Sunday, April 17, 2011

ஷாயிபாவின் மனம், கண்ணன் வருவான் 2-ம் பாகம்!

அங்கிருந்து ஷ்வேதகேது சென்றதும், அந்த மேடையிலேயே அமர்ந்த ஷாயிபா சற்று நேரம் யோசித்தாள். அவள் பிறந்து வளர்ந்த கரவீரபுரத்தின் மலைப்பகுதிகளில் மக்கள் சுயநலத்தோடும், குறுகிய மனப்பான்மையோடுமே இருந்திருக்கின்றனர். ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள், அவற்றில் ஜெயிப்பவரே தலைவர் என்றிருந்த ஒரு உலகில் இருந்து இப்போது இங்கே அவள் காணும் உலகம் முற்றிலும் மாறுபட்டல்லவோ காண்கின்றது?? இங்கே மன்னனை மக்கள் உளமார்ந்த அன்போடு நேசிக்கின்றனர். அதோடு அரசர்களும் குடிமக்களைக் குறித்துக் கவலைப்படுகின்றனர். குடிமக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என நினைக்கின்றனர். குடிமக்களுக்காகத் தாங்கள் ஒரு முன்மாதிரியான மனிதனாக வாழவேண்டும் என்று கூட நினைக்கின்றனர். வாழவும் செய்கின்றனர். இது எப்படி முடியும்? ஆனால்……. ஆனால் …… இவர்களால் அவற்றை வெகு இயல்பாகச் செய்ய முடிகிறது. இது தான் வாழ்க்கைமுறை என ஏற்றுக்கொண்டு எந்தவிதமான மன வருத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் சந்தோஷமாகவும் இருக்கின்றனர். வருவனவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து நியாயமான முறையில் வெளிவருவதைப் பற்றியே யோசிக்கின்றனர்.

அவள் எண்ணம் கரவீரபுரத்தின் சிறைச்சாலையில் மனம் ஒப்பி அடைபட்ட ஆசாரியர்களை நினைத்தது. தங்கள் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக மனம் ஒப்பிச் சிறையில் அன்றோ அடைபட்டனர்?? அதிலிருந்து தப்ப எண்ணவே இல்லை. நம் பெரியப்பா ஸ்ரீகாலவர் தரும் பரிசுகளையும், விசேஷ வசதிகளையும், ஆடம்பர வாழ்க்கையையும் விட அந்தச் சிறைச்சாலையே மேன்மை எனக் கருதிச் சென்றார்களே! இந்த தர்மம், தர்மம் எனச் சொல்கின்றனரே, அது என்ன அவ்வளவு உயர்வான ஒன்றா? ம்ம்ம்ம்?? ஆம், ஆம் அப்படித்தான் இருக்கவேண்டும். இப்போது நான் வந்து வாழும் இந்த உலகமே விசித்திரமாக உள்ளது. இந்தக்கண்ணனை நான் தான் கொலைகாரன் என்கிறேன். ஆனால் இங்கேயோ அவனை மாபெரும் ரக்ஷகனாகப் பார்க்கின்றனரே. அவனிடம் எதுவோ ஒன்று இருக்கிறது. அது அனைவரையும் அவன் பால் ஈர்க்கிறது. என்னவென்று தான் புரியவில்லை. ம்ம்ம்ம்ம்ம்??

கரவீரபுரத்தை ஜெயித்த கண்ணன் அதைத் தனக்குக் கீழ்க் கொண்டு வந்து தான் ஆட்சி செய்யவில்லையே! அங்கேயே அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அடுத்த தகுதியான நபர் ஸ்ரீகாலவனின் ஒரே மகனான ஷக்ரதேவனே எனக் கருதி அவனிடம் அல்லவோ ஒப்படைத்தான். அவனுக்கல்லவோ பட்டாபிஷேஹம் செய்து வைத்தான்! அவ்வளவு ஏன்? அங்கே இருந்திருந்தால் நான் ராணி பத்மாவதிக்கு ஒரு தாசியாக அடிமையாக இருந்திருக்கவேண்டும். ஏற்கெனவே அவளுக்கு நான் செய்த கொடுமைகளுக்காக பழி தீர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்தக் கண்ணன் வந்தல்லவோ என்னைக் காத்தான்! அங்கிருந்து என்னை வெளியே கொண்டு வந்தது இவன் அன்றோ. இல்லை எனில் பத்மாவதியால் பழிவாங்கப் பட்டுச் சீரழிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பேனோ? ம்ஹும், அதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி எதுவும் நடக்கும் முன்னர் என்னை நானே அழித்துக்கொண்டிருக்க மாட்டேனா?

ஷாயிபாவின் சிந்தனைகள் திரிவக்கரையின் வரவால் தடைப்பட்டது. அவள் கைகளில் ஒரு பெரிய தாம்பாளத்தை ஏந்திக்கொண்டு இருந்தாள். அதில் நிறைய இனிப்பு வகைகளும், விலை மதிக்க முடியாக் கற்கள் பதிக்கப் பட்ட ஆபரணங்களும் காணப்பட்டன. அவற்றை ஷாயிபாவிடம் நீட்டி திரிவக்கரை,”ஷாயிபாவுக்கு வாழ்த்துகள். தேவகி அம்மாவின் ஆசிகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக! தேவகி அம்மா இந்தப்பரிசுகளை உனக்காக அனுப்பி உள்ளார்கள். இப்போது தான் நீயும் ஷ்வேதகேதுவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாய் நிச்சயம் பண்ணி இருப்பது அம்மாவுக்கும் மற்ற அந்தப்புரப் பெண்களுக்கும் தெரிய வந்தது. தேவகி அம்மாவுக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி. தன் மகிழ்ச்சியை உன்னிடம் வெளிப்படுத்தச் சொன்னார்கள்.”

“நான் ஷ்வேதகேதுவைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாய் யார் சொன்னார்கள்?” ஆத்திரம் பொங்கக் கேட்டாள் ஷாயிபா.

“கண்ணன் தான் கூறினான்.”

“கண்ணன், கண்ணன், கண்ணன், எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் கண்ணனைப் பற்றியே பேச்சு! அவன் யார் என் திருமணம் பற்றி முடிவு செய்ய? நான் ஷ்வேதகேதுவைத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை. என்னை இந்த மாதிரி ஒரு கல்யாணத்தில் தள்ளி விரட்ட நினைக்கிறானா அந்தக் கிருஷ்ணன்! யாரிடம் இந்த வேலை! நான் அவனை வெறுக்கிறேன். “ கத்தினாள் ஷாயிபா.

திரிவக்கரைக்கும் கோபம் அளவுக்கு மீறி வந்தது. “இதோ பார் ஷாயிபா, உன்னுடைய இந்தப் பிதற்றல்களைக் கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்துவிட்டது.” எல்லை மீறிய கோபத்தை திரிவக்கரையால் கட்டுப்படுத்த இயலவில்லை. “நான் சொல்வதைக் கேள் ஷாயிபா. இத்தனை நாட்களாய் உன்னுடைய சீறல்களையும், வசைமொழிகளையும், இகழ்ச்சியான சொற்களையும் கஷ்டப்பட்டுப் பொறுத்துக்கொண்டிருந்தேன். நீ ஒரு குழந்தை, கோபமான குழந்தை என்றே எண்ணினேன். ஆனால்……. ஆனால்……….வெகுநாட்கள் நீ உன்னை என்னிடமிருந்து மறைக்க இயலாது. நீ ஒரு அழகான பெண். இளம்பெண். அதை மறக்காதே. உன் மனம் என்ன சொல்கிறது என்பதை நான் புரிந்து கொண்டுவிட்டேன். நீயும் அதை ஒத்துக்கொண்டு, மேற்கொண்டு ஆவதைப் பார். அவ்வளவு தான் சொல்வேன். அதுதான் உனக்கும் நல்லது.” திடீரென எழுந்த கோபத்தில் திரிவக்கரை பல்லைக் கடித்துக் கோபத்தை அடக்கியவண்ணம் ஷாயிபாவைப் பார்த்துச் சொன்னாள். “நீ ஷ்வேதகேதுவைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஏனெனில் நீ கண்ணன் உன்னைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என நினைக்கிறாய்.” அடித்தொண்டையில் சீறினாள் திரிவக்கரை.

ஷாயிபாவிற்குப் பேச்சே வரவில்லை.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் எண் 62 படித்து விட்டேன்
அடடே !கதை இப்படி போகிறதா ;கண்ணன் ஷாயிபாவை அப்படி நினைக்கவே இல்லையே