Saturday, December 3, 2011

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்!

சில நாட்களில் ஷாயிபா குண்டினாபுரம் வந்து சேர்ந்தாள். கூடவே ருத்ராசாரியாரும் வந்திருந்தார். இருவரும் பாட்டனார் கைசிகனின் விருந்ஹ்டாளியாக அவருடைய மாளிகையில் தங்கினார்கள். அவள் சகோதரனும் கரவீரபுரத்தின் தற்போதைய அரசனுமான ஷக்ரதேவன் சில நாட்கள் கழித்துச் சுயம்வரத்திற்கு வந்து சேருவதாய்ச் செய்தி அனுப்பி இருந்தான். கிருஷ்ணன் இறந்தான் என்ற செய்தியை ருக்மிணியின் வாயிலாய்க்கேட்ட ஷாயிபா துக்கம் தாங்க முடியாமல் மனம் உடைந்து போனாள். இருவருமே தங்கள் வாழ்க்கையில் உயிர் கொடுக்கும் ஒளி கொடுக்கும் ஒரு உயிர் மறைந்துவிட்டதை எண்ணி எண்ணி வருத்தம் அடைந்தனர். ஷாயிபா வந்து சேர்ந்ததுமே ருக்மிணிக்குக் கொஞ்சம் பலம் வந்துவிட்டாற்போலாயிற்று. பலராமன் வந்து அவளை மீட்டுச் செல்லப் போகும் செய்தியை அவள் ஏற்கெனவே அறிந்திருந்தாள். மேலும் உத்தவனும் கரவீரபுரத்திற்குச் சென்று ஷாயிபாவோடு கலந்து ஆலோசித்துப் புனர்தத்தனை பலராமனோடு சேர்ந்து கொள்ளச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தான். புனர்தத்தனும் ஒரு பெரும்படையோடு பலராமனோடு சேர்ந்து கொள்ளச் சென்று விட்டான். குண்டினாபுரத்துக்கும் மேற்குக்கடற்கரையின் சூரிய தீர்த்தத்துக்கும் நடுவே தப்தி நதிக்கரையை ஒட்டி அவர்கள் முகாமிட்டிருந்தனர்.

அங்கே சில கப்பல்கள் ருக்மிணியைக் கவர்ந்து வந்ததும் துவாரகைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகளோடு காத்திருந்ததையும் ஷாயிபா தெரிவித்தாள். எல்லாம் சரி. பலராமனோடு செல்வது சரியா? ருக்மிணி தன் மனதைத் திறந்து ஷாயிபாவிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டாள். ஒரு பெண்ணாலேயே இன்னொரு பெண்ணின் மனதை அறிய முடியும் என்பதற்கொப்ப்ப, ஷாயிபா ருக்மிணி சொல்வதன் உட்கருத்தைப் புரிந்து கொண்டாள். அவள் சொல்வதே சரியென முழு மனதோடு ஆமோதித்தாள். வேறுவழியில்லை என்பதையும் புரிந்து கொண்டாள். இதுவே கிருஷ்ணனால் அவள் கவர்ந்து செல்லப்பட்டு அவனோடு மணம் முடிக்கப்பட்டாளெனில் அது வேறு விஷயம். காலம் காலமாக மணமகள் விரும்பினால் அவளைத் தூக்கிச் சென்று மணம் புரிந்து கொள்வதை சாஸ்திரங்களும், நீதிகளும் ஆமோதிக்கிறது. அதைச் சரியெனச் சொல்கிறது. ஆனால் ஆனால், மணமகன் இறந்து போனபின்னால் அவனுடைய உறவினர்களுடன் ஓடிப் போவது என்பது! மஹாதேவா! ருக்மிணியைப் போன்ற ஒரு சாம்ராஜ்யத்தின் இளவரசி இப்படி நடந்தால் அது நிச்சயமாக மன்னிக்கவே முடியாத ஒரு குற்றமாகும். என்னதான் பலராமனும், மற்ற யாதவர்களும் கிருஷ்ணனின் தியாகத்தால் மனம் உடைந்து வருத்தம் அடைந்திருந்தாலும், திருமணமே ஆகாமல் இறந்தவன் ஒருவனின் நிச்சயிக்கப்பட்ட மணமகளாக அவர்கள் நடுவே வாழ்க்கை நடத்துவது என்பது ஒருக்காலும் இயலாத ஒன்று. ஷாயிபா தீர்மானமாகச் சொன்னாள்.

ஷாயிபாவோடு கலந்து ஆலோசித்து அவள் கருத்தையும் கேட்டுக்கொண்டதும், ருக்மிணிக்குத் தன்னைத் தானே மாய்த்துக்கொள்வதே சிறந்த வழி எனப் பட்டது. விரைவில் சித்திரை மாதமும் வந்தது. ஒவ்வொரு நாளும் கடந்தது. இப்போது ருக்மிக்குப் புதுப்பலம் வந்ததுபோல் அவன் எல்லாவிஷயங்களிலும் மூக்கை நுழைத்து சுயம்வரத்திற்கான ஏற்பாடுகளைக்கவனிக்க ஆரம்பித்தான். அவன் சந்தோஷம் அடைய முக்கியக்காரணங்கள் இரண்டு.
1. அவனுடைய எதிரியான கிருஷ்ணன் ஒரேயடியாக ஒழிந்து போய்விட்டான்.
2. எந்த மதுராவின் வீதிகளில் அவன் அவமானப்படுத்தப்பட்டானோ அந்த மதுராவும் எரிந்து சாம்பலாய்ப் பழங்கதையாய்ப் போனது.
யாதவர்களோ போன இடமே தெரியவில்லை. அவர்களுக்கு என அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்துவதாய்ச் சொல்லிக் கொண்டிருந்த கிருஷ்ணனோ உயிருடனேயே இல்லை. எல்லாவற்றையும் விட அவனை அதிசயத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அடையச் செய்த விஷயம் ருக்மிணியின் மனமாற்றம். அவள் இப்போது எதற்குமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அடங்கிவிட்டாள். இனி எதுவும் செய்யமுடியாது என்பதைப் புரிந்து கொண்டுவிட்டாள். சொல்லப் போனால் சுயம்வர நாளுக்காகக் காத்திருக்கிறாள் என்று அவளைக் கவனித்து வரும் சேடிகள் கூறுகின்றனர்.

தப்தி நதிக்கும், பூர்ணா நதிக்கும் இடைப்பட்ட நகரம் குண்டினாபுரம். இவை இரண்டுக்கும் இடையில் இருந்த ஒரு பெரிய மைதானத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த மாபெரும் பந்தலில் சுயம்வரத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. பந்தலின் ஒரு கோடி தப்தி நதியையும் இன்னொரு கோடி பூர்ணா நதியையும் தொட்டுக்கொண்டிருந்தது. ஆயிற்று! இதோ ஜராசந்தன் வந்துவிட்டான் போலிருக்கிறதே! ஆம், பீஷ்மகன் தக்க மரியாதைகளுடனும், மிகப் பணிவோடு வேறு எவரை வரவேற்கப் போகிறான். இப்போது அவனை எவராலும் அசைக்க முடியாது. அவனுக்குத் துணைக்கு என அணி சேர்ந்திருந்த மன்னர்களின் ஆலோசனைகள் எதுவுமே இப்போது அவனுக்குத் தேவையில்லை. அவனே எல்லாமுடிவுகளையும் எடுத்தான். சுயம்வரத்திற்கு மூன்றுநாட்கள் முன்னால் தாமகோஷன் தன்னுடைய மகன் சிசுபாலனோடு வந்து சேர்ந்தான். தாமகோஷன் மனதளவில் மட்டுமில்லாமல் உடலளவிலும் தளர்ந்து போயிருந்தான். மதுராவும் எரிக்கப்பட்டு அவன் அருமை மருமகனான கிருஷ்ணனும் கொல்லப்பட்ட செய்தி அவனை உள்ளமும், உடலும் உருகும்படிச் செய்திருந்தன. ஆனால் மாறாக சிசுபாலனோ முன்னிலும் பலம் வாய்ந்தவனாகக்காட்சி அளித்தான். சேதி நாட்டிலேயே அரசியல் விவகாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பங்கெடுத்துக்கொண்டு ஒரு மாபெரும் சக்தியாக மாறி இருந்தான். ருக்மிணி தனக்குத்தான் என சர்வ நிச்சயத்தோடு காத்திருந்தான்.


ஆசாரிய ஷ்வேதகேதுவோடு விந்தன் வந்திருந்தான். ஷ்வேதகேது வந்து சேர்ந்ததுமே ஷாயிபா மூலம் ருக்மிணியைத் தொடர்பு கொண்டான். பலராமன் அவனோடு தொடர்பில் எப்போதும் இருந்து வந்தான் ஆகவே அவ்வப்போது நடைபெறும் விஷயங்களை அவனோடு பகிர்ந்து கொண்டான் ஷ்வேதகேது. ஷாயிபாவும் ருக்மிணியும் ஷ்வேதகேதுவை முழுமனதோடு நம்பினார்கள். ருக்மிணியின் முடிவு சரிதான் என்றாலும் பலராமனையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை அவனால். திருமணத்திற்கான முன்னேற்பாடுகளும், கொண்டாட்டங்களும் மெல்ல மெல்ல ஆரம்பித்தன. எங்கு பார்த்தாலும் குதூகலம், கொண்டாட்டம், ஆட்டம், பாட்டம். விருந்துகள்.வேடிக்கை விளையாட்டுக்கள். அனைவர் மனமும் அதில் ஆழ்ந்து போக ஒரே ஒரு உயிர் மட்டும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. இவை எதிலும் மனம் ஒட்டாமல் பரிதவித்தது.

4 comments:

பித்தனின் வாக்கு said...

amma due to works and 17th year sabari malai yathirai i am not read your blog. Today i read all pending blogs. nice and good one. continue your stories.

how are you and ancle?.

priya.r said...

அத்தியாயம் 126 யை படிச்சாச்சு.

ருக்மணியின் துன்பத்தை,துயரத்தை காண சகிக்கவில்லை ;கண்ணன் உயிரோடு இருக்கிறான் என்று யாராவது ருக்மணிக்கு செய்தி தெரிவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

sambasivam6geetha said...

தொடர்ந்து படிப்பதற்கு நன்றி ப்ரியா.

sambasivam6geetha said...

வாங்க பித்தனின் வாக்கு. நலமாக இருக்கிறோம். இப்போ யு.எஸ்ஸில் இருக்கோம். வரவுக்கும் கனிவான விசாரிப்புக்கும் நன்றிங்க.