Sunday, March 6, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

ப்ருஹத்பாலனும் அவன் நண்பர்களும் இந்த எதிர்பாராத வேண்டுகோளினால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஒருங்கே அடைந்தனர். பெரியவர்களுக்கோ ஒரு மாபெரும் பிரச்னையை சர்வசாதாரணமாகக் கண்ணன் தீர்த்து வைத்ததை நினைத்து ஆச்சரியமும், வியப்பும் ஏற்பட்டது. ஆனால் அக்ரூரருக்கோ, ப்ருஹத்பாலனை யுவராஜாவாக ஆக்குவதில் மதுராவிற்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை என்பது நன்கு புரிந்திருந்ததால் கண்ணனின் இந்தக் கோரிக்கை ஆச்சரியத்தை விட உள்ளூரக் கொஞ்சம் கவலையை அளித்தது. ஆனாலும் கண்ணனும் இதைக் குறித்து யோசித்திருப்பான் என்று தன் சந்தேகத்தை அடக்கிக்கொண்டார். கண்ணன் மேலே பேச ஆரம்பிக்க அனைவரும் கேட்டனர்.

“ஆகவே மன்னா, ப்ருஹத்பாலன் யுவராஜா ஆனதும், பீஷ்மகனுக்குச் செய்தி அனுப்புங்கள். ப்ருஹத்பாலனையும் சுயம்வரத்திற்கு அழைக்கவேண்டும் என்பதை வலியுறுத்துங்கள். அப்படியும் அவர்கள் அனுப்பவில்லை எனில் நம்மால் இந்த அவமானத்தைச் சகிக்க முடியாது என்பதைத் தெரிவிப்போம். அவமானத்திற்குப் பழி வாங்கி அதைத் துடைப்போம்.”

“ஆனால் குண்டினாபுரத்தின் மேல் படை எடுப்பதில் என்ன லாபம் நமக்கு?” வசுதேவருக்குச் சந்தேகம்.

“அவமானங்களைச் சகிக்க முடியவில்லை எனில் படை எடுப்பு ஒன்றே ஒரே வழி!”தளபதி ஷங்கு கூறினான்.

சுயம்வரத்தில் படை எடுத்துப் பெண்ணைத் தூக்கி வருவது அரச குலத்தினருக்குப் புதிய விஷயமில்லையே? குரு வம்சத்து பீஷ்ம பிதாமகர், தர்மத்தின் உருவம் என்று போற்றப் படுபவர், தன் சகோதரனுக்காக, காசி தேசத்து அரசனின் மூன்று மகள்களையும் தூக்கி வரவில்லையா?” இது சாத்யகி கூறினான்.

“அதெல்லாம் சரி, ஜராசந்தனின் படைகள் அதற்குள் நம்மைச் சூழ்ந்து கொள்ளாமல் இருக்கவேண்டுமே! மேலும் சுயம்வரத்தில் பெண்ணைத் தூக்கி வந்தாலும் ஜராசந்தனுக்குக் கோபம் ஏற்படுமே!” உக்ரசேனர் கவலை கொண்டார். ப்ருஹத்பாலனுக்கு முகம் தொங்கிப் போனது. அதைக் கவனித்த கண்ணன், நிதானமாக, “ சகோதரர் ப்ருஹத்பாலர் சுயம்வரத்தில் மணப்பெண்ணைத் தூக்கி வந்தாரெனில் ஜராசந்தனின் கெளரவமும், பீஷ்மகனின் கெளரவமும் பங்கமடையும். அதில் சந்தேகமே இல்லை!” என்றான்.
விகத்ருவுக்கோ, “ப்ருஹத்பாலனால் பெண்ணைத் தூக்க முடியவில்லை எனில்?” கவலை பிறந்தது.

“நாம் அனைவரும் ஒற்றுமையாக நம் உயிரைப்பொருட்டாக மதிக்காமல் முயன்றால் நம்மால் இது இயலக் கூடியதே!” கண்ணன் திட்டவட்டமாய்க் கூறினான். “ஆனால் அதற்கு முன்னர் நம் சகோதரர் ப்ருஹத்பாலனும் , அவர் நண்பர்களும் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் நடத்தப்படும் வேகமாய் ரதம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். வரப் போகும் ரதப் போட்டியும் இப்படி நடக்கப் போகும் ஒரு யுத்தத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வகையில் அமையும்.” என்றான் கண்ணன்.

