே மாளிகை இருந்த இடம் முற்றிலும் சாம்பலாய்க் கிடந்தது.  வெறும் வெளியாகக் காட்சி அளித்தது.  மாளிகை இருந்ததற்கான சுவடே இல்லை.  நான் ஏற்கெனவே சந்தேகப்பட்ட மாதிரி எரியக் கூடிய ஏதோ ஒரு பொருளைக் கொண்டு அந்த மாளிகை கட்டப்பட்டிருக்க வேண்டும்.  புரோசனன் என்னும் அந்த வீரனும் அந்தத் தீ விபத்தில் எரிந்து சாம்பலாகிவிட்டான்.  பின்னர் ஐந்து சகோதரர்களின் மிச்சங்களும், அவர்கள் தாயின் மிச்சங்களும் அரச மரியாதையுடன் எரிக்கப்பட்டன. “

கண்ணன் யோசனையில் ஆழ்ந்தான். ஷ்வேதகேது, “பாண்டவர்களுக்குத் துளிக்கூட சந்தேகம் வரவில்லையா?  அப்படி வந்திருந்தால் சரியான சமயத்தில் தப்பிச் சென்றிருக்கலாமே?”
“ஓ, அவர்கள் எந்தவிதமான அவசரமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தனர்.  விதுரருக்கும் சந்தேகம் தான்.  சூழ்ச்சியும் சதியும் நடந்திருக்கிறது என ஊகித்திருந்தார். ஆகையால் சுரங்கம் தோண்டுவதில் வல்லவன் ஒருவனைக் கொண்டு புரோச்சனன் இல்லாத நேரத்தில் சுரங்கம் தோண்டும்படி கூறி இருந்தார்.  புரோச்சனன் தான் எப்போதுமே அங்கே காவல் இருந்திருக்கிறானே?  ஆகையால் அந்தச் சுரங்க வழி முழுமையானதா என்ன என்பது குறித்து நான் அறியேன்.  ஆனால் ஐந்து சகோதரர்களும் தப்பிச் சென்றிருக்க வழியே இல்லை.  இது நிச்சயம்.” என்றான் உத்தவன்.

“இது ஒரு மரண அடியாக நம்மிடையே விழுந்திருக்கிறது.  நிச்சயமாய் இப்படி ஒன்றை நாம் யாரும் எதிர்பார்க்கவே இல்லை.  ஐந்து சகோதரர்களையும் நாம் எவ்வளவு பாசத்தோடும், நேசத்தோடும் விரும்பினோம் என்பதும், அவர்களுக்கு நாமும், நமக்கு அவர்களும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தோம் என்பதையும் அனைவரும் அறிவோம்.  ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அத்தை குந்தி தேவியும் அவர்களுடனேயே இறந்ததுதான்.  ஏனெனில் அவளுக்கு ஐந்து பிள்ளைகளுமே உயிர் மூச்சாக இருந்து வந்தனர்.  பிள்ளைகள் இல்லாமல் அவளால் ஒரு நொடி கூட இருக்க முடியாது.  ஆனாலும் இத்தனை நல்லவர்கள் இறந்ததைச் சகிக்க முடியவில்லைதான்.”  கண்ணன் ஆழ்ந்த வருத்தத்துடன் பேசினான். 

“இப்போது நாம் என்ன செய்யவேண்டும்?” ஷ்வேதகேது கேட்டான்.

“துவாரகை திரும்ப வேண்டியது தான்.  கண்ணன் ஹஸ்தினாபுரத்துக்கு இப்போது செல்வது உசிதமாய்த் தோன்றவில்லை.  அதுவும் துரியோதனன் யுவராஜாவாகப் பட்டம் சூட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் செல்வது முற்றிலும் உசிதம் இல்லை.  அதோடு கூட தாத்தா பீஷ்மருக்கும் இப்போது முன்னத்தனை செல்வாக்கு குரு வம்சத்து வாரிசுகளிடம் இருப்பதாயும் தெரியவில்லை.  அவரையோ, அவரின் வார்த்தைகளையோ கெளரவர்கள் மதிப்பதே இல்லை.”

“உத்தவா, யோசனை செய்!  நாம் இப்போது துவாரகை திரும்புவது அத்தனை நல்லது என உனக்குத் தோன்றுகிறதா?” கண்ணன் மெதுவாய் யோசித்தவண்ணம் கேட்டான்.

No comments: