Sunday, October 16, 2011

கண்ணன் வந்தான், அங்கே கண்ணன் வந்தான்!

மதிப்பிற்குரிய ஆசாரியரே, ஏன் அவ்வாறு கூறுகின்றீர்?" உக்ரசேன மஹாராஜா கேட்டார்.. தளபதி கடனும் அதையே கேட்க கர்காசாரியார் தொடர்ந்தார்." கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாகக் கிருஷ்ணன் என்னிடம் கால யவனனைப் பற்றிக் கேட்டறிந்தான். அவனைக் குறித்த அனைத்துத் தகவல்களையும் கேட்டுக்கொண்டான். " இப்போது அரசனைப் பார்த்து கர்கர் மேலும் தொடர்ந்தார்:' மாட்சிமை பொருந்திய அரசே! உமக்கு நினைவில் இருக்கலாம். நான் பிரமசாரியாக இருக்கையில் கால யவனனின் தகப்பனின் வீரர்கள் என்னைத் தூக்கிச் சென்று அவர்கள் நாட்டில் இருக்கச் செய்தனர். வேறு வழியின்றி நானும் சில காலம் அங்கே வசிக்க நேரிட்டது. ஆனால் ஒரு விஷயம், கால யவனனைப் போல் அவன் தகப்பன் கொடூரக் கொலைகாரனாக இருக்கவில்லை; தன் இளவரசனுக்கு என் மூலம் பாடங்கள் கற்பிக்கவும், வித்தைகளில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்தான். அவன் இறந்ததும், அதிகாரம் காலயவனனின் தாய்மாமன் கைகளுக்கு வந்து சேர்ந்தது. நானும் ஒருவழியாகத் தப்பி மதுராவிற்குத் திரும்பினேன். காலயவனன் குறித்தும் அவன் என்னிடம் கல்வி கற்றதையும் கண்ணனிடம் நான் கூறியபோது, கண்ணன் என்ன கூறினான் தெரியுமா?" குருவே, உம்மிடம் பாடம் கற்றதின் மூலம் காலயவனன் எனக்கு குரு வழி சகோதரன் ஆகிறான். நீர் எப்படி எனக்குத் தந்தை ஸ்தானத்தில் இருந்து கல்வி கற்பித்தீர்களோ அவ்வாறே கால யவனனும் உம்மிடம் கற்றிருக்கிறான் ஆகவே அவனும் எனக்கு ஒரு சகோதரனே!' ஆனால் அப்போது எனக்குத் தோன்றவே இல்லை. கண்ணனுக்குக் கால யவனனைச் சந்திக்கும் நோக்கம் இருக்கும் என நினைக்கவே இல்லை. ஆனால் இப்போது அனைத்தையும் மீண்டும் யோசித்துப் பார்க்கையில் கால யவனனை நேரடியாகச் சந்திக்கும் திட்டத்தை ஒருக்கால் என்னிடம் சொல்ல வேண்டாம் என இருந்திருப்பான் எனத் தோன்றுகிறது."

"ஆனால், ஆனால், அந்தப் பிசாசு மனிதன் அவனைக் கிழித்துப் போட்டுவிடுவானே!. அந்தக் கூட்டமே மிருகக்கூட்டம். மனிதர்களே அல்ல." அந்தரிக்ஷன் என்பான் கூறினான். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பலராமன் ஆவேசத்தோடு எழுந்தான். "ஆசாரியரே, முன்னால் ஏன் என்னிடம் சொல்லவில்லை? கண்ணன் கால யவனனைச் சந்திக்கச் சென்றால் நானும் சென்றிருப்பேனே. இப்போது ஒன்றும் கெட்டுவிடவில்லை. நானும் செல்கிறேன். கண்ணன் எங்கே இருக்கிறானோ அங்கே நானும் இருப்பேன். உத்தவா, கிளம்பு சீக்கிரம், நேரத்தை வீணாக்காதே! இது வெட்டிப் பேச்சுப் பேசும் நேரமல்ல" பலராமன் கூறிக்கொண்டே தன் ஆயுதத்தைத் தோளில் சார்த்திக்கொண்டு உத்தவன் கைகளைப் பற்றி வேகமாய் இழுத்தான்.. "வா, உத்தவா, நம் இடம் கண்ணன் இருக்குமிடம் தான்.." பலராமனின் வேகத்தையும் ஆவேசத்தையும் கண்ட மற்றவர்கள் வியப்பின் உச்சியில் நிற்க சாத்யகி, தானும் வருவதாய்க் கூறி எழுந்தான். உக்ரசேனரோ, அனைவரையும் அமைதியாய் இருக்கச் சொல்லிக் கெஞ்சினார். கண்ணனைத் தன் உயிரைத் தியாகம் செய்யும் அளவுக்கு விடப் போவதில்லை எனவும், அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியாய்க் கூறினார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நாம் அனைவருமே உயிரைக் கொடுக்கலாம் என்றும் கூறினார். வசுதேவரும் அதை ஆமோதித்தார்.. நம் போன்ற வீரர்களுக்கு உகந்ததொரு விஷயம் தான் அது என்றும், ஆனால் சிலர் வேறு மாதிரி நினைக்கலாம் எனவும் கூறினார். கூட்டம் சாது, சாது என கோஷித்தது.

அனைவரும் கண்ணனுக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும்ல் கண்ணன் இருக்குமிடம் தேடி பலராமன் தலைமையில் உத்தவனையும், சாத்யகியையும் அனுப்பலாம் எனவும் கூறினார்கள். உக்ரசேனர் பலராமனிடம், :"பலராமா, கண்ணனிடம் கூறு. "கிருஷ்ணா, பாட்டனார் நீ திரும்பி வருவதையே எதிர்பார்க்கிறார். உன்னைத் தவிர, உன் தலைமையைத் தவிர வேறு எவரையும் யாதவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்." என்று தம் செய்தியைக் கொடுத்தார். கிருஷ்ணன் திரும்பி வரும் நாளை எதிர்நோக்கி மதுரா நகரமே காத்திருந்தது. ஒவ்வொரு நாள் செல்வதும் ஒரு யுகம்போல் இருந்தது. ஒவ்வொரு நிமிஷத்தையும் கொடிய தண்டனையாகக் கருதிக் கழித்தனர். ஒவ்வொருவர் மனதிலும் பலவிதமான எண்ணங்கள்! சிலர் நம்பிக்கையுடன் காத்திருப்பைத் தொடர்ந்தாலும் பெரும்பாலானவர்களுக்குக் கண்ணன் திரும்பவில்லை எனில் என்ன நடக்கும் என யோசிக்கவே முடியவில்லை. தேடியும் கண்ணன் கிடைக்கவில்லஈ எனில்? அல்லது கண்ணன் வர மறுத்தான் எனில்? ஒருவேளை ஷால்வனின் ராஜ்யத்திற்குள் நுழைந்ததுமே அவனைக் கொன்றிருந்தார்களெனில்? ஆஹா, அப்படி ஏதும் நடந்திருந்தால் கண்ணனை மீண்டும் காணவே முடியாதே! என்ன செய்வோம்? வயது முதிர்ந்தவர்களும், மற்றப் பெரியவர்களும் இப்படியான ஒரு குழப்பத்தில் தவிக்க இளைஞர்களோ பொறுமையின்றிக் கண்ணன் இருக்குமிடம் நோக்கிச் செல்லத் தவித்தனர். இந்த எதிர்பார்ப்பிலேயே ஒவ்வொரு பகலும் இரவும் மெல்ல மெல்லக் கழிந்தது. நான்கு நாட்கள் சென்றன. ஐந்தாம் நாள் காலை,


பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பாஞ்சஜன்யத்தின் ஒலி.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

உன்னைத் தவிர, உன் தலைமையைத் தவிர வேறு எவரையும் யாதவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்." என்று தம் செய்தியைக் கொடுத்தார்/

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பாஞ்சஜன்யத்தின் ஒலி

கண்ணனின் வெற்றிச் செய்தியை மகிழ்ச்சியாக அறிவிக்கிறதே.
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>.

priya.r said...

கதையின் ஓட்டத்தில் செல்லும் நாமும் கண்ணன் வருகையை எதிர்பார்த்து கொண்டே இருக்கிறோம்

பதிவுக்கு நன்றி கீதாமா