“நீ என்ன செய்யப் போகிறாய்?” ப்ருஹத்பாலன் கண்ணனைக் கேட்டான்.

“உத்தவன் உன்னோடு கட்டாயம் வருவான். பெரிய அண்ணன் பலராமனும் வருவான். ஆனால் நான் இப்படி ஒரு பெண்ணை அவள் விருப்பத்திற்கு விரோதமாய் அவள் விருப்பம் தெரியாமல் தூக்கி வருவதில் தர்மத்திற்கு விரோதமாய்ச் செயல்படவேண்டுமே என யோசிக்கிறேன். ஆனால் யுத்தம் என்று வந்துவிட்டால், ப்ருஹத்பாலன் விரும்பினான் எனில் அவன் பக்கம் நின்று என் உயிரைக் கொடுத்துப் போராடுவேன்.” கண்ணன் கூறினான்.

அதோடு ஆலோசனைகள் முடிவடைந்து அனைவரும் கிளம்ப, ப்ருஹத்பாலனுக்கோ திடீரெனத் தன் முன்னர் நின்ற மாபெரும் பொறுப்பும், அதன் விளைவாய் ஏற்படப் போகும் யுத்தமும் நினைவில் வர, அவன் திடுக்கிட்டான். ஆஹா, இந்தப் போட்டியில் கலந்து கொண்டால் நாம் வெற்றி பெறுவோமா? வெற்றி பெறாவிட்டாலும் மணப்பெண்ணைத் தூக்கித் தான் வரமுடியுமா என்னால்? ஒருவேளை விகத்ரு சொன்னது போல் நான் தோற்றால்?” ஜராசந்தன் நம்மைச் சும்மா விடமாட்டானே! பாவி, மஹாபாவி, இந்தக் கிருஷ்ணன் ஒரு மாபெரும் இக்கட்டில் அல்லவோ நம்மை மாட்டிவிட்டு விட்டான்.வேகமாய்த் தன் தாய் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் ப்ருஹத்பாலன்.

அவர்களின் இருப்பிடம் சென்று கொண்டிருக்கையில் ஷ்வேதகேது கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவ கிருஷ்ணா! இளவரசி ருக்மிணியை ப்ருஹத்பாலன் தூக்கி வந்தாலும் அவள் அவனை மணக்க மாட்டாள்.” என்றான்.

“ஓ, அது ஒன்றுமில்லை குருதேவா! ப்ருஹத்பாலன் ருக்மிணியைத் தூக்கி வந்ததுமே அவள் சமாதானம் அடைந்துவிடுவாள். அவனை மணந்து கொள்ளவும் செய்வாள். இவ்வுலகில் சுயம்வரத்தில் அநேகமான இளவரசிகள் இப்படித் தான் தூக்கி எடுத்து வரப்பட்டு அரசனையோ, அரசகுமாரனையோ மணந்து பின்னர் செளக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழ்க்கை நடத்துகின்றனர்.” கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே கூறினான்.

ஷ்வேதகேது விடாமல், “ஆனால், நீ? உனக்கு இஷ்டமில்லையா?”

“பலவந்தமாய் ஒரு பெண்ணை அவள் விருப்பம் தெரியாமல் தூக்கி வந்து மணந்து கொண்டு மனைவியாக்கிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை.” என்று முடித்துவிட்டான் கிருஷ்ணன்.

3 comments:

priya.r said...

50 வது அத்தியாயத்தையும் படித்து முடித்து விட்டேன்

பதிவுக்கு நன்றி கீதாம்மா

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் கணக்கில் இது 51 என்று காட்டுகிறது?!

இது என்ன ! கண்ணனின் செயல் வியப்பாக இருக்கிறதே
என் இப்படி ருக்மணியை புறக்கணிக்கிறான் !
சரி அடுத்த பகுதிக்கு செல்லுவோம் !

sambasivam6geetha said...

ருக்மிணியைப் புறக்கணிக்கவில்லை. அவளின் தனிப்பட்ட விருப்பம் தெரியாமல் அவளை எவ்வாறு மணப்பது என யோசிக்கிறான் கண்ணன். எதற்கும் ஒரு ஆதாரம் வேண்டுமல்லவா? எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ருக்மிணியைத் தூக்கி வந்தால் அபவாதம் தானே மிஞ்சும்?

sambasivam6geetha said...

ஹிஹிஹி, எனக்கு 55 பதிவுகள் கணக்கிலே வருது! :)))